Arts

அழைப்பிதழ்

July 26, 2025 | ஆவூரான்

மேசையில் பல கொண்டாட்ட நிகழ்வுகளின் அழைப்பிதழ்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. நாளை மறுதினம் நடக்க இருக்கும் பூப்புனித நீராட்டு விழா. அதற்கான ஆயத்தங்கள் எங்கள் வீட்டிலும் தொடங்கி விட்டது.

இந்த நிகழ்வு மிகவும் நெருங்கிய நண்பரின் பிள்ளைகளுக்கு இல்லை. ஒரு நாளும் வீடுவாசலுக்கு வந்தும் போனவர்கள் இல்லை . இது மண்டபத்துக்கு மட்டும் நடக்கும் விழாவுக்கு அழைக்கப்பட்டவர்கள்.

நெருங்கிய நண்பரின் பிள்ளைக்கோ அல்லது உறவினருக்கோ என்றால் அது

வேற மாதிரி ( வேற மாரி)

“இஞ்சருங்ககோ”

“இஞ்சருங்ககோ”

ஐயோ மனிசி கூப்பிட்டிட்டுப் போட்டாள்,,,,,

இல்லை …. இல்லை போட்டா

( கொஞ்சம் இருங்கோ வாறன்)

இந்த “இஞ்சருங்கோ” வுக்கு என்ன அர்த்தம் எண்டு விளங்கவில்லை .

இது ஒரு வித்தியாசமான ரிதத்தில ஒரு வித ராகமாக இருக்குது. இவ்வளவு நாளும் கூப்பிடும் ஓசை நயம் இப்ப கூப்பிட்டதில இல்லை …..

அவள் கூப்பிட்ட ஒரு நிமிடத்திலிருந்து பல அகராதிகள் எல்லாம் ஓடி

மனத்திரையில் அர்த்தம் தேடியும் கண்டு பிடிக்க முடியாமல்

இளையராஜாவை அழைத்து அவள் கூப்பிட்ட ரிதத்திற்குப் பாடிக் கொண்டு அவள் அருகில் போனேன்.

“இஞ்சருங்கோ இந்தச் சாறிதான் சாமத்திய வீட்டுக்குக் கட்டப் போகிறேன். 

இந்தத் தாவணியைச் சுருக்கி மடிக்க வேண்டும். உதவி செய்யுங்கோ”

கல்யாணம் கட்டிய புதிதில் மனைவி சாறி கட்டும்போது நான் அறைக்குள்ளே நிற்கக் கூடாது. இரண்டு பிள்ளைகள் பிறந்து வளர்ந்து, அதுகள் யூனி போகுதுகள் என்றால் மனைவிமார் கணவன்மாரை வெருட்டி ஆளுறதில இலங்கை மனைவிமார் அதி புத்திசாலிகள்தான். இது என் அனுபவம். அதால நான் இப்ப அடங்கித்தான் போறனான். வடிவா பிடியுங்கோ சாறி வழுவிப் போகுது. இனி நீங்க தான் அயன் பண்ண வேணும்.

9.30க்கு தண்ணி வார்ப்பு 10.30க்கு பிள்ளை மண்டபத்துக்கு வந்திடும். சரியான நேரத்துக்குப் போகவே வேண்டுமாம். எல்லாத் திட்டங்களும் இரவு சொல்லிப்ப போட்டுத்தான் உறங்கப் போனாள்.
விடியற் காலை தாயும் மகளும் எழும்பிக் காலைக் கடனை முடிக்க மனைவி

என்னைத்தான் தேநீர் போடச் சொன்னா. தேநீர் போட்டதும் தலைக்கு டை (மை) அடிச்சு விடச் சொன்னா. அவா கதிரையில குந்திக் கொண்டிருக்க ஒவ்வொரு கோடுகோடாக எடுத்து கையில கையுறை போட்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பூசி விட வேண்டும். அவவுக்கு பூசி முடிய என்னையும் வைக்கச்  சொல்லுவா?

எனக்குத்தானே 55 வயதைத் தாண்டிப் போச்சு. எனக்கு வேண்டாம் என்றால் தன்ர நண்பிகளின் கணவன்மார் மீசைக்கும் தலைக்கும் டை அடித்து எப்படி வருகிறார்கள். நீங்களும் அடித்தால்தானே சனம் என்னையும் சோடியாகப் பார்க்குங்களாம்.

மனுசியும் குளித்து முடித்து வந்து விட்டா.

சாறி கட்டத் தொடங்கி தாவணிக்கு ஊசியும் குத்திப்போட்டு, நான் தலைக்கு டையும் வைத்து ஊறிய பின்பு நான் குளித்து முடிய, பொடியனும் குளிக்கப்போய்விட்டான்.

நான் சும்மா எட்டிப் பார்த்தேன். மனிசி இன்னமும் கண்ணாடிக்குப் பக்கத்திலதான் நின்று கொண்டிருந்தாள்.

பெடியனும், பெட்டையும் காலைச் சாப்பாடு வேண்டும் என்றார்கள்,

முட்டையை உடைத்து ஊற்றி, பாண் துண்டுகளை முட்டை மேலே வைத்து மிளகு தூளும்,உப்பும் தூவிப் போட்டு ரீ உடன் கொடுத்து விட்டு, முட்டை மணம் போகக் கையைக் களுவி விட்டு, வேட்டியை கட்டினேன். இனி சங்கிலி,

மோதிரம், கைச் சங்கிலி எல்லாம் போட வேண்டும் என்று என்னைக் கட்டாயப்படுத்திப் போட வைச்சுட்டா.

இவற்றைப் போட்டுக் கொண்டு போனால்தான் மற்றவர்கள் எங்களைப்

பார்ப்பார்களாம், மதிப்பார்களாம்.

நான் இப்போது தயாராக இருக்கிறேன், காரையும் போய் ஸ்ரார்ற் செய்து

ஏசியையும் போட்டு நீண்ட நேரமாக குந்திக் கொண்டிருக்கிறேன். மனைவியும் மகளும் வந்தபாடில்லை .

கணநாதன் ஐயா எழுதிய “ நிம்மதியைத் தேடி” என்ற சிறுகதைப் புத்தகம்

காரினுள்தான் இருந்தது. அதை எடுத்து வாசித்தேன்.

முதலாவது பயணக்கதை சுவாரசியமாக இருந்தது. அதோடு என்

நினைவுகளும் கூடப்போகும்போது மகள் காரில் வந்து ஏறி விட்டாள்.

இனித் தாய்க் கிழவி வரும் என்று பார்த்தால்

“வீட்டைப் பூட்டவோ போன் எடுக்கவோ உதவலாம் அல்லே … வந்து காறில்

ஏறி இருந்திட்டியள்.”

“சிவனே மனைவிக்கு நீ பாதி உடல் கொடுத்து எங்களை பாவியாக்கி

விட்டாயே.”

நான் கதவையும் பூட்டி, போனையும் எடுத்து, காரையும் ஓட்டிப்போய்

மண்டபத்தின் உள்ளே போனால் அங்கொன்றும் இங்கொன்றுமாய்

இருக்கைகளில் சிலர் மட்டும் இருந்தனர். நான் மனைவியை ஒரு பார்வை

பார்க்க மேசையில் இருந்த மிக்சர் கோப்பையை என் அருகில் தள்ளிவிட்டு எடுத்துச் சாப்பிடச் சொல்லி கண்ணால் பேசினாள். உடனே எதுவும் பேசாமல் சாப்பிட்டேன்.

55 வயதானால் மனைவி சொல்லைக் கேட்கணுமாம்.

சாமத்தியப்பட்ட பிள்ளை லீமோ வாகனத்தில் இருந்து சிறுமிகள் பலர்

சின்ன விளக்குகளோடு முன்னே வர பிள்ளை மெதுவாக நடந்து மேடைக்கு வர புஸ்வானம் இரண்டு பக்கத்திலும் மேலெழும்பி அடங்கி முடிய மேடையில் பிள்ளை நிற்க ஆறு சோடிகள் போய் ஆராத்தி எடுத்தனர். சிலர்

ஆராத்தித் தட்டத்தை இடமும் வலமுமாக இழுப்பதையும் ஒருவர் மேலையும் மற்றவர் கீழே இழுப்பதையும் பார்க்க “ஐயோ என்ன இது

நாம ஒரு கொம்பனி தொடங்கினால் ஆராத்துவது எப்படி என்று ஒரு பயிற்சி நிறுவனத்தை நடத்தலாம்போல. காசும் பார்க்கலாம்.” மனம் கணக்குப் போட்டுது.

ஏன் ஆண்கள் கூட ஆராத்தி எடுக்கலாமே , இது சம்பந்தமாக நானும்

நண்பர்களும் பேசிப் பார்த்தோம். இதை ஒரு விவாதமாகப் பேசலாம் என்று முற்பட்டபோது அப்போதும் மனைவி என்னைக் கண்களால் பேச

எத்தனித்ததும் நான் அடங்கி விட்டேன்.ஏன் என்றால் 55 வயதை தாண்டிய பின்பு எல்லாம் அடக்கி வாசிக்க வேணுமாம்.

சாப்பாட்டுக்கு ஒரு வரிசையும் போட்டோ எடுக்க ஒரு வரிசையும்

போகிறபோது சாப்பிடுவம் என்று நானும் மகளும் போய் நிற்க, விழாவுக்கு வந்து மேசையில் இருந்தவர்களில் சிலர் மண்டபத்தின் வாசலில் மலரால் அலங்காரம் செய்யப்பட்ட வளைவுக்கு முன்னால் நின்று போட்டோ எடுக்கத் தொடங்கி விட்டார்கள். என்ர மனைவியும், கவிதாவும்,தயாக்காவும் சேர்ந்து எழுந்து மண்டபத்தில் போய் நின்று ஒருவரை ஒருவர் மாறி மாறிப் போட்டோ எடுக்கத் தொடங்கினர். என் மனைவி என்னைப் பார்க்கவே எனக்கு விளங்கி விட்டது.

“ஐயோ நான் போட்டோ எடுக்க வேணும். அதை உடனே அவர்களுக்குக் காட்ட வேணும்”

அப்படி எடுத்திருக்கலாம், போனைச் சரியாமல் எடுக்க வேணும், கால்

தெரியவில்லை , சாறி வழுகி இருக்கு சொல்லியிருக்கலாமே ” என்று ஆயிரம் காரணம். “ உன்ர புரியனுக்கு போட்டோ எடுக்கத் தெரியாது என்று தயா அக்கா சொல்ல நான் முறைத்துப் பார்க்க என்னதான் நடக்குமோ.

போய்ப் போட்டோவும் எடுத்தாச்சு.

மேடையில் சாமத்திய பிள்ளையோடு படம் எடுக்கப் போக மனைவி யாரைத் தேடுறா என்று தெரியுமோ. தன்ர போனிலையும் போட்டோ எடுக்கத்தான்.

போட்டோ எடுக்க எவ்வளவு விலையுயர்ந்த கமராக்களை வாங்கி

அதற்காகவே படித்து எத்தனையோ விதமாகப் போட்டோ எடுக்கிறார்கள்.

புகைப்படக் கலை (கலைஞர்கள்) என்று எவ்வளவு மரியாதையாக ஒரு

தொழிலாக இருந்து வந்த போட்டோ எடுப்பதை இந்தப் போன் வந்த பின்னால் இந்தச் சனம் படுகிறபாடு. போனைக் கண்டு பிடிச்சவன் இந்தக் கமராவை அதில் வைக்காமல் இருந்திருக்கலாம். போனுக்குள் கமரா இருக்கிறதால எவ்வளவு சீர் கேடுகளும் நடக்குது.

“ இஞ்சருங்கோ …. என்ன யோசிக்கிறீர்கள்.? வாங்கோ சாப்பிடுவம்.

சாப்பாட்டைக் கொண்டு வந்து வைத்ததும் அதையும் படம் எடுக்கிறார்.

நான் தலையில் கை வைக்கப் போக ஒரு பார்வை பார்த்தாள். காளி அம்மன்கோலம் வந்து போனது. மெளனமாகவே எல்லோரும் வீட்டுக்கு வந்தோம்.

அப்பாடா ஒரு பூப்புனித நீராட்டுவிழா முடிந்து விட்டது.

மரக்கறிச் சாப்பாடு ஒரு சோம்பலை தர வீட்டுக்குள்ள போய் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று போக “ இஞ்சருங்கோ இந்தச் சாறியின் ஊசியை களட்டி விடுங்கோ…..

”வாற சனிக்கிழமை ஆற்ற கலியாணவீடு என்று தெரியுமல்லோ”.

”கலியாண வீடா……..?”

ஆவூரான்


78 பார்வைகள்

About the Author

ஆவூரான்

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்