
“சொறி சந்திரு… நாங்கள் இத்துடன் உங்களை வேலையிலிருந்து நீக்குகின்றோம். நான் நிர்வாகத்துடன் பலமுறை பேசிப் பார்த்தேன் ஆனால் …” என்று மென்மையான குரலில் மேலாளர் சொன்னார்.
அந்த வார்த்தைகள் சத்தமின்றி விழுந்தாலும், சந்திருவின் மனதைக் கிழித்து விட்டது. அவன் மௌனமாக மேலாளரின் கண்களைப் பார்த்தான். அப்போது சில நினைவுகள் அவனைத் தழுவின – மேலாளருடன் சேர்ந்து கடுமையாக உழைத்த தருணங்கள், பாராட்டுப் பெற்ற சந்தோஷங்கள், மற்றும் எதிர்காலம் குறித்துக் கொண்டிருந்த நம்பிக்கைகள்.
இப்போது அந்த நம்பிக்கைகள் அனைத்தும் மங்கிவிட்டது. மேசையின் அப்புறம் அமர்ந்திருந்த மேலாளர் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் சந்திருவுக்கு ஒன்றும் கேட்கவில்லை. அவனது உள்ளம் வெறுமையாகி, ஒரு மூச்சு விட அவன் திரும்பியும் பார்த்தான். இங்கே அவன் பயணம் முடிந்துவிட்டது என்ற உண்மை, மெதுவாக அவன் மனதில் பதிந்தது.
ஆறு வயது சித்திரா அவன் கண் முன் வந்து சென்றாள். அவள் பள்ளிக்கூடக் கட்டணத்தை எப்படிக் கட்டப் போகிறேன் என எண்ணினான்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த பிறகு, சந்திரு மெதுவாக எழுந்தான். மனதிலிருந்த தளர்வை வெளிக்காட்டாமல் மெல்ல உரைத்தான்.
“நன்றி சார்.” என்றான். அவன் வார்த்தைகள் சளைக்காமல் வர முயற்சிக்கும்போது குரலில் ஒரு மெலிவு இருந்தது. மேலாளர் சிறிது தவித்து, ஒரு மென்மையான சிரிப்புடன் கையழுத்தினார்.
அலுவலகம் முழுவதும் சத்தமின்றி இருந்தது. சிலர் அவனைத் தொலைவிலிருந்து பார்த்தார்கள். சிலர் திரும்பிப் பார்க்கத் துணியவில்லை. தனது பையை எடுத்து வெளியே சென்றான்.
வாசல் நோக்கி நடந்தபோது, ஒரு நிமிடம் நின்று அந்த இடத்தைப் பார்த்தான். பல ஆண்டுகளாகப் பார்த்து வந்த அவனின் அலுவலகத்தின் நிழல் இன்று அவனை இரையாக்குவதுபோல் ஒரு உணர்வு. அந்த கட்டடத்தின் அடுக்கு மாடிகளும் பிரம்மாண்டமும் ஒரு பெரிய மிருகம்போல் அவன் மனதில்.
ஒரு ஆழமான மூச்சை இழுத்து, மனதைக் கொஞ்சம் உறுதியாக்கிக்கொண்டு, கதவைத் தள்ளி வெளியேறினான். சிற்றுந்தைச் சேர்ந்த பின்பு சந்திருவுக்கு சித்திராவைப் பள்ளியிலிருந்து ஏத்தவேண்டும் என்ற நினைவு வந்தது.
மாலைச் சூரியன் மெதுவாகக் கீழிறங்கிக்கொண்டிருந்தான். அங்கு ஓரளவு வெப்பமும் ஒளியும் சேர்ந்து ஒரு அமைதி நிலவியது. சந்திரு பள்ளிக்கூட வாசலுக்கு நடந்து வந்தார். கால்கள் மெதுவாக நகர்ந்தன. உள்ளம் மட்டும் பல கேள்விகளுடன் ஓடிக்கொண்டிருந்தது.
அவனது மனதில் இன்னும் வேலை இழந்த அந்த தருணம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் இப்போது அந்த எண்ணங்களை ஒதுக்கித் தள்ளிக்கொண்டு, சித்ராவைச் சந்திக்கிறேன் என்ற எண்ணம் மட்டுமே மனதைப் பிடித்திருந்தது.
வாசலிலிருந்து குழந்தைகள் பரபரப்பாக வெளியேறி ஓடிக்கொண்டிருந்தனர். சித்திரா தனது பையில் புத்தகங்களை ஒழுங்குபடுத்திக்கொண்டு வெளியே வந்தபோது, அவள் முகத்தில் அந்த நாள் முடிவின் சோர்வும், அப்பாவைக் காணும் மகிழ்ச்சியும் கலந்து இருந்தன.
“அப்பா!” என்று அவள் அழைத்தபோது, சந்திருவின் முகம் மலர்ந்தது.
“வா செல்லம்… இன்று பள்ளி எப்படி இருந்தது?” என்று மெதுவாகக் கேட்டார்.
அவள் பேச ஆரம்பித்தாள். ஆசிரியர் கற்றுக்கொடுத்தது, நண்பர்களுடன் விளையாடியது, அனைத்தையும் மூச்சு விடாமல் தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தாள்.
சந்திரு கவனமாக அவளது கைகளைப் பிடித்தான். அவளுடன் நடக்கிற போதே, உள்ளம் இன்னும் குழப்பமடைந்திருந்தது. அடுத்து என்ன செய்யலாம் எனும் எண்ணம் தொடர்ந்து மனதில் எழுந்துகொண்டே இருந்தது.
மனம் முழுதும் கனமான சுமையுடன் சிற்றுந்தை திருப்பியது. அப்போது வீதியின் ஓரத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு தொழிலாளி மேல் அவன் கவனம் திரும்பியது. ஒரு காலில் ஊன்றிக்கொண்டுவந்து கீழே கிடந்த குப்பைகளை சேகரித்து கொண்டிருந்த ஒரு மாற்றுத் திறனாளியைப் பார்த்தான்.
அந்த காட்சி சந்திருவின் உள்ளத்தில் ஏதோ ஓர் நம்பிக்கையைத் தூண்டியது. தோல்வி நிரந்தரமல்ல; முயற்சி தொடரும் வரை வாழ்க்கையில் நிச்சயம் ஒரு வழி பிறக்கும். சந்திருவுக்கும் வாழ்க்கை மாறும்.