Arts

ஒரு சேலையின் பயணம் – சாந்தி சிவகுமார்

January 25, 2026 | சாந்தி சிவகுமார்

அக்டோபர் மாதம், இளங்காலை வெயில் என அன்றைய காலைப் பொழுது ரம்மியமாக இருந்தது. மக்கள் குளிருக்கான மெலிதான கார்டிகனை போட்டுக்கொண்டு காலை நேரப் பரபரப்பில் இருந்தனர்.
எப்பொழுதும் பக்கத்து கபேயில் லாட்டே வாங்க வரும் கிரிஸ் ”ஹாய்” என கையசைத்து விட்டு சென்றான். குட்டி நாயுடன் வேலைக்கு செல்லும் ஐரோப்பிய பெண்மணி சினேகமாக சிரித்து காலை வணக்கம் சொல்லுவாள். ஆனால் பெயர் தெரியாது, கேட்டதும் இல்லை. மணி ஒன்பது ஆகிவிட்டதால் மெல்பர்னின் தென்கிழக்கில் இருக்கும் டேண்டினாங்கின் பிரதான தெரு மேலும் பரபரப்பாகிவிட்டது. மல்லிகா தன் கடையைத் தூசு தட்டிச் சுத்தம் செய்துவிட்டு, ”வீ ஆர் ஓப்பன்” என்ற பலகையைத் தொங்கவிட்டார். புடவைகளை ஒருமுறை சரியாக உள்ளதா என பார்த்துவிட்டு இன்றைக்குத் தன் தோழி கொடுத்த பையைப் பிரித்தார். உள்ளே இரண்டு சிகப்பு நிற சேலைகளும் ஒரு அடர் மஞ்சளும் இருந்தன. ஒன்று பருத்தி, ஏனைய இரண்டும் விசேஷங்களுக்கு அணிவது போன்று வேலைப்பாடுகளுடன் இருந்தது. மல்லிகாவிற்கு ஏனோ ஏமாற்றமாக இருந்தது அவளுக்கு எப்பொழுதும் மென்மையான நிறங்களில்தான் ஈர்ப்பு அதிகம். தனக்குத்தானே புன்னகைத்துக்கொண்டாள். ‘நீ புடவை எடுக்க வரவில்லை, விற்பதற்காகக் கடைவிரித்துள்ளாய். மறந்துவிடாதே’ என தன்னைத்தானே இடித்துக் கொண்டார். மல்லிகா மெல்பேர்ன் வந்து 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பலவிதமான வேலைகள், சிறு தொழில்கள் என்று விதவிதமான கற்றல்கள், அனுபவங்கள். திருமணமான புதிதில் இந்தியா செல்லும்பொழுது வீட்டு சாமான்கள், குழந்தைகளுக்கான உடுப்புகள் என நிறைய வாங்குவார். மகன்கள் வளர்ந்து தங்களுக்குத் தேவையானதை தாங்களே வாங்கத் தொடங்கிய பின் அவருக்கு ஊருக்கு செல்லும்போதெல்லாம் புத்தகங்கள் வாங்குவதைத் தவிர பிடித்தமான விஷயம் சேலை வாங்குவது. அதிலும் எளிமையான பருத்திப் புடவைகள் என்றால் கொள்ளைப் பிரியம்.
சேலைகளை வாங்குவது மட்டுமில்லாமல் அவற்றை அணிவதும் அவருக்கு மிகப் பிடித்தமான ஒரு விஷயம். நண்பர்களின் வீட்டுக் கொண்டாட்டங்கள், புத்தக வெளியீடுகள், இசை நிகழ்ச்சிகள் என எங்கு சென்றாலும் சேலையும் அதற்கு தோதான காது கழுத்து அணிகலன்களையும் விரும்பி அணிவார்.. தங்க நகைகள் மேல் நாட்டம் குறைவு. எப்பொழுதும் ட்ரென்டியாக இருப்பது பிடிக்கும். அது தன்னை இளமையாக வைத்திருப்பதாகவும் நம்புவார். இதில் சிக்கல் என்னவென்றால் ஊருக்குப் போகும்பொழுதெல்லாம் அம்மாவும் அக்காவும் உனக்குதான் சேலை பிடிக்குமே, நீ கட்டவும் செய்கிறாய் என்று தங்களுக்கு வந்த சேலைகளையும் சேர்த்து வைத்து விடுவார்கள். அதற்கு மேல் தோழிகள். ஒரு முறை தோழியின் அம்மாகூட சேலையைப் பரிசாக கொடுத்தார். முதலில் மகிழ்ச்சியாக இருந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல தான் விரும்பியதை வாங்க முடியாமல் போனதும் சேலைகள் சேர்ந்து விட்டதும் ஒரு தொய்வைக் கொடுத்தது. இப்பொழுது எல்லாம் தீர்க்கமாகத் தான் வந்து எடுத்துக் கொள்வதாக மனம் நோகாமல் சொல்லிவிடுவார். பற்றாக்குறைக்கு மிக்ஸ் & மேட்ச் பிளவுஸ் ஸ்டைல் வந்ததும் ஆன்லைன் ஆர்டரும் அதிகமாகிவிட்டது. தினமும் இரவு அரை மணி நேரமாவது புதுப் புடவை வரவுகளையும், செடிகள் பராமரிப்பு காணொளிகளையும் காணாமல் தூங்கப்போவதில்லை என்ற அளவுக்குப் போய்விட்டது. ஆனாலும் அதில் ஒரு குழந்தைதனமான மகிழ்ச்சி. நேர விரையம் உருப்படியாக ஏதாவது செய்யலாம் என்ற எண்ணம் எப்பொழுதாவது வந்தால், வாழ்க்கையை வாழ வேண்டாமா? எந்திரமா என்ன 24 மணி நேரமும் புரொடக்ஷனை பற்றியே யோசித்துக் கொண்டிருப்பதற்கு?
கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் காலத்தில் மல்லிகாவிடம் நான்கு அல்லது ஐந்து சேலைகள்தான் இருந்தது. அதுவும் தினசரி கட்டுவதுபோல் கிடையாது. அப்போதே சேலை கட்ட விருப்பம் என்றாலும் பெரிய பெண்ணாகத் தெரிகிறாய் என்று அம்மா அனுமதிக்கமாட்டார். அந்தக் காலகட்டத்தில் ரோஜா திரைப்படமும் அந்த பாடல் வரியையும் மாய்ந்து மாய்ந்து பேசியது அவருக்கு நினைவுக்கு வந்தது.. சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை என்ற பாடல் வரியை ஒரு ஆணால் எப்படி எழுத முடிந்தது என அந்த திரைப்படம் வந்த நாட்களில் வியந்ததுண்டு.
கதவு திறக்கும் மணியின் சிலம்பல் எண்ண அலைகளை கலைத்தது. 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தன் பெண்ணுடன் உள்ளே நுழைந்தார். பெண்ணிற்கு பதினான்கு அல்லது பதினைந்து வயது இருக்கலாம் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தனர். ஹலோ, ஹவ் ஆர் யூ என்றேன். பதிலுக்கு முகமன் கூறிவிட்டு சேலைகளை மேம்போக்காக ஒரு பார்வை பார்த்தனர். மல்லிகா அவர்களை தொல்லை செய்ய வேண்டாம் முதலில் பார்க்கட்டும் என்று உதவி தேவை என்றால் கூப்பிடுங்கள் என்று கூறிவிட்டு சற்று ஒதுங்கி வேறு வேலைகளை கவனிக்கத் தொடங்கினேன். பத்து நிமிடம் பட்டும் படாமலும் பார்த்துவிட்டு நன்றி கூறிச் சென்று விட்டனர். அடுத்த ஒரு மணி நேரமாக யாரும் வரவில்லை. மெலிதான தமிழ்த் திரையிசையை ஒலிக்கவிட்டு, வேலைகளைத் தேடிப் பிடித்து செய்துவிட்டு, என்ன செய்யலாம் என்று அவர் யோசித்தபொழுது 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி ஹாய் என்று பலமாக சொல்லிக்கொண்டு உள்ளே நுழைந்தார். எப்படி இருக்கிறாய் என்று கேட்டுவிட்டு நல்ல மஞ்சள் நிறத்தில் சேலை உள்ளதா என கேட்டார். ஐரோப்பிய பின்புலம்போலத் தெரிந்தது. இரட்டைச் சடை போட்டிருந்தார். மல்லிகா அவரிடம் என்னவகையான நிகழ்விற்காக என்று கேட்டு மேலும் விபரங்களை அறிந்தவராய், உகந்த சேலைகளைக் காட்டத்தொடங்கினார். அவர் ஏதோ ஒரு அமைப்பின் பெயரைச் சொல்லி அதற்குத் தேவை என்று கூறினார். சுற்றிச் சுற்றி வந்துவிட்டு முடிவெடுக்க முடியாமல் பிறகு வருவதாக கூறி கிளம்பினார். மல்லிகாவிற்கு வியப்பாக இருந்தது. ஏன் முடிவெடுக்க இவ்வளவு தயக்கம்? தனக்கு என்ன தேவை என்று தெரியாததா அல்லது விலையா? ஆனால் விலையைப்பற்றி அவர் பேசவே இல்லை. மல்லிகாவைப் பொறுத்தவரையில் அவர் எப்போது ஊருக்கு போனாலும் இன்ன நிறத்தில் இன்ன துணி வகையில்தான் வேண்டும் என்று செல்வதினால் மாபெரும் ஜவுளிக்கடைகளை ஆர்வத்தில் வலம் வருவாரே ஒழிய தொலைந்து போனதில்லை. இப்படியே வாங்கி வாங்கி புடவைகளும் சுடிதார்களும் குவிந்து விட்ட நிலையில்தான் ஏன் இவற்றை இரண்டாம் தரமாக விற்கக்கூடாது என்ற எண்ணம்கூட அவருக்குத் தோன்றியது. அல்லது வாடகைக்கு தரலாம் என்ற யோசித்து பின் விற்பதுதான் இலகுவானது என்று முடிவுசெய்து இந்தக் கடையை வாடகைக்கு எடுத்திருந்தார்.
20*20 அடி உள்ள ஒரு அறை. ஓரு மூலையில் பின்புறம் செல்ல கதவு. அங்கே சின்னதாக சாப்பிடுவதற்கு தோதாக ஒரு இடமும், அப்படியே பின்னால் சென்றால் கழிவறையும் இருந்தது. தன் விருப்பப்படியும், AI யின் துணையோடும் கடையை எளிமையாக, சேலைகளை வைத்தே வடிவமைத்திருந்தார். இரண்டு வண்ணமயமான மோடாக்களையும் உடன் வருபவர்கள் உட்காருவதற்காக இருந்தது. பல கடைகளில் அமர்வதற்கு இடமில்லாமல் உடன் வரும் பெரியவர்கள் அவதிப்படுவதை பார்த்திருந்ததால் இந்த ஏற்பாடு. தன் கதைக்கு என்ன பெயர் என யோசித்தபோது ”ஸ்டோரீஸ் ஆஃப் சாரீஸ்” என உடனே மனதில் வந்த பெயர் பிடித்து விட்டது. தான் விற்கும் அனைத்து சேலைகளுக்கும் ஒரு வீடு இருந்ததும் அவை வீடுகளுக்கு வந்ததும் வீட்டில் உள்ளவர்களின் மனதில் இடம் பிடித்ததும் என ஒவ்வொரு சேலைக்கும் ஒரு கதை இருந்ததால் இந்த பெயர் பொருத்தமாக இருந்ததாகவும் தோன்றியது. சேலை மட்டுமில்லாமல் இப்பொழுது சட்டைக்குத்தான் முக்கியத்துவம். பலவிதமான வடிவமைப்புகள், விலையும் அதிகம். மல்லிகா இப்படி சேலை விற்பது தெரிந்ததும் அவளுடைய தோழிகளும் அவ்வப்போது தன்சேலைகளைக் கொடுத்தனர்.
கடந்த நான்கைந்து வருடங்களாகவே பல விடயங்களின் மேல் மனம் சமன்பட்டு ஒரு விலகல் இருந்தாலும் செடிகளும் சேலைகளும் விதிவிலக்காக இருந்தன. விதவிதமான பச்சை நிறத்திலும் பலவிதமான வடிவமைப்பிலும் உள்ள இலைகள் அவரை ஈர்த்த வண்ணம் இருந்தது. அவற்றை பார்க்கையிலே தன்னை அறியாமல் தான் சாந்தமடைவதும் அவை தன்னிடம் உரையாடுவதாகவும் மனப்பூர்வமாக நம்பினார். சேலைகளும் அப்படியே. தன் இரகசியங்கள் அனைத்தும் தெரிந்த பதின் வயது தோழிபோல், அவருடனே இருந்தது. அவருக்கும் அவற்றை பிரிய மனம் வந்ததில்லை. ஒவ்வொரு சேலைக்கும் ஒரு கதை. யார் கொடுத்தார்? எதற்காக கொடுத்தார்கள்? அதன் சட்டையை எப்படி வடிவமைத்தார் என. சில சட்டைகள் புடவையை விட விலை கூட.
30 வருடங்களுக்கு முன், கல்லூரி படிக்கும் காலங்களில் சட்டையின் நிறம் புடவையின் நிறத்தை அப்படியே ஒத்து இருக்கவேண்டும். கொஞ்சம் நிறம் வேறுபட்டு இருந்தாலும் மனம் ஏற்காது. இப்பொழுது மிக்ஸ் & மாட்ச் வந்தது ஒரு பெரிய வரப்பிரசாதம். யார் இந்த ஆடை அலங்காரத்தை நிர்ணயிக்கிறார்கள்? மக்களுக்கு இது பிடிக்கும் என எப்படி அவர்கள் கண்டறிகிறார்கள்? எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள்? ஒரு காலத்தில் “பேஷன்” என கொண்டாடி பின் அதுவே பழையதாகி எப்படி புறக்கணிக்கப்படுகிறது?
அன்று செவ்வாய்கிழமை என்பதால் மல்லிகா ஐந்து மணி ஆனதும் கடையை மூடிவிட்டு மகிழுந்தை கிளப்பி இரவு உணவு என்ன செய்வது என்று யோசித்தபடி கிளம்பினார்.
வரவு செலவுக் கணக்கைச் சரி பார்த்துக்கொண்டே கடையில் வருபவர்களையும் பார்த்தவாறு வேலை செய்து கொண்டிருந்தார். வார இறுதி என்பதால் வருவார் போவார் அதிகமாக இருந்தது. அப்போது இரண்டு கல்லூரி படிக்கும் பெண்கள் உள்ளே நுழைந்தனர். ஒருவர் இந்தியர்போலத் தெரிந்தார். மற்றவர் உள்ளூரைச் சேர்ந்தவர். ஹாய் என்று புன்னகைத்தபடி அவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன். பிறந்த நாள் விழாவிற்கு எல்லாரையும் சேலையில் வரச்சொல்லி இருந்ததால் அந்த உள்ளுர் பெண்ணிற்கு எளிமையான ஒரு சேலை தேவையாக இருந்தது. என்ன விலையில் வேண்டும் என்று கேட்டு ஒவ்வொன்றாக அந்த பெண்ணின் தோல் மீது மடித்து வைத்து எப்படி இருக்கும் என்று காட்டினார். அந்த பெண்ணிற்கும் மல்லிகாவைப் போலவே மென் நிறங்களே பிடித்தமாக இருந்தது. ஒரு ஏலக்காய் நிறமுள்ள சேலை அவளுக்குப் பிடித்து விட்டது. மல்லிகா வேறு சேலைகளை காட்டியபடி இருந்தாலும் அவளுக்கு அதன் மீதே கண். மல்லிகாவிற்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. அது அவருக்கு மிகவும் பிடித்த சேலை. அவள் வேறு சேலையை எடுத்து விட வேண்டும் என்று அவரால் ஆன வித்தைகளை செய்தார். தோழிகள் இருவரும் அதற்கு என்ன மாதிரி சட்டை போடுவது என்று பேசிக் கொண்டிருந்தனர். சட்டையை அவளுடைய அளவிற்கு பிடித்து தருவாரா என்றும் கேட்டு தெரிந்து கொண்டார்கள். நாளை வருகிறோம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்கள். அப்பாடா என்று இருந்தது அந்த சேலையை எங்காவது பின்னுக்கு போட்டு விடலாமா என்று மனம் ஒரு வினாடி சஞ்சலப்பட்டது. தன்னைத்தானே திட்டிக்கொண்டு எல்லா சேலைகளையும் மீண்டும் அலமாரிகளில் அடிக்கி வைத்தார். கடையில் இப்பொழுது யாரும் இல்லாததால் அந்த சேலையை எடுத்து வந்து தன் மேல் போட்டு கண்ணாடியில் அழகு பார்த்தார். ஒருமுறை சென்னை சென்றபொழுது, கடையில் பொம்மைக்கு கட்டியிருந்த சேலை பிடித்துப்போய் அவர்களிடம் அதை கழட்டி தரச்சொல்லி வாங்கிவந்தது. அதற்கு ஏற்றார்போல முழுக்கை பிளவுஸ் தைத்து ஒரு பிறந்த நாளன்று கட்டியது. தான் போட்டிருந்த டைட்ஸின் மேலே கட்டி இன்னமும் அதன் அழகு குன்றாமல் இருப்பதை இரசித்தவர், சட்டென்று தன்னைத்தானே திட்டிக்கொண்டு அந்தப் சேலையை கழட்டி மேசைமேலே போட்டார். அந்தப் பெண்கள் திரும்பி வந்து விடக்கூடாது என்று வேண்டிக்கொண்டு மற்ற வேலைகளை கவனிக்க சென்றார்.
கடை மூடும் தருவாயில் 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி உள்ளே வந்தார். நல்ல உயரம், அவர் வயதுக்கு பளிச்சென்று இருந்தார். தனக்கு அடர் நிறத்தில் கண்ணாடி வேலைப்பாடுகள் உடனான ஒரு ரெடிமேட் சேலை வேண்டும் காண்பிக்க முடியுமா என்று கேட்டார். அவர் சேலையே கட்டியதில்லை எனவும் இப்பொழுது தன்னுடன் வேலை செய்யும் பெண்ணின் திருமணத்திற்கு இந்திய பாரம்பரிய உடையில் செல்லவேண்டும். ரெடிமேட் சேலை என்றால் கழன்றுவிடுமோ என்ற பயமில்லாமல் இருக்கலாம் எனச் சொல்லி கடையை ஒரு நோட்டம் விட்டார். வெரி கலர்ஃபுல் என கூறி மல்லிகா எடுத்து போட்ட நான்கு சேலைகளில் கரு நீலம் என்றால் வேறு விழாக்களுக்கும் பயன்படுத்தலாம் என தன் தேர்விற்கு விளக்கம் சொன்னவாறு விலை என்ன என்று கேட்டார். சட்டை தேவையா? பார்க்க விருப்பமா? என கேட்டபோது தான் கிராப் டாப் போட்டுக் கொள்வதாகச் சொல்லி சேலைக்கான விலையை கொடுத்தார். மல்லிகா அழகான ஒரு பருத்திப்பையில் சேலையை போட்டுக் கொடுத்தார் அந்தப் பை அவருக்கு ரொம்பவும் பிடித்து விட்டது எனக்கு தெரிந்தவர்களிடம் சொல்கிறேன் எனக் கூறி வெளியேறினார். இந்த சேலைக்கான கதை என்னவாக இருக்கும் யார் யாருக்கு கொடுத்திருப்பார்கள்? எங்கோ நெய்யப்பட்டு எங்கோ பயணம் ஆகி யார் வீட்டிலோ பாதுகாக்கப்பட்டு பின் பிரியாவிடை பெற்று வந்துள்ளதா?. மனித மனம் தன் சிந்தனையை ஏன் எல்லாவற்றிலும் பொருத்திப் பார்க்கிறது என மல்லிகா யோசித்தவாறு கடையை மூடும் வேலையை தொடங்கினார். அந்த ஏலக்காய் நிற சேலை மீண்டும் கண்களில் பட்டது.
திங்கட்கிழமை விடுமுறை. செவ்வாய்க்கிழமைகளில் மல்லிகா தன் தோழி ரேகாவை காலை கடை திறந்து பாதி நாள் வரை வேலை செய்யுமாறு கேட்டு இருந்தார். அந்த நாளில் தன் மற்றப் பணிகளை மேற்கொள்ள தோதாக இருக்கும் என்று இந்த ஏற்பாடு. அம் மாதிரியான நாட்களில் வார இறுதியில் வந்து சேர்ந்த சேலைகளை சரி பார்த்து சேலைகளைச் சற்று மாற்றி அடுக்கி வைக்க வேண்டியது அவரின் வேலை. பொதுவாகவே பொருட்களை இப்படி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மாற்றி வைத்தால் அது பார்வையாளர்களை ஈர்க்கும். அந்த வாரம் நாட்கள் வேகமாக ஓடிவிட்டது. சனிக்கிழமை கடையைத் திறந்து சுத்தம் செய்து சேலைகளை மாற்றி அடுக்கி ஒரு காபியை போட்டுக் கொண்டு வந்து அமர்ந்தபோது மணி பத்து ஆகிவிட்டது. முதல் நாள் இரவு தன் மகனுடன் உணவருந்திக் கொண்டிருந்தபோது கடையைப் பற்றிய பேச்சு வந்தது. மகன் மல்லிகாவின் முயற்சியைப் பாராட்டினார். லெட்டிங் கோ இஸ் நாட் ஈஸி அம்மா, நீங்கள் அதை இலகுவாக செய்வதும் பாராட்டவேண்டிய விஷயம் எனக் கூறியது அவருக்கு மகிழ்ச்சி அளித்தாலும் நடைமுறையில் அது அவ்வளவு எளிதாக இல்லை. ஒவ்வொரு சேலைக்கும் ஒரு கதையும் ஒரு உணர்வும் இருந்தது. அப்பா தனக்கு 20 வருடங்களுக்கு முன் எடுத்துக் கொடுத்த சேலையை எப்படி விற்பது? ஆனால் ஊருக்கு செல்லும் பொழுதெல்லாம் சேலை வாங்கிக் கொடுப்பார். பிறந்ததிலிருந்து அவர்தானே எடுத்து தருகிறார்? எத்தனையோ சேலைகளைப் பயன்படுத்திவிட்டு மற்றவருக்கு கொடுத்துள்ளோமே? இப்பொழுது மட்டும் ஏன் இந்த எண்ணம்? மெல்பேர்னில் சேலை அவ்வளவு பழுதடையாமல் இருப்பதாலா இல்லை? இவ்வளவு தூரம் தள்ளி வந்ததாலா? இல்லை தனக்கு வயதாவதால் அதீத சென்டிமெண்ட்டா? எது எப்படியோ கொடுத்து விடுவது என்று முடிவுசெய்து கடைக்கும் அதை கொண்டு வந்த பிறகு விற்காமல் இருப்பது பலகீனமான மனநிலை என்று தோன்றியது. தன் அலமாரியைப் பார்க்கும் தோறும் சின்னதாக இருந்த ஒரு குற்ற உணர்ச்சி, வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களால் தீர்க்கமான ஒரு முடிவை நோக்கித் தள்ளியது. தனக்கு பிடித்த புடவைகள் இந்தக் குற்ற உணர்வாக மாறி பாரமாவதை அவர் விரும்பவில்லை. வாங்கும்பொழுது எப்படி ஆசையாகவும் குதூகலமான மனநிலையிலும் இருந்தாரோ அப்படியே கொடுக்கவும் விரும்பினார்.
அப்போது அந்த இரு இளம் பெண்களும் புன்னகைத்தபடி உள்ளே நுழைந்தனர். மல்லிகாவின் மனம் சட்டென்று ஏமாற்றமடைந்தது. இத்தனை நேரம் யோசித்ததெல்லாம் காற்றில் போனது. அவர்கள் தங்களுக்குள்ளாகவே பேசிக்கொண்டு சேலைகளை பார்த்தபடி இருந்தனர். மல்லிகா அவர்களிடம் செல்லவே இல்லை. சற்று உன்னித்து பார்த்த பொழுது வேகவேகமாக சேலைகளை தள்ளி எதையோ தேடுவது தெரிந்தது மல்லிகா சற்று படபடப்பாக உணர்ந்தார். அந்தச் சேலையைதான் தேடுகிறார்களோ தன்னிடம் கேட்டால் விற்று விட்டது என்று சொல்லிவிடலாமா. இரண்டு நாட்களுக்கு முன்தான் அதைப் பின்னால் ஒரு மூலையில் தள்ளி வைத்திருந்தார். போய்ப் பேசி அவர்களிடம் கொடுத்து விடலாம் என்றும் தோன்றியது. மனம் ஆசைக்கும் விடுதலைக்கும் நடுவில் அல்லாடியது. அந்த பெண்கள் தன்னிடம் வராமல் அப்படியே வெளியேறிவிட வேண்டும் என்று நினைத்தார். தான் வேலை செய்வதுபோலப் பாவனை செய்தாலும் மனம் ஒரு நிலையாக இல்லை. எக்ஸ்கியூஸ் மீ என்று அந்த இரு பெண்களில் ஒருவர் பக்கத்தில் வந்து என் மன ஓட்டத்தை கலைத்தார். நான் நிமிர்ந்து அவரை பார்த்து புன்னகைத்தபடி என் உதவி எதுவும் தேவையா? என்று கேட்டேன். அவர் நாங்கள் போனமுறை வந்த பொழுது ஒரு ஏலக்காய் நிறச் சேலையை பார்த்தோம். அது மிகவும் பிடித்து விட்டது, ஆனால் அதனை இங்கே காணவில்லை, விற்று விட்டதா எனக் கேட்டார். மல்லிகா சற்றும் யோசிக்காமல் இல்லை அது அங்கேதான் உள்ளது. அன்றே நீங்கள் திரும்பி வருவீர்கள் என நினைத்தேன் எனக்கூறி பின்னால் இருந்த அந்த சேலையை எடுத்துக் கொடுத்தார். அந்த இரண்டு பெண்களின் முகத்திலும் அளவிட முடியாத மகிழ்ச்சி. அந்த சேலையை உடனே பிரித்துப் பார்த்தனர். அந்தப் பெண் மீண்டும் தன் மீது ப்ளீட்ஸ் வைத்துக் காட்ட முடியுமா எனக் கேட்டாள் . வைத்தபின் கண்ணாடியில் இப்படியும் அப்படியுமாக திரும்பி தன் தோழியை பார்த்து என்ன நினைக்கிறாய் என்று கேட்டாள். அவள் சற்று தள்ளி நின்று பார்த்து சூப்பர் என்று கூற தாங்கள் அந்த சேலையை எடுத்துக் கொள்வதாக கூறி அதை மடிக்க தொடங்கியபொழுது மல்லிகா தான் மடித்து தருவதாக கூறி கடைசியாக அந்த சேலையை ஆதூரத்துடன் மடித்தார். அதை அழகான ஒரு பையில் போட்டு அந்த பெண்ணிடம் கொடுத்தார். எங்கோ கடையின் மூலையில் இருப்பதைவிட, அந்த இளம்பெண்ணுடனான பயணம் இனிதாகவே இருக்கும் என எண்ணியவாறு மற்ற சேலைகளை மடிக்கத் தொடங்கினார்.

சாந்தி சிவகுமார்


32 பார்வைகள்

About the Author

சாந்தி சிவகுமார்

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்