Arts

இரவும்  கடலும்

July 26, 2025 | பிரணேவ் கெளசிகன்

நான் எடுத்த முடிவுகளில் எல்லாம் இதுவே முட்டாள்தனமான முடிவு என்று நினைக்கின்றேன். என்னை நச்சரிக்கும் சகோதரங்கள், மச்சான், மச்சாளுடன் ஒரு கடற்பயணமா? அதுவும் 2 நாட்களா?  எனக்கு இப்பொழுதே பயண நோய் (sea sickness) வந்துவிட்டது. இப்படி இரண்டு நாட்கள் எப்படிப் போகப் போகிறது?’ என்று யோசித்தேன்

ஒரு பகற்பொழுது சலிப்புடனும் எரிச்சலுடனும் கடந்தது. இராப்பொழுதில் எனது மாமா என்னை வெளியே கூப்பிட்டார். அலுப்புடன் சென்றேன். “நான் உனக்கு நட்சத்திரங்களைக் காட்டப் போகிறேன்” என்றார். நட்சத்திரமா? எனக்குத் தெரியும்தானே என்று நினைத்துக் கொண்டே வெளியே போனேன்.

நான் மேலே பார்த்தேன். வானம் இவ்வளவு அழகானது என்று ஏன் எனக்கு முதலே தெரியவில்லை என்று யோசித்தேன். மாமா எனக்கு ஒரு நட்சத்திரக் கூட்டத்தைக் காட்டி “இது தான் பெருங்கரடி” என்று சொன்னார். “நட்சத்திரக்கூட்டத்தின் வரிசையில் பெருங்கரடி மூன்றாம் இடத்தைப் பிடிக்கிறது. இதில் 22 நட்சத்திரங்களிற்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. நான் உனக்குச் சொல்லப் போகின்ற அடுத்த நட்சத்திரக் கூட்டம் அருண்” என்று தொடரும் போது. “மாமா” என்றேன் “நான் அருண் இல்லை, வருண், அருண் மகேஷ் உடன் விளையாடிக் கொண்டிருக்கிறான்” என்று கூறினேன். சரி என்று சொல்லிக்கொண்டே அடுத்த நட்சத்திரக்கூட்டத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார். “அந்த நட்சத்திரக்கூட்டம்தான் சிறுகரடி. சிறுகரடியில் ஐந்து நட்சத்திரங்களுக்குத்தான் பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரிசையில் 56 ஆவது இடத்தை பிடித்து வைத்து உள்ளது” என்று மாமா சொல்லி முடிக்க நானும் வாயை “ஆ” என்று திறந்து கொட்டாவி விடவும் நேரம் சரியாக இருந்தது. “இன்று இது போதும் நீ படுக்கப் போ” என்று மாமா சொன்னார். அட இவ்வளவு சுவாரஸ்யத்தையும் எனது ஒரு கொட்டாவி கெடுத்துவிட்டதே என நினைத்துக்கொண்டு அறைக்குச் சென்றேன்.

அடுத்த நாளும் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாது கழிந்தது. இரவும் வந்தது. மிகவும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் மாமாவிடம் ஓடினேன். “நட்சத்திரம் பார்ப்போமா?” என்று கேட்டேன். நேற்று “நட்சத்திரமா எனக்கு தெரியும்தானே” என்று எண்ணியதை நினைக்கும் போது எனக்கே சிரிப்பாக இருந்தது. மாமாவும் “ஓ உனக்கு நட்சத்திரக் கூட்டத்தைப் பார்ப்பதில் அவ்வளவு ஆர்வமா?” என்று கூறி என்னை அழைத்துச் சென்றார்.

“அதோ தெரிகிறது பார், அதுதான் பெருநாய். தெற்குத் திசையில் மிகவும் தெளிவாகத் தெரிகிறது” என்று சொல்லும் போது அவரது முகம் மாறியது.

“கப்பல் ஆடியது, காற்று வேகமாக வீசியது, அறிவிப்பும் வந்தது, சூறாவளி போல் இருக்கிறது. எல்லோரும் கப்பலின் உள்ளே வாருங்கள், வெளியே நிற்பது ஆபத்தானது என்று எச்சரிக்கை வந்து கொண்டே இருந்தது. அத்துடன் எச்சரிக்கை மணியும் அடித்தது. அபாய விளக்கும் மின்னியது. எம்மைப் பயம் சூழ்ந்து கொண்டது. பல பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எமக்கு பாதுகாப்புப் பற்றி அறிவுரைகளை வழங்கினார்கள். எனக்கு மிகவும் பயமாக இருந்தது”“ஐயோ!! நாம் திரும்ப வீட்டிற்குப்  போக முடியாதா ? கப்பலுடன் மூழ்கி விடுவோமோ? Titanic மாதிரி எம் கப்பலும் உடைந்து விடுமா? பிறகு எமது கதையும் படமாக வருமா? என்றெல்லாம் யோசித்துக் கொண்டேயிருந்தேன். அப்போது அம்மா “கடவுளைக் கும்பிடு எல்லாம் சரி ஆகும்” என்று சொன்னார்.  நானும் கடவுளைக் கும்பிட்டேன். அப்போது கப்பலின் ஆட்டம் குறைகிறது போல இருக்கிறது என்று யோசிக்க முதலே கப்பல் மீண்டும் ஆடத் தொடங்கியது. Life jacket ஐயும்  Raft ஐயும் தந்து கப்பலில் இருந்து இறக்கி விடுவார்களோ என்று யோசித்தேன்” என்று மாமா சொல்லும் போது “மாமா கடைசில நீங்கள் எப்படி வீட்டிற்கு வந்தீர்கள்”?  என்று குறுக்கிட்டேன்.

“அதைத்தான் சொல்லப் போகிறேன்” என்று தொடர்ந்து கூறினார் மாமா. “இந்தப் பெருநாய் நட்சத்திரக்கூட்டத்தைப் பார்த்து என் அப்பா சொன்னார் “நாம் இப்போது தெற்குத் திசை நோக்கிப் போகிறோம். பிழையான வழி போல தெரிகிறது.” அப்போது மீண்டும் எச்சரிக்கை வந்தது. ”கப்பல் திசை மாறிப் போகிறது. ஆனால் இன்னும் சில நிமிடங்களில் காற்றின் வேகம் குறைந்து விடும். நாம் பாதுகாப்பாகத் திரும்பலாம். யாரும் பயப்பட வேண்டாம்” எனக் கூறியது. ”இதைக் கேட்டதும் நாம் வீடு செல்ல முடியும் என்ற நம்பிக்கை வந்தது. அதற்குப் பின்னர் காற்றின் வேகமும் குறைந்தது. நாம் பத்திரமாக வீடு சென்றோம்.  நான் எப்போவெல்லாம் பெருநாயைப் பார்க்கிறேனோ அப்போவெல்லாம் எனக்கு இந்தச் சம்பவம்தான் நினைவுக்கு வரும்” என்று மாமா சொல்லி முடித்தார்.

எனக்கு வியப்பாக இருந்தது. “இந்த நட்சத்திரக்கூட்டத்தை வைத்து திசைகளை சரியாகச் சொல்ல முடியுமா?” என்று மிகவும் வியப்புடன் மாமாவிடம்  கேட்டேன். “திசை மட்டுமல்ல! நேரத்தையும் ஏன் பருவ காலத்தையும் கூடக் கணிக்க முடியும்” என்று சொன்னார். நான் மேலும் வியப்படைந்தேன். மாமாவின் நீண்ட உரையாடலிற்குப் பின் இருவரும் தூங்கச் சென்றோம். படுக்கையில் மாமாவின் கதைகளும் நட்சத்திரத்தின் அற்புதங்களும் என்னைச் சுற்றிச்சுற்றி வந்தன. நான் கட்டிலில் இருக்கிறேனா அல்லது வானில் நட்சத்திரத்துக்கு நடுவில் இருக்கிறேனா என யோசித்தேன். நட்சத்திரங்களைப் பற்றி இன்னும் நிறையத் தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்து கொண்டே அப்படியே தூங்கி விட்டேன்.

என் கனவிலும் இதே நட்சத்திரமும் கப்பல் கடலில் தத்தளிப்பதுவும்தான் வந்தது. ஆனால் நான் சென்ற கப்பலை spider man வந்து காப்பாற்றினார். Spider-Man வந்தது என் கனவில் ஒரு சூப்பர் ஹீரோ சாகசம் போல இருந்தது. ஆனாலும் கண் விழிக்கும்போது, கப்பல் கரையை அடைந்திருந்தது!. எனது கப்பல் பயணமும் மிகவும் சந்தோசமாக முடிந்தது.

இந்தக்  கதையில் ஒரு புதிர் புதைந்துள்ளது. உங்களால் முடிந்தால்  கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்!!! 

பிரணேவ் கெளசிகன்


102 பார்வைகள்

About the Author

பிரணேவ் கெளசிகன்

One Comment

  1. திவிஷா கௌரிசங்கர் says:

    சற்றே யோசிக்க வைக்கும் கற்பனை… நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்