இந்தப் பரந்த உலகம் பல இனம், மொழி, காலநிலை, கலாசாரம், பண்பாடுகளில் வேறுபாடுகளைக் கொண்டதாக அமைகிறது. இந்த அடிப்படையில் கண்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அந்தக் கண்டங்களில் ஒன்றுதான் ஆசியக் கண்டம். ஆசியக் கண்டத்தில் உள்ள அழகான சகல வளங்களும், காலநிலைகளையும், பல இன மக்களையும் கொண்ட ஒரு தீவு இலங்கையாகும். அதிலே யாழ்ப்பாணம் என்ற நகரத்தில் பல இன மக்கள் வாழ்ந்தாலும் தமிழ் மொழி பேசுபவர் அதிகமுண்டு. யாழ்ப்பாண நகரில் இயற்கை வனப்புடைய கிராமமாக கொக்குவில் அமைந்துள்ளது. எமது முதியோர்களும் பிறந்து, வளர்ந்த இடமாகவும் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
எனவே எம் பெற்றோர் பள்ளி விடுமுறைகளில், சிறப்பாக மார்கழி மாதத்தில் யாழ்ப்பாணத்தின் சிறப்புகளையும் காண்பதற்கு எம்மை அழைத்துக்கொண்டு வந்தனர். நானும் எனது தங்கையும் விமான நிலையத்திலிருந்து இறங்கியவுடன் எனது தாத்தாவும், அம்மம்மாவும் எங்களை வரவேற்க ஆவலாக நின்றனர். நாமும் ஆவலுடன் ஓடிச் சென்று அவர்களைக் கட்டி அணைத்து வாகனத்தில் ஏறி எம் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தோம். வீடு தோறும் இருந்த ஆலயங்களின் மணி ஓசை எம்மை உற்சாகத்துடன் வரவேற்று மார்கழி திருவெம்பாவை காலமானதால் சைவ ஆலயங்களில் பூசைகள் மற்றும் பாடல்கள் பக்திமயமாக ஒலித்துக்கொண்டிருந்தன.
அதிகாலை சில் என்ற அமைதியான உணர்வுடன் பல்வேறு பறவைகளின் ஒலி இசைக்கவும், ஆதவன் மெல்ல மெல்ல உதிக்கத் தொடங்கவும், மலர்கள் மொட்டு விழித்து, அவற்றையெல்லாம் கண்டு மகிழ்ந்தவண்ணம் எப்படா எங்கள் வீடு வரும் என்று ஆவலுடன் என்றுமில்லாத மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்தோம். விவசாயத்திற்கு நீர் இறைத்துக் கொண்டிருந்தமையும் அதில் சிறுவர் பெரியோர் நீராடிக் கொண்டிருந்தமையும் அற்புதமாக, புதுமையாகவும் இருந்தது.
இப்படியே அழகான காலைக் காட்சியை ரசித்து எமது வீட்டைச் சென்றடைந்தோம். அங்கும் எம்மை வரவேற்க நிறைய உறவினர், நண்பர்கள், அயலவரின் உண்மையான பாசாங்கு அற்ற உறவை வேறு எங்கும் எவருடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத உணர்வைப் பெற்றோம்.
ஓய்வெடுத்து உணவருந்திய பின் எம் அழகிய கிராமத்தைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டோம். சென்றுகொண்டிருந்த பாதை ஓரங்களில் சிறுவர்களும், முதியோர்களும் வேறுபாடு இன்றி, பல வர்ண பல உருவ, பல அளவிலான பட்டங்கள் வானை நோக்கிப் பறந்துகொண்டிருந்த என் வாழ்வில் மறக்கமுடியாத சம்பவமாக அமைகிறது. என் தங்கை துள்ளிக் குதித்து அப்பட்டங்களைப் பிடிக்க முயன்றதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இவ்வாறு நாம் மகிழ்ச்சி கொண்டிருந்த சமயம் திடீரெனப் பறை ஒலியுடன் ஒரு பேழையைச் சுமந்தபடி ஒரு கூட்டத்தினர் வருவதைக் கண்டோம். ஒருவரின் இறந்த உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்லும் நிகழ்வென்று தந்தையார் விளக்கம் தந்தார். அந்த நிகழ்வும்கூட புதுமையாக இருந்தது. மாலை நேரமானது, வீதியோரங்களில் மின் விளக்குகள் பிரகாசிக்கத் தொடங்கின. வீதியோரமாகக் குளிர் களி வண்டி இனிமையான தமிழ்ப் பாடல்களை இசைத்துக்கொண்டு வந்தது. சிறுவர்கள் ஆவலுடன் பெற்றோரிடம் கெஞ்சிக் காசை வாங்கிக்கொண்டு வண்டியை நோக்கிச் சென்றனர். நானும் எனது தங்கையும் குளிர் களி வேண்டி உண்டு மகிழ்ந்தோம். அதுமட்டுமா, விதவிதமான சிற்றுண்டிகள், உணவுகள்கூட சுவையாக, சுத்தமாக, மலிவாகக் கிடைப்பது எம்மை மகிழ்வித்தது.
இரவானதால் களைத்துப்போய் வீட்டுக்கு உறங்கச் சென்றோம். மின் விளக்கை நிறுத்தியதும் எக்கச்சக்கமான நுளம்புகள் எங்களை உறங்கவிடாமல் எம்மைக் குத்தி குத்திப் பதம் பார்த்தனர். அந்தவேளையில் எங்கள் அம்மம்மா ஒரு சட்டியில் வேப்பம் பட்டை புகையைப் போட்டு அந்த இடத்தில் வைத்தவுடன் நுளம்புகள் மறைந்தன.
மறுநாள் காலை, எமது உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றிருந்த போது அவர்களின் வாழ்க்கை நிலை ஒஸ்ரேலியாவுடன் ஒப்பிடும்போது பலவித நிலைகளில் வாழ்க்கை வசதிகள் ஏற்றத்தாழ்வுகளுடன் இருந்தது. அவர்களுக்கு எம்மால் ஆன சேவைகளைச் செய்யவேண்டும் என்ற நல்ல பண்பை வளர்த்துக்கொண்டோம்.
மேலும் பல நல்ல அனுபவங்களுடன், எம் தாய் நாட்டை பிரியமுடியாமல், யாழ்ப்பாணத்தில் மார்கழியின் எண்ணத்தை எம் மனதில் பதித்துக்கொண்டு ஒஸ்ரேலியா திரும்பினோம்.