Arts

ஏணி இருந்தும், எட்டாத வாய்ப்புகள் – ச.துவாரகன்

January 25, 2026 | துவாரகன் சந்திரன்

இன்றைய காலத்தில் அவுஸ்ரேலியாவில் உள்ள நிறையத் தமிழ் இளைஞர்கள், அவர் அவராகவே தங்களுடைய கலையைக் கண்டுபிடித்து வளர்த்துக்கொண்டு வருகிறார்கள். இந்தக் கலை அவர்கள் சிறு வயதிலிருந்து கற்ற கலையாக இருந்தாலும் அவர்கள் அதை மறந்துவிடாமலும் “its not cool”, “it doesn’t interest me” என்ற வலையில் விழாமலும் அதைத் தொடர்ந்துகொண்டும் வளர்த்துக்கொண்டும் வருகிறார்கள். இது மிகப் பெருமைகொள்ளும் விடையமாகும். அவர்களுக்கும், இப்படி வளர்த்துவிட்ட அவர்களுடைய பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் மிக்க நன்றிகள்.

மாணவர்கள் எவ்வளவுதான் முயற்சி எடுத்து அவர்களுடைய கலைகளை வெளிப்படுத்தினாலும், அவர்களின் சமூக ஊடகங்களின் நான்கு சுவரையும் தாண்டி செல்லமுடிவதில்லை. இதனை விளக்கமாகக் கூறவேண்டும் என்றால், இளைஞர் சமுதாயத்திலும் சமூக வலைத்தளங்களிலும்தான் இக்கலைத்திறன்கள் வெளிப்படுகிறதே ஒழிய, பரந்துபட்ட சமூகத்திற்கோ உலகத்துக்கோ இது பெரிதாகத் தெரியவருவதில்லை.

எமது சமுதாயம், இப்படிக் கலை பொதிந்த இளைஞர்களை அடையாளப்படுத்தி அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவேண்டும். இந்தியக் கல்லூரிகளில் “Culturals” என்ற நிகழ்வு இருப்பதை நான் திரைப்படம் மூலம் தெரிந்து கொண்டேன். இதில் நிறையத் திரையுலக நடிகர்கள் அவர்களுடைய பள்ளி நாட்களில் தம் திறமைகளை அடையாளப்படுத்தினார்கள் எனக் கூறுவார்கள். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இதே விடையத்தை ஒரு நேர்காணலில் கூறினார். அவருடைய மிமிக்ரி திறமையை இப்படியான ஒரு நிகழ்வில்தான் கண்டுபிடித்தாராம். அந்த வாய்ப்பு அவருக்கு மாணவர்கள் மத்தியில் ஒரு மரியாதையை உண்டாக்கியது மாத்திரமின்றி, இன்னும் பல மேடைகளில் இதேபோன்று மக்களை மகிழ்விக்க வேண்டும் என்ற ஊக்கத்தையும், பல பெரிய மேடைகளில் ஏறும் வாய்ப்பையும் அமைத்துக்கொடுத்தது.

இதே மாதிரி மெல்பேர்னிலிருந்து திறமை வாய்ந்தவரை ஏன் நாம் ஊக்குவிக்கக்கூடாது? நாம் நடத்தாத விழாவா? அல்லது எமது சமுதாயத்தில் திறமை வாய்ந்தவர்களுக்குப் பஞ்சமா?

நமது விழாக்களில், கர்நாடக சங்கீதம், தமிழ் பாடசாலைகள் நடத்தும் நாடகங்கள், Super Singer நிகழ்ச்சிகள், பெரியவர்கள்-இளைஞர்கள் சேர்ந்து நடத்தும் பாடல் நிகழ்ச்சிகள், நடனம், பேச்சுப்போட்டிகள், பட்டிமன்றங்கள், தமிழ் பாடசாலைகள் நடத்தும் நாடகங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் எங்கள் தமிழ் இளைஞர்களைக் கூடுதலாகக் காணலாம். ஆனால் இளைஞர்கள் அவர்களுடைய தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்தும்படியான நிகழ்ச்சியை இதுவரை பார்த்ததில்லை. எங்களுடைய சமூகத்தில் இயக்குநர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள், ஓவியர்கள், நடனக் கலைஞர்கள், புகைப்படக் கலைஞர்கள், நகைச்சுவை நடிகர்கள், மிமிக்ரி கலைஞர்கள், தொகுப்பாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று பல பேர் திறமைகளை வெளிப்படுத்தும் இடத்தைத் தேடி ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான வாய்ப்பையும் மேடையையும் எமது தமிழ் விழாக்கள் நடாத்தும் சங்கங்கள் கொடுக்கவேண்டும் என்பதே எனது வேண்டுகோள் ஆகும்.

எமது சமுதாயம் இளைஞர்களுக்குக் கொடுக்கும் சுதந்திரம் என்பது ஒரு கூட்டுக்குள் இருக்கும் பறவைபோலவே இருக்கிறது. ‘கலை’ என்று வரும்போது அது கர்நாடக இசையாகவோ அல்லது பரதநாட்டியமாகவோ இருந்தால் மட்டுமே மேடை கிடைக்கிறது. ஆனால் ஒரு இளைஞன் இன்றைய உலகளாவிய போக்கிற்கு ஏற்ப (Modern Trends) ஒரு சுயாதீனப் பாடலையோ (Indie Music) அல்லது சமூகக் கருத்துக்களைக் கொண்ட குறும்படங்களையோ உருவாக்க முயலும்போது, அதற்கு ‘கலாச்சாரம்’ என்ற பெயரில் முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. இது உண்மையான படைப்புச் சுதந்திரம் அல்ல. இது ஒரு எல்லைக்குள் அடைக்கப்பட்ட திறமை, ஒரு பறவையைக் கூட்டில் அடைத்துவிட்டு, அதனைப் பறக்கச் சொல்வதுபோல் உள்ளது.

மேலும், கனடா, ஜேர்மனி, லண்டன் போன்ற நாடுகளில் தமிழ் இளைஞர்கள் தங்கள் மேல் படிப்பை விட ஆடல், பாடல், திரைப்படத் தயாரிப்பு, புகைப்படம் எடுப்பது போன்ற பல துறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அங்கு இருக்கும் தமிழ்ச் சமுதாயம் விரிந்து மேம்படுத்தப்படுகிறது.
கனடா மற்றும் லண்டன் போன்ற நாடுகளில் வாழும் தமிழ்ச் சமூகம் கலையை வெறும் பொழுதுபோக்காகப் பார்க்காமல் ஒரு தொழிற் துறையாக வளர்த்தெடுத்துள்ளது. அங்கு ஒரு பாடகர் உருவானால், அவரைத் தாங்கிப் பிடிக்கத் தயாரிப்பு நிறுவனம் (Production House), தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகக் கட்டமைப்பு என எல்லாமே உள்ளது. ஆனால் அவுஸ்திரேலியாவில் நிலைமை வேறாக இருக்கிறது. இங்கே மேடையில் ஏறிப் பாடுவதற்கு நூறு பேர் இருக்கிறார்கள், ஆனால் அந்தப் பாடலைப் பதிவு செய்யவோ, அதனை உலகத்தரம் வாய்ந்த ஒரு படைப்பாக மாற்றவோ முன்வருபவர்கள் மிகக் குறைவு. முதலீடு செய்பவர்கள் உணவகங்களிலும், கட்டிடத் தொழில்களிலும் காட்டும் ஆர்வத்தை, ஒரு கலைத் தயாரிப்பில் காட்டுவதில்லை.

இங்கு, நமது தமிழ்ச் சமூகத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்குக் கூடுதலான முக்கியத்துவத்தைக் கொடுத்துவிட்டு, ஏனைய திறமைகளை ஊக்குவிக்க மறந்து விடுகிறார்கள். இதன் விளைவாக எங்கள் சமுதாயத்தில் ஆக்கத் திறன் குறைந்திருக்கிறது. ஆக்கும் திறனே இல்லை என்று சொல்ல வரவில்லை ஆனால், அதற்கான ஊக்கமோ, தூண்டுதலோ, உதவியோ இங்கு இல்லை.
இங்கு இருக்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார்கள். அவர்கள் படிப்பை விட்டு வேறு துறைக்குச் சென்றால் அவர்கள் பட்ட கஷ்டம் வீணாகி விடுமோ என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது. இந்தப் பயம்தான் படைப்பாற்றல் உருவாக்கும் பாதையை நிறுத்தி விடுகிறது.

பொதுவாக எப்போது கலையைப்பற்றிய வார்த்தைகள் பேசப்படுகின்றதோ, அந்தத் துறையில் மிகுந்த துன்பம், கஷ்டம், நிச்சயமற்ற எதிர்காலம் இருக்கிறது என்று சொல்லி அது ஒரு இழிவாகவே பார்க்கப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு நிலையான தொழிலாளராக ஆக்க வேண்டும் என, மருத்துவத்தில், சட்டத்தில், பொறியியல் துறையில் சேர்த்து விடுகிறார்கள். இந்த மூன்று துறைகளிலோ அல்லது இவற்றிலிருந்து கிளையாகும் ஒரு துறையிலோ சேர்த்துவிட்டால் ஒரு எளிதான வாழ்க்கையை வாழ முடியும் என நம்புகிறார்கள். “கலை துறை ஒரு உறுதியற்ற துறை”, “அதிலிருந்து காசு சம்பாதிப்பது கடினம்” என்ற பிற்போக்குத்தனமான எண்ணங்களால் எமது இளைஞர்களின் நெஞ்சில் பயத்தை விதைக்கிறார்கள்.

ஆனால், இதை எப்படி மாற்றுவது? எமது உள்ளூர்க் கலைஞர்களை எப்படி வளர்ப்பது? முதலாவதாக, எமது சமூகமே தங்கள் இடத்தில் இருக்கும் திறமைசாலிகளை அடையாளம் காணவேண்டும். நம் தமிழ்ச் சங்கங்கள், பாடசாலைகள், கோயில்கள் போன்ற இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் “இளைஞர் கலை” எனும் சிறப்புப் பிரிவு ஒன்றை அமைக்கலாம். சமூக ஊடகங்கள் மற்றும் தமிழ் ஊடக நிறுவனங்கள் மாதம் ஒருவரை “Tamil Talent of the Month” என அறிமுகப்படுத்தலாம். ஆசிரியர்கள் தமிழைக் கற்றுக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அதனூடாக படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் பாடல்கள், குறுநாடகங்கள், டிக்‌டாக் கதைகள் போன்ற வழிகளிலும் மாணவர்களை ஊக்குவிக்கலாம். இரண்டாவதாக, இளைஞர்களுக்குப் பின்னணி ஆதரவு தேவை. உள்ளூர் தமிழ் நிறுவனங்கள் மற்றும் வணிகர்கள் சிறிய அளவில் நிதி உதவி (Micro-grant) வழங்கி, ஒரு குறும்படம் எடுக்கவோ, பாடல் வெளியிடவோ, ஓவியக் கண்காட்சி நடத்தவோ உதவலாம். மூத்தவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து, கலைத்துறையின் சாத்தியங்களையும் வழிகாட்டல்களையும் அளிக்கலாம். மூன்றாவதாக, அவர்களுக்கு ஒரு உறுதியான மேடை வேண்டும். மெல்பேர்ன் நகரத்தில் “Tamil Youth Arts Festival” போன்ற விழாக்களை ஏற்பாடு செய்து, இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பினை உருவாக்கலாம். அத்தோடு, open mic இரவுகள், குறும்படத் திரையிடல்கள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றைத் தமிழ்ச் சங்கங்கள் நடத்தி, சமூக ஊடகங்களின் நான்கு சுவர்களைத் தாண்டி அவர்களின் குரல் வெளி உலகத்துக்கும் சென்றடையச் செய்யலாம்.

நாம் வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்கள், நமது மொழி, மரபு, கலையை உயிருடன் வைத்திருக்க வேண்டும் என்ற பொறுப்பை ஏற்றுள்ளோம். அந்தக் கலையைத் தொடர்ந்து வாழ வைக்க வேண்டுமெனில் நம் இளைஞர்களின் கைகளில் இருக்கும் brush, mic, camera, pen, இவையே நம் எதிர்காலத்தின் கருவிகள். அவர்களின் கனவுகளை நம்பி, அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குவது நம் சமூகத்தின் கடமையாகும். அவர்களுக்கு நிதி, வழிகாட்டல், ஊக்கம் என மூன்றையும் கொடுத்தால், அவர்கள் நம் கலாச்சாரத்தைப் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வார்கள். நாம் ஒரு இளைஞருக்கு மேடை கொடுக்கிறோம் என்றால் அது அவரின் கனவுக்காக மட்டும் அல்ல, நம் தமிழின் உயிர் துடிப்புக்காக. “இளைஞர்களை ஊக்குவிப்பது என்பது நம் எதிர்காலத்தில் முதலீடு செய்வதற்குச் சமம்” என்பதை நம் சமூகமே உணர வேண்டிய நேரம் இது.

தமிழ் மொழியைக் கற்பது, VCE பாடத்துடன் முடிந்தது என நம்பும் சமுதாயம் இது. இது மாற வேண்டும். அவுஸ்திரேலியாவிலிருந்து நிறையக் கலைஞர்கள் உருவாகவேண்டும். நம் இளைஞர்களைக் கலைஞர்கள் ஆக்கும் சக்தி நம் சமுதாயத்தின் கையில்தான் இருக்கிறது என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன். அவுஸ்திரேலியாவில் கலைத்துறை சார்ந்து பல சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் எட்டாத உயரத்தில் இருப்பதற்குக் காரணம் ‘திறமை இல்லாமை’ அல்ல; மாறாக ‘திறமையை அங்கீகரிக்கத் தெரியாத தலைமைத்துவம்’. எமது சமூக அமைப்புகளின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பெரும்பாலும் பழைய சிந்தனை முறையிலேயே இருக்கிறார்கள். அவர்கள் டிஜிட்டல் யுகத்தின் சாத்தியக்கூறுகளைப் புரிந்துகொள்ளத் தவறுவதால் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உருவாகிறது. இந்த இடைவெளிதான் ஒரு திறமையான இளைஞனைத் தன் எல்லைக்குள்ளேயே முடக்கி வைக்கிறது.

படைப்பாற்றல் என்பது வெறும் மேடையில் தோன்றி மறைவதல்ல. அது ஒரு பொருளாதாரச் சங்கிலி. ஒரு திரைப்படம் உருவானால் அங்கு ஒரு எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் எனப் பலருக்கு வேலைவாய்ப்பு உருவாகிறது. கனடாவிலும் லண்டனிலும் இந்தச் சங்கிலி வலுவாக இருப்பதால் அங்குள்ள இளைஞர்கள் கலையைத் துணிச்சலாகக் கையில் எடுக்கிறார்கள். அவுஸ்திரேலியத் தமிழ்ச் சமூகம் வெறும் நுகர்வோராக(Consumers) மட்டுமே இருக்காமல், உருவாக்குபவர்களாக(Producers) மாற வேண்டும். அப்போதுதான் எமது இளைஞர்களின் திறமை எல்லைகளைத் தாண்டி உலக அரங்கில் மிளிரும்.

துவாரகன் சந்திரன்


23 பார்வைகள்

About the Author

துவாரகன் சந்திரன்

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்