Arts

சோழர்களின் வீழ்ச்சி

July 26, 2025 | துவாரகன் சந்திரன்

அன்றைய இரவின் வானம் மர்மத்தாலும், சதியாலும் சூழ்ந்திருந்தது. சோழ சாம்ராஜ்யத்திற்குள் ஆழமாக, பண்டைய கோட்டையின் பிரமாண்டமான மண்டபங்கள் அமைதியாக நின்றன. பேரரசின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ரகசிய சதித்திட்டத்தை அந்த மண்டபங்களின் சுவர்கள் எதிரொலித்தன. 

சுந்தரசோழனின் மகன், மாவீரன் ஆதித்தகரிகாலன் வீரமும் கௌரவமும் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்திருந்தான். ஆனால் அதற்குக் கீழ், அவருக்கு நெருக்கமானவர்களின் துரோகங்களாலும், சூழ்ச்சிகளாலும் அவருடைய மனம் குழம்பி இருந்தது. அவர்களில், சோழ நாட்டின் தளபதியும் ஆலோசகரான பெரிய பழுவேட்டரையர், கரிகாலனின் ஒவ்வொரு அடியிலும் நிழலாகத் தெரிந்தார். அரியணைக்கும், அவரது சோழ வம்சத்தின் எதிர்காலத்திற்கும் அச்சுறுத்தலாக இருந்தார்.

தன்னை எதிர்த்து எவரும் இருக்கக்கூடாது என்பதைக் கரிகாலன் அறிந்திருந்தான். சோழ சாம்ராஜ்ஜியம் செழிக்க வேண்டுமென்றால், பெரிய பழுவேட்டரையர் ஒழிக்கப்பட வேண்டும். ஆனால் வெளிப்படையாக இப்படி ஒரு காரியம் செய்வது அரிதல்ல. கழுகு தனது இரையைக் காப்பதுபோல், பெரிய பழுவேட்டரையரைச் சுற்றி காவலர்கள் எப்பொழுதும் இருப்பார்கள். இவர்களைத் தாண்டி, தடயம் இல்லாமல், சந்தேகம் எழாமல் அவரை வீழ்த்துவதற்கு கரிகாலன் திட்டமிட்டான்.

ஒர் நள்ளிரவு, சோழ நாடு உறக்கத்தில் இருக்கும் பொழுது, அரச அரண்மனையின் மங்கலான வெளிச்சம் கொண்ட அறைகளில், கரிகாலன் ஒருவருடன் அமர்ந்திருந்தான். மிகவும் தந்திரமான, துல்லியமான, நம்பிக்கைக்குரியவரான அவருடைய நண்பன், புகழ் பெற்ற ஒரு கொலைகாரரான வல்லவராயன் வந்தியத்தேவன். மிகவும் சாத்தியமற்ற பணிகளைக்கூட முடிப்பதில் சிறந்த வீரன் என்பதினால் மட்டும் அவரை இங்கு கரிகாலன் அழைத்து வரவில்லை. அவசியம் என்பதினால், இது வந்தியத்தேவனால் மட்டும் முடியும் என்பதினால். 

வந்தியத்தேவன் நாற்காலியில் சாய்ந்து, குழப்பத்தில் கரிகாலரைப் பார்த்தான். “இளவரசே, நீங்கள் என்னிடமிருந்து எதிர்பார்ப்பது சாதாரண விடயம் அல்ல. சோழ ராஜ்ஜியம் போர்களுக்கு புதிதல்ல, ஆனால் நீங்கள் கேட்பது… கொலை! இது ராஜ துரோகம். அதுவும் வேரொரு ராஜ்ஜியத்தின் மன்னரோ சிற்றசர்களோ இல்லை. பெரிய பழுவேட்டரையரை. சோழ நாட்டின் தளபதியை” 

ஆதித்த கரிகாலனின் கண்கள் தீபோல் எரிந்தன. வந்தியத்தேவனை நோக்கி முன்னோக்கி சாய்ந்தான். அவன் குரலைத் தாழ்த்தி, “பெரிய பழுவேட்டரையர் சிம்மாசனதிற்கு ஆசைப்படுகிறார். ஆனால் அவர் ஒரு நோய். அது நம் அனைவரையும் அழிப்பதற்கு முன்பு அதை அகற்ற வேண்டும். அவரை நெருங்கிச் செல்லக்கூடிய, சரியான தருணம் பார்த்து தாக்கக்கூடிய, எந்தத் தடயத்தையும் விட்டுச் செல்லாத ஒருவர் எனக்குத் தேவை. வந்தியத்தேவா, நான் உன்னை நம்புகிறேன். உன் திறமை எனக்குத் தேவை.” ஆதித்த கரிகாலன் தன் ஆசனத்தில் இருந்து எழுந்து தன் அருகில் இருந்த ஜன்னல் பக்கம் சென்றான். அந்த ஜன்னல் வழியாக முழு சோழ நாட்டையும் பார்த்தான். இரவிலும் வெளிச்சத்துடன் இருக்கும் நாடு. அவன் கண்கள் ஒவ்வொரு விளக்கையும் தொட்டுச்சென்றது. “பார் வந்தியத்தேவா, இந்த நாட்டின் அமைதியைக் கேள். இந்த அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், பழுவேட்டரையரைப்போல சூழ்ச்சியான, தந்திரமான சிந்தனைகள் இருக்கும் ஒருவரை வைத்துக்கொண்டு செயல்பட முடியாது. அது ஒரு கொடிய நோயோடு வாழ்வதுபோல் வந்தியத்தேவா” என கரிகாலர் விளக்கினான். 

கரிகாலனின் வார்த்தைகளில் உள்ள கனத்தை உணர்ந்த வந்தியத்தேவன் புருவத்தை உயர்த்தி, “ஆனால் நான் ஏன்? இதற்காக நீங்கள் நிச்சயமாக நூறு பேரை அனுப்பலாம். உங்கள் படையின் பலத்தை ஏன் நம்பக்கூடாது?”

இளவரசரின் முகத்தில் ஒரு தெளிவு. வந்தியத்தேவனை நாம் எமது வலையின் அருகே கொண்டு வந்திட்டோம் என ஒரு சிந்தனை. “ஏனென்றால் இது சத்தம் இல்லாமல் செய்யப்பட வேண்டும். பழுவேட்டரையர் நமது நோக்கங்களை அறிந்தால், முழு ராஜ்யமும் வீழ்ந்துவிடும். உங்களைப் போன்ற ஒரு மனிதரால் மட்டுமே எந்த அடையாளத்தையும் விட்டுச் செல்லாமல் நிழலோடு நிழலாக மறைய முடியும்” என இளவரசர் வந்தியத்தேவரை சமாதானப்படுத்தினான்.

வந்தியத்தேவன் ஒரு கணம் யோசித்துவிட்டு, தலையசைத்தான். “நான் இதை செய்து முடிக்கிறேன் இளவரசே. ஆனால் நிபந்தனைகள் இருக்கும். ஊதியம் பணிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். மேலும், பழுவேட்டரையரின் வீழ்ச்சிக்குப் பிறகு ராஜ்யம் நிலையாக இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.”

ஆதித்த கரிகாலன் கையை நீட்டி ஒப்பந்தத்தை முடித்தான். “வந்தியத்தேவா, உனக்கு மிகுந்த வெகுமதி கிடைக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன், இது மட்டுமல்லாமல், இந்த செயல், சோழ வம்சத்தின் எதிர்காலத்தையும் உறுதி செய்யும். பழுவேட்டரையரின் மரணம் வளமான ஆட்சியை நோக்கிய முதல் படியாக இருக்கும்”. 

கரிகாலன் வந்தியத்தேவரிடம் அருகே சென்று அவருடைய திட்டத்தை கூறினான். “இன்றிலிருந்து மூன்றாம் நாள், சோழ நாட்டின் சிற்றரசர்கள் எல்லாம் ஒரு ரகசிய சந்திப்பொன்றைத் திட்டமிட்டிருக்கிறார்கள். அந்த சந்திப்பிற்கு நானும் போக வேண்டும். அங்கேதான் இந்தச் சம்பவம் நடக்கவேண்டும். சிற்றரசர்கள் முன்னால் பெரிய பழுவேட்டரையர் வீழ்ந்தால்தான் அவரில் உள்ள நம்பிக்கை வீழும். அப்போது தெரியும்.”

இந்த வேலையின் கனத்தை இருவரும் புரிந்துகொண்டனர். பெரிய பழுவேட்டரையர் சாதாரண மனிதர்  அல்ல. ராஜ்ஜியத்தின் மீதான அவரது விசுவாசம், கேள்விக்குரியதாக இருந்தாலும், அவருக்கு அது கணிசமான செல்வாக்கை அளித்தது. இவர் வீழ்ந்தால் சோழ நாடு முழுவதிலும் ஒரு அதிர்ச்சி அலை பரவும். ஆனால் கரிகாலன் தனது அரசு நிலையை உறுதிப்படுத்தவும், சரியான அரச வாரிசாக தனது இடத்தை உறுதி செய்யவும் இதுவே ஒரே வழி என்று நம்பினார்.

சோழ சாம்ராஜ்யத்தின் தலைவர்கள் கோட்டையின் மையப்பகுதிக்குள் ஒரு தனிமையான மண்டபத்தில் கூடினர். அந்த அறை, நிழலும் மங்கலான வெளிச்சமும் நிறைந்து இருந்தது. அந்த அறைக்குள் ஒரு பெரிய மேசை இருந்தது. அதைச் சுற்றி சோழ சிற்றரசர்கள் அமர்ந்தனர். அவர்களுக்கிடையே முணுமுணுத்துக்கொண்டிருந்தனர். கதவாக அமைக்கப்பட்ட புத்தக அலமாரி திறந்தது. இருளில் இருந்து பெரிய பழுவேட்டரையர் தோன்றினார். சில சிற்றரசர்கள் எழுந்து மரியாதை செலுத்தினர், சிலர் அவரை பார்த்துவிட்டு அவர்களுக்கிடையில் இருந்த உரையாடலை தொடர்ந்தனர். பழுவேட்டரையர் இதை அமைதியாக கவனித்தார். இது நடந்து சில நேரத்தில் ஆதித்த கரிகாலன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான். இவரைக் கண்டதும் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தி வணக்கம் வைத்தனர். ஆனால் பழுவேட்டரையர் இருக்கையில் அமர்ந்திருந்தார். 

“இன்றைய கூட்டத்தின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் புரிந்துகொள்வோம் என்று நான் நம்புகிறேன்,” என்று கரிகாலன் தனது குரலில் உறுதியாகத் தொடங்கினான். “நமது ராஜ்ஜியத்தின் எதிர்காலம் நாம் இங்கு எடுக்கும் முடிவுகளைப் பொறுத்தது.”

சோழ சாம்ராஜ்யத்தின் தலைவர்கள் தலையாட்டினர், அவர்களின் முகங்களில் இளவரசனுக்கான மரியாதையும் பயமும் கலந்திருந்தன. ஆனாலும், யாரும் அவரது அதிகாரத்தை கேள்வி கேட்கத் துணியவில்லை. ஆனால் தளபதியின் கண்கள் கரிகாலனை விட்டு ஒருபோதும் விலகவில்லை. ஒரு கழுகைப் போலவே கரிகாலரைப் பார்த்துக்கொண்டிருந்தார். சிற்றரசர்கள் அவர்களுடைய வாதங்களை முன் வைக்கும் போது பழுவேட்டரையர் கரிகாலருடைய கண்களைப் பார்த்துகொண்டிருந்தார். இளவரசரின் பார்வையில் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது, ஆனால் அது என்னவென்று சரியாகக் கணிக்கமுடியவில்லை. 

விவாதம் மேலும் தீவிரமடைய, வந்தியத்தேவன் அமைதியாக மண்டபத்திற்குள் நுழைந்து, நிழலோடு நிழலாக தடையின்றிக் கலந்தான். அவனது கண்கள் பழுவேட்டரையர் மீது நிலைத்திருந்தன, அவர் அந்த முதியவரை துல்லியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். இடைகிடையில் ஆதித்த கரிகாலனின் கண்களை பார்த்துக்கொண்டிருந்தான். அவனும் சரியான தருணத்தை எண்ணிக் காத்திருந்தான். 

நாட்டின் நிலமையை பற்றிப் பேசக் கரிகாலன் எழுந்தான். “ராஜ்ஜியத்தில் அரச ஆசனத்தைப் பற்றியதான கதைகள் நிலவுவதாக பல செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் இந்தக் கதைகளை எதிர்க்க நாம் இன்னும் வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். பெரிய பழுவேட்டரையர் எப்போதும் விசுவாசத்தையும் வலிமையையும் பற்றிப் பேசியுள்ளார், ஆனால் அவரது செயல்கள் வேறுவிதமாக இருக்கிறது.”

தலைவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும்போது காற்றில் லேசான மாற்றம். ஒரு நுட்பமான பதட்டம். பழுவேட்டரையரின் பார்வை கடினமாகியது. “இளவரசரே, நீங்கள் ஆபத்தான நீரில் மிதக்கிறீர்கள். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் நமது ஒற்றுமையைக் குலைக்க நாம் அனுமதிக்கக்கூடாது. 

கரிகாலன் சிரித்தான், அவன் கண்கள் தளபதியின் கண்களுடன் மோதிக்கொண்டன. “சில நேரங்களில், மிகவும் ஆபத்தான துரோகிகள் உங்களுக்கு மிக அருகிலே இருக்கவும் வாய்ப்பு உள்ளதல்லவா பாட்டா.” பழுவெட்டரையரின் கண்கள் குறுகின. அந்த நேரத்தில், வந்தியத்தேவன் ஒரு நிழலைப் போல நகர்ந்து, அமைதியாக அறையைக் கடந்து சென்றான். ஒரு தலைசிறந்த கொலையாளியின் பயிற்சி பெற்ற திறமையுடன் ஒளிந்தான். அதே நேரத்தில் மண்டபத்திற்க்கு வெளியே ஒரு பெரிய சத்தம் கேட்டது. எல்லோரும் அவர்களை அவர்கள் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். காற்றில் லேசான மாற்றத்தை உணர்ந்தார்கள். ஆனால் அவர் எதிர்வினையாற்றுவதற்கு முன்பே, கருமை நிற உடை உடுத்தியவர்கள் மண்டபத்திற்குள் நுழைந்தார்கள். சிற்றரசர்களை வெட்ட முயன்றார்கள். மண்டபம் முழுவதும் பரபரப்பானது. இதற்கிடையில் ஆதித்தகரிகாலன் வந்தியத்தேவனின் கண்களை பார்த்து பழுவேட்டரையரைப் பார்த்தான். வந்தியத்தேவன் இதைப் புரிந்து நகர்ந்தான். 

கடம்பூர் கோட்டையைச் சுற்றி அடர்ந்த, பழங்கால மரங்களின் மீது நீண்ட நிழல்களைப் பரப்பி, சூரியன் மறையத் தொடங்கியது. எப்போதும் வேகமான மற்றும் அமைதியான உருவமாக இருந்த வந்தியத்தேவன், கோட்டையின் தூண்களுக்கு இடையே ஒரு நிழல் போல நகர்ந்தான், அவனது கண்கள் ஆழ்ந்த உறுதியுடன் எரிந்தன. மங்கலான ஒளியில் மின்னிய அவனது வாள், தாக்கத் தயாராக இருந்தது. அவனது இலக்கு: சோழப் பேரரசிற்கு, முதுகைத் திருப்பிய துரோகி பெரிய பழுவேட்டரையர். இன்றிரவு, அவரது துரோகத்திற்கான விலை இரத்தத்தால் செலுத்தப்படும்.

வந்தியத்தேவன் மின்னல் வேகத்தில் தாக்கினான்.  கொலையாளியின் மார்பில் காலால் உதைத்த தருணம், மரணம் அவன் எதிரில் நின்றது. 

கரிகாலன் அசையாமல் நின்றான். எப்போதும் உறுதியாக இருக்கும் வந்தியத்தேவனின் முகத்தில் குழப்பம் நிறைந்தது. பழுவேட்டரையருக்கும் அதே குழப்பம். “என்னை எதிர்த்து நின்ற இளவரசரா என்னைக் காத்து நிற்பது?” என நினைத்தார் தளபதி. “அரசே உங்க-” என வந்தியத்தேவன் தொடங்கும் போது கரிகாலன் தனது வாளால் வந்தியத்தேவனின் கழுத்தை வெட்டினான். கரிகாலனின் கண்களில் ஒரு தடுமாற்றமும் இருக்கவில்லை. 

கரிகாலன் தன் காலை பின்வாங்கினான், அவனது கத்தி இரத்தத்தால் நனைந்து அமைதியையும் மரணத்தின் வாசனையையும் மட்டுமே விட்டுச் சென்றது. தலைவர்கள் உறைந்து போய் அமர்ந்திருந்தனர், அவர்களின் பார்வை கரிகாலனை நோக்கி இருந்தன. இந்த சம்பவத்தில் இருந்து பெரிய பழுவேட்டரையரின் நம்பிக்கையை கரிகாலன் வென்றான். அத்தோடு, ரகசியக் கூட்டம் முடிவுக்கு வந்தது, இனி பெரிய பழுவேட்டரையருக்கும் ஆதித்தகரிகாலருக்கும் உறவு மாற்றப்பட்டது. நம்பிக்கையும் விசுவாசமும் குழப்பத்தில் மிதந்தது.

துவாரகன் சந்திரன்


161 பார்வைகள்

About the Author

துவாரகன் சந்திரன்

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்