
என் கணவருடனும் என் சிறு குழந்தைகளுடனும் பிறநாட்டில் கணவரின் தொழில் காரணமாக மிக வசதியுடன் பல வருடங்கள் வாழ்ந்து வந்தோம். இறுதியில் ஆஸ்திரேலியா மெல்பேன் நகரத்தை நாடினோம். இதோ என்ன மாற்றம். ஒன்றுமே அறியாத கண்டத்திற்கு உட்பிரவேசித்து தத்தளிக்க நேர்ந்து விட்டேன். இங்கு வாழும் மக்களுடன் இணைந்து வாழ, அவர்களின் பண்பு, கலாச்சாரம், நாகரீகம், தொழில், உணவு, விளையாட்டு போன்றவற்றை அறிந்து கொள்ள எனக்கு மிகவும் கடினமாகத் தோன்றிற்று. அத்துடன் தமிழ் மக்கள் எங்கு இருக்கிறார்கள் என்று அறிய ஆவலாக இருந்தேன். ரோட்டில் நடந்து செல்லும் போது தமிழ் மனிதர் அல்லது தமிழ் பெண் என்று அடையாளம் கண்டு கொண்டால் அவர்களுடன் பேசி பல விஷயங்களை அறிந்து வந்தேன். மற்றும் பத்திரிகைகள் மூலம் இந்து ஆலயங்கள் அமைந்திருக்கும் இடங்களைக் கண்டறிந்தேன். படிப்படியாக மெல்பேனில் உள்ள சில தமிழ்ச் சங்கங்களை எளிதாகக் கண்டுபிடித்து அச்சங்கங்களுடன் இணையச் சந்தர்ப்பம் கிடைத்தது. என்ன ஆச்சரியம் ஒரு படியாக Berwick மூத்தோர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து விட்டேன்.
சங்கத்துத் தலைவர் திரு சிவா மிகத் தாழ்மையானவர். அவர் ஒவ்வொரு உறுப்பினருடனும் அன்பாக உரையாடி அவர்களுக்கு முக்கிய இடம் அளிப்பார். இதன் மூலம் நாங்கள் எல்லோரும் ஒரு குடும்பமாகப் பழக இயலுமாக இருக்கின்றது. மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடைபெற்று இசை, நாடகம், பாட்டுக் கச்சேரி, நடனம் போன்றவற்றைக் கண்டு களிக்கலாம். மேலும் திறமை வாய்ந்த பேச்சாளர்களை வரவழைத்து அவர்களின் மூலம் பல விஷயங்களையும் நன்மைகளையும் பெற இயலுமாக இருக்கின்றது. நல்லதொரு சூழ்நிலையாக இந்த சங்கம் அமைந்திருப்பதை நான் நன்றாக உணர்கிறேன். எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று தயங்காமல் சொல்வேன். அங்கத்தவர்களுக்கு இலவசமாகக் கொடுப்பதுடன் உணவுக்கு டாலர் ஏழுதான் நாங்கள் கொடுக்கிறோம். மாமிசம், மரக்கறி பொரியல், ரசம், பாயாசம் கிடைப்பதுடன் இடைவேளையில் வடை, கேக், கோப்பி வழங்குவார்கள். சிறு வருமானத்துடன் இச்சங்கத்தை நடத்தி வருவது என்றால் மிக ஆச்சரியமாக எனக்குத் தோன்றுகின்றது. வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி எனது சிறிய கட்டுரையை முடித்து விடுகிறேன்.