
2025 பங்குனி 16, இளவேனில் வாசகர் முற்றம் நிகழ்ச்சி எனக்குள் எழுப்பிய கேள்விகள்தான் இந்தப் பதிவு. இதழ் 27ன் வாசகர்களது கருத்துக்களையும், அனுபவங்களையும் அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன்தான் அந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தேன். வழமையாக அனுபவப் பகிர்வினைத் தொடர்ந்து நமது சமுகத்தில் பேச விரும்பும் ஆனால் பேசப்படாத தலைப்பினைப் பற்றி பேசுவர். அது போலவே இம்முறை, mid life crisis பற்றிப் பேசினர். ஆரம்பித்தபோது, இதுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கு என்று ஆர்வம் இல்லாமல்தான் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால், மனநல மருத்துவர் தாரணி அவர்கள் கூறிய அந்த வார்த்தை என்னை இன்று வரை சிந்திக்கச் செய்கிறது.
“எங்களோட அம்மாக்களுடைய மாதவிடாய் நிறைவு (menopause) காலம் பற்றி எங்களுக்கு தெரிஞ்சே இருக்காது. எங்களோட அதைப் பற்றி கதைச்சிருக்க மாட்டினம்”
எங்கேயோ எப்போதோ எனக்குள்ளே ஒழித்து வைத்த குற்றவுணர்ச்சியைத் திரும்பத் தோண்டி எடுக்க வைத்த வார்த்தை அது. இன்று வரை எனக்குள் இருக்கும் கேள்வி, “ஏன் என்கிட்ட சொல்லல”. நான் சிறு பிள்ளைதான். ஆனால் சொல்லியிருந்தால், புரிந்து கொள்ள முடியாத வயதில்லை. இருந்தும் எனக்குச் சொல்லப்படாத இரகசியம். ஒரு பெண் பிள்ளையாக இருந்துமே மறைக்கப்பட்ட இரகசியம்.
இன்றும் எனக்கு மறக்கமுடியாத எனது அம்மாவின் அந்தக் கோப முகம். “ஏன்? நான் என்ன தப்பு செய்தேன்? ஏன் என்னை திட்டுறா? அம்மாவுக்கு இப்ப என்னைப் பிடிக்கலையோ? ஏன் எப்பவும் எரிச்சலா, கோபமா இருக்கிறா? என்னதான் இந்த மனிசிக்கு ஆச்சு?” இப்படி பல கேள்விகள் எனக்குள்ளே. இரண்டு வருடங்கள் செல்ல நான் தெரிந்துகொண்ட பதில்
“Menopause”.
2025ல் இருக்கிறோம். புதனுக்கே விண்கலம் அனுப்பியாயிற்று. இன்றும் எங்களுடைய குடும்பத்தில் மனநல பாதிப்புப் பற்றி பேசும் அளவிற்கு, சமத்துவம் பேசும் அளவிற்கு, காதலைப் பேசும் அளவிற்கு மாதவிடாய் பற்றிப் பேசுவதில்லையே. இப்ப யோசித்துப் பார்த்தாலும், என்னுடைய அம்மாவின் மாதவிடாய்க் காலமோ, அவர் pad பயன்படுத்தியதோ எனக்கு நினைவே இல்லை. அல்லது எனக்குத் தெரியாது என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். எப்படித் தெரியும்? யார் தெரியப்படுத்தியது? இந்த நிமிடம் எனக்குள்ளே குற்றவுணர்ச்சி மட்டும் தான். நான் தெரிந்துகொண்டிருக்க வேண்டும், அம்மாவிற்கு உதவியாக இருந்திருக்க வேண்டும், சமைக்க வேண்டாம், ஓய்வெடுங்கோ என்று சொல்லியிருக்க வேண்டும்.
ஒரு சாதாரண தமிழ் குடும்பத்தில் மாதவிடாய் என்பது, பெண்கள் மெளனமாகக் கடந்துசெல்லும் ஒரு விடயமாகத் தான் இன்று வரை இருக்கின்றது. மாதவிடாய் – பொதுவில் பேசக்கூடாத விடயம், பெண்கள் அசுத்தமாக அவமானாமாக உணரும் தருணம், ஆண்களுக்கு தேவையில்லாத பெண்கள் விடயம். கோவிலுக்குப் போகதே, தனியாப் படு, சாமியறைக்குள்ளே நுழையாதே, வெள்ளிப் பாத்திரத்தைத் தொடாதே….. ஏன் என்ற கேள்விகூட இல்லாமல், நாங்கள் தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்கள், மீண்டும், மீண்டும் மாதவிடாய் என்பது அசுத்தம், புனிதமின்மை என்பதை வலியுறுத்தவா? காலம் காலமாக இதைப் பார்த்தும் கேட்டும் வளரும் எங்களது குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தருவது இது பேசக்கூடாத பெண்கள் இரகசியம் என்பது தானே.
ஏன் பெற்றோர்கள் மாதவிடாய் பற்றித் தங்களது பிள்ளைகளிடம் பேசத் தயங்குகிறார்கள்? குறிப்பாக ஆண் பிள்ளைகளிடம். மாதவிடாய் பற்றிய அடிப்படை அறிவைக் கூட வழங்காமல் அறியாமையில் ஏன் எங்களது பிள்ளைகளை வளர்க்க விரும்புகிறோம்?
திடீரென தங்களது சகோதரிகள் வித்தியாசமாக நடத்தப்படுவதைப் பார்க்கும் ஆண் பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு, நாங்கள் சொல்வது என்ன. “ இது உனக்குத் தேவையில்லாதது” “ இது பெண்பிள்ளைகள் விடயம், ஆண்கள் பேசக்கூடாது” என்பதா? இது அவர்களது மனதில் என்னவாகப் பதியும் என்று எப்பொழுதாவது நாம் யோசித்திருப்போமா? இந்த மெளனமும், இரகசியமும் அவர்களிடம் புறக்கணிப்பை மட்டுமல்ல, அசெளகரியத்தினை, கிண்டலினை, சில நேரங்களில் பெண்கள் மீதான மரியாதையற்ற தன்மையினையும் உருவாக்கவல்லது. மாதவிடாய் பற்றிய சாதாரண அறிவு கூட இல்லாத ஆண்பிள்ளைகள் எப்படி ஒரு அரவணைப்பான மகனாக, நண்பனாக, கணவனாக இருக்க முடியும்.
எவ்வளவுதான் நாங்கள் முன்னேறியிருந்தாலும், ஏன் இன்றும் ஒரு padஐ அலுவலகங்களில் மேசைக்குக் கீழ் மறைத்துத்தான் வாங்குகின்றோம்? Trolleyல எல்லா சாமன்களுக்குள்ளேயும் மறைத்து வைக்கின்றோம்? ஆண் சகோதரர்களின் நடமாட்டம் இருக்கும் இடத்தில் வைத்தால் எத்தனை பேச்சுக்கள் அம்மாவிடம் வாங்குகிறோம். எதை மறைக்க நினைக்கின்றோம்? உலகத்தின் பாதி சனத்தொகை ஒவ்வொரு மாதமும் எதிர்கொள்ளும் ஒரு சாதாரண உயிரியல் சார்ந்த வாழ்க்கை முறையையா?
நாங்கள் padsஐ மறைக்கும் ஒவ்வொரு முறையும், யாரும் பார்க்கிறார்களா என்று பார்த்து பார்த்து அலமாரியிலிருந்து padஐ எடுக்கும் ஒவ்வொரு முறையும், எங்களை அறியாமலே எங்கள் அடுத்த தலைமுறையினருக்கு வலியுறுத்துவது மாதவிடாய் என்பது ஒரு சங்கடத்திற்குரிய, பேசக்கூடாத இரகசியம் என்பதைத்தான்.
எத்தனை அப்பாக்கள் சங்கோஜப்படாமல் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு pad வாங்குகிறார்கள். அல்லது எத்தனை அப்பாக்கள் பெண்கள் பூப்பெய்தியதும், அவர்களுக்குத் துணையாக, அவர்களது அச்சங்களுக்கும், கேள்விகளுக்கும் உடனிருந்து பதிலளிக்கின்றார்கள். பூப்பெய்தும் வரை பெண் பிள்ளைகள் வாழ்வில் ஒன்றி இருக்கும் அப்பா, பூப்பெய்தியதும் இலகுவில் விலகிவிடுகிறார்களே?
பெண் பிள்ளைகளோ, ஆண் பிள்ளைகளோ இதைப் பற்றிப் பேசுவது அவசியம். பெண் பிள்ளைகளுக்கு தங்களது உடலில் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களைப் பேச வேண்டும். ஆண்பிள்ளைகளுக்கு மாதாவிடாய் தருணங்களில் ஒரு பெண்ணை எவ்வாறு நடத்த வேண்டும், ஒரு பெண்ணின் ஆடையில் கறையைப் பார்த்தால் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கும் கடையில் pad வாங்கக் கற்றுக்கொடுப்போமே. இதைப் பேற்றோர்களைவிட யாரால் தெளிவாகப் புரிய வைக்கமுடியும்?