Arts

அகத்தின் அழகு முகத்தில் தெரியுமா? –  சரோஜினி ஆசீர்வாதம்

January 25, 2026 | சரோஜினி ஆசீர்வாதம்

கமலா இதை பாருங்கோ என்று 1978ம் ஆண்டு ஜூலை 4ம் திகதி பத்திரிகையை மோகன் காட்டியது  இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. 

ஆப்பிரிக்கா நாட்டில் அரசாங்க உத்தியோகம்  செய்ய விரும்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 2 வருடங்கள் வேலை பார்க்கவேண்டும். மனைவி பிள்ளைகளை அழைத்துச் செல்லலாம்.

“கமலா நீ என்ன சொல்கிறாய்?” என்று மோகன் என்று என் முகத்தை உற்று நோக்கினார்.

“அங்கு மனிதர்கள் மற்ற மனிதர்களை சாப்பிடுவார்கள், அங்கு நாம் ஏன் செல்லவேண்டும்?” 

“சீ .. எங்கட ஆக்கள் இப்பிடித்தான் கதைச்சுக்கொண்டு இருப்பினம் … ஏன் மஹாத்மா காந்தி ஆப்பிரிக்காவில் வேலை செய்தார் எண்டு நீ படித்ததில்லையா?” 

”ம்ம்ம்ம் …” 

“நீ பயப்படாதே … அங்கே நல்ல பிரிட்டிஷ் பள்ளிக்கூடம் இருக்கு … இங்க இருந்தால் பிள்ளைகள் படிக்க ஒரு ஆங்கிலப் பள்ளியும் இல்ல…. தாய் மொழியில படிச்சு இப்ப என்ன செய்யப்போறினம்? நாட்டு நிலமையும் மோசமாகிக்கொண்டு போகுது… நான் நினைக்கிறன் இது ஒரு நல்ல சந்தர்ப்பம், இதை நழுவவிட கூடாது”

நடக்கலாம், நடக்காமலும் போகலாம், அதற்கேன் நான் ஏன் இப்பவே பயப்படவேணும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றவும், “நீங்கள் நல்லா இதைப்பற்றி யோசிச்சிட்டீங்கபோல இருக்கு, அதுக்கு பிறகு எனக்கு என்ன பயம்? அந்தப் புது கண்டதையும் போய் பார்ப்பம்” என்று லேசாக சொல்லிவிட்டு புன்னகைத்தேன்.

அந்தத் தந்தி வந்து இரண்டு வாரங்களில் கிளம்பும்வரையும் இதைப் பற்றி யோசிக்கவே நேரம் இருக்கவில்லை. துணி மணிகளை அடுக்குவதும் தூள்களைத் தயாரிப்பதும் உற்றார் உறவினர் வீட்டுக்கு வருவதும் போவதுமாகக் காலம் நொடிப்பொழுதில் ஓடி மறைந்தது. அத்தோடு முதன்முதலாக விமானத்தில் செல்லும் உற்சாகமும் தொற்றிக்கொண்டதில் போய் இறங்கும்வரை  யதார்த்தத்தை நான் உணரவில்லை. 

மலாவி விமான நிலையத்தில் நாலா திசைகளிலும் உயரமான கறுப்பினத்தவர்களைப் பார்த்ததும்தான் எனக்குள் ஒருவிதமான பயம் சிறிதாக வேர் விட்டது. பின்னர் அது உடல் முழுவதும் சூழ்ந்து இறுகப் பற்றிக்கொண்டது. கண்ணீர் பொலப் பொல என வழிந்தோடியது. ஒரு சின்ன பிள்ளைபோல மோகனின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டேன். 

“மோகன் நாங்கள் திரும்பிப் போயிடலாம். எனக்கு இவர்களைப் பார்க்கப் பயமா இருக்கு. பூதம்மாதிரி இருக்கிறார்கள். இப்பிடியானவர்களோடு எப்பிடி எங்கட பிள்ளைகளை வளர்ப்பது?”

“என்ன இது சின்னப் பிள்ளை மாதிரி …. எப்பிடிப் பிள்ளை வளர்ப்பதா? நீதான் இப்படிப் பயப்படுறாய், அங்க பார் பிள்ளைகள் உற்சாகத்தோடு சூட்கேசுகளை போர்ட்டரோடு சேர்ந்து அடுக்குறார்கள்.” என்றதும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது.

“அவர்கள் என் பிள்ளைகளை கடத்தி சென்றுவிடுவார்கள்.. போய் பிள்ளைகளைக் கூப்பிடுங்கோ”

“கமலா, அகத்தின் அழகு முகத்தில் தெரியுமா என்ன? அவர்களும் எங்களைப்போலச் சாதாரண மனிதர்கள். ஏன் நீ இப்படிப் பினாத்துகிறாய்? உனக்கு என்ன நடந்தது? இதுவும் எங்கட நாட்டைப்போல இன்னொரு நாடு. அவ்வளவுதான். அமைதியா இரு. நீ இதுமாதிரி பிள்ளைகளுக்கு முன்னால் கதைக்காதே” 

மோகன் கடுமையாகக் கூறிவிட்டு முன்னே நடந்தார். கல்யாணம் ஆனதிலிருந்து அவர் பின்னால் நடப்பதைத் தவிர வேறு என்ன செய்தேன்? மலாவியிலும் அதையே செய்தேன். அங்கு எங்களுக்கு வசதிக்கு ஒரு குறைவும் இல்லை. இரண்டு வாரங்கள் ரிட்ஜ்வே விடுதியில் தங்கினோம். பிள்ளைகள் மிகவும் சந்தோசமாக விடுதி வசதிகளை அனுபவித்தார்கள், ஆனால் எனக்குத்தான் ஒரே குடைச்சல். மோகனிடம் இதைப்பற்றி வாய் திறந்தால் வாங்கிக்கட்டவேண்டியிருக்கும் என்பதால் என் பயத்தை எனக்குள் வைத்துக்கொண்டேன். விடுதி உணவகத்துக்குச் செல்லும்போது பிள்ளைகளை இறுகப் பற்றிக்கொள்வேன். வீடு பார்க்கச் செல்லும்போதும் வசதியான வீட்டைவிடப் பாதுகாப்பான வீட்டையே விரும்பினேன். மோகன் கந்தோருக்குக் கிளம்பும்போது மீண்டும் பயம் சுற்றிக்கொள்ளும்.

எங்களுக்கான வீட்டிற்குச் சென்றதும், வீட்டு வேலைக்கு எனக்கு உதவி செய்ய மேரி வந்தார். மிகவும் பணிவாகவும் மரியாதையோடும் நடந்தார். ஆனால் எனக்கோ அவரைப் பார்த்தால் ஒருவிதமான அருவருப்பு. அதேபோல தோட்ட வேலை செய்ய ஒரு மனுஷன் வருவார். அவரைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்காது. ஆனால் எப்படி ஒரே குடும்பத்தில் பிடிக்காவிட்டாலும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்வோமோ, அதேபோல எங்கள் மூவருக்குள்ளும் பேச்சு தொடங்கியது. அவர்கள் மீது எனக்கு ஒரே சந்தேகம். மேரியை சமையல் அருகே விடமாட்டேன். அவர்கள் களவு எடுக்கிறார்களா என்று பார்ப்பதற்கு எல்லாவற்றையும் எண்ணி எண்ணி வைப்பேன். ஆனால் அவர் மோகனின் காற்சட்டையில் காசு இருந்தால் கொண்டுவந்து என்னிடம் தருவார். கூட்டும்போது குழந்தைகளின் நகைகள் இருந்தால் கொண்டுவந்து தருவார். அப்படி அவர் நடந்து கொள்ளும்போது என் தலையில் யாரோ ஓங்கிக் கொட்டுவதுபோல் வலிக்கும். என் நினைப்பும் செயலும் என்னை ஒரு கேவலமான ஜென்மமாக உணரவைக்கும்.

அவர்கள் தோற்றம் என்னைப் பயமுறுத்தியிருந்தாலும், அவர்கள் வேலை என்னை வெகுவாக ஈர்த்தது. குசினியை எப்போதும் மிகவும் சுத்தமாக வைத்திருந்தார்கள். இடியப்பம், புட்டு, ரோல்ஸ், பட்டிஸ், கேக் என எங்கள் உணவுகளை எப்படித் தயாரிப்பது என்று என்னிடமிருந்து ஆர்வமாகக் கற்றுக்கொண்டார்கள். மேரி தனது நண்பர்கள், உறவினர்களையும் உதவிக்கு அழைத்து வருவார். எங்களது உணவு தயாரிக்கும் முறையை அறிய எல்லோரும் ஆர்வமாக இருப்பார்கள். மோகன் வீடு திரும்பும்போதெல்லாம் தடல் புடலாகச் சிற்றுண்டிகள் தயாராக இருக்கும். அப்படி ஒருநாள் மோகனோடு கதைத்துக்கொண்டிருக்கும்போதே எதேச்சையாக, “ஏன் நீ ஒரு catering class தொடங்கக்கூடாது?” என்று கேட்டார். “சும்மா போங்கோ உங்களுக்கு எப்பவும் என்னை வம்புக்கு இழுக்காமல் இருக்கேலாது” என்று எழுந்து உள்ளே சென்றுவிட்டேன்.

நான் சென்றுவிட்டேனே தவிர அந்த வார்த்தைகள் என் மூளைக்குள் சென்று கதிரை போட்டு உட்கார்ந்துகொண்டது. மலாவிக்கு உயர் பதவிகளுக்கு வருபவர்களின் இணையர்கள் அங்கு வேலை செய்ய முடியாது என்பது விசா விதிகளுள் ஒன்று. ஆனால் அவர்கள் அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் தொழில்களில், அவரவர் படிப்பு மற்றும் அனுபவத்திற்கு ஏற்றவாறு தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முடியும். மேரி மற்றும் அவளுடன் வருபவர்கள் மிகவும் வறுமையில் இருந்தார்கள் , அதனால் அவர்களால் தொடர்ந்து படிக்கமுடியவில்லை. ஆனால் அவர்களால் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடமுடிந்தது. அவர்களுக்கு நான் இங்கிருந்து போகும்முன் ஏதாவது செய்ய வேண்டும். பிள்ளைகளும் இப்போது பள்ளிக்கூடம் போய்விட்டார்கள். எனக்கும் அது ஒரு பொழுதுபோக்காக இருக்கும். மோகன் சொன்னது போல் ஏன் நான் ஒரு Caterning Class தொடங்கக்கூடாது?

அப்படித் தொடங்கியதுதான் “Malawai Ladies Housekeeping & Catering (MLHC )”. மேரி மூலமாக housekeepingல் விருப்பம் உள்ள பெண்களை அணுகினேன். முதலில் ஐந்து பெண்களில் தொடங்கியது MLHC. காலையில் நாமும் மேரியும் சேர்ந்து வீட்டுவேலைகளை முடித்துவிட்டு, பிள்ளைகளைப் பாடசாலை அனுப்பிய கையோடு அன்றைய வகுப்பு தொடங்கும். மதியத்திற்குப் பின்பு, சமைத்ததை ருசி பார்க்க அருகில் இருக்கும் நடுத்தர உணவகங்களுக்கு இலவசமாகக் கொடுப்போம். சிறிது சிறிதாக, MLHC உணவுக்கு ஓர்டர்கள் வரத் தொடங்கியது. கேக், சிற்றுண்டி  வகைகளுக்குத் தனியொரு வரவேற்பு இருந்தது. மோகன் மூலமாகவும் பல அறிமுகங்கள் கிடைத்தன. குறிப்பாக ரிட்ஜே விடுதி, எமது வகுப்புகளில் பயிலும் பெண்களுக்குப் பயிற்சி அளிக்கவும், திறமையானவர்களுக்கு வேலையளிக்கவும் முன்வந்தார்கள். 

எனக்கோ இன்னும் அந்தப் பெண்கள் பயில்வதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றனபோலத்  தோன்றியது. அரசு மோகனின் ஒப்பந்தத்தை நீடித்தால் நன்றாக இருக்கும். எண்ணங்களால் செய்ய முடிவதைச் சில சமயங்களில் சட்டங்கள் முறியடித்துவிடும். எல்லா நல்ல நிகழ்வுகளுக்கும் ஒரு முடிவு வரும். அது போல எங்கள் மலாவி வாழ்க்கையும் ஈற்றில் முடிவுக்கு வந்தது. இது ஒரு முடிவல்ல, இதுவே தொடக்கம், மலாவியிலிருந்து நாங்கள் ஒஸ்ரேலியாவுக்கு வந்தோம். 

எண்பதாம் ஆண்டில் மெல்பேர்ன் விமான நிலையம் வெள்ளை வெளேர் என்று இருந்தது. அப்போது நாங்கள்தான் அங்கு ஒரேயொரு பிரவுன் நிறத்தவர். நான் மலாவியில் ஆப்பிரிக்கா மக்களைப் பார்த்ததுபோல, மெல்போன் மக்கள் என்னைப் பார்த்ததுபோல எனக்குத் தோன்றியது. என் எண்ண ஓட்டத்தை அறிந்து மோகன் காதருகில் வந்து சொன்னார்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியுமா என்ன?

சரோஜினி ஆசீர்வாதம்


27 பார்வைகள்

About the Author

சரோஜினி ஆசீர்வாதம்

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்