ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற முதல் கூட்டம் அது. நம் பெரிய தல ‘புத்தாண்டு வாழ்த்துகள்’ என்று ஆரம்பிக்க, எல்லோரும் ‘நன்றி , உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்’ என்று பதில் சொன்னார்கள். நான் சும்மா இருக்கமுடியாது ‘இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்’ என்று சொல்லிவிட்டேன். தலையோட முகபாவனை ஒரு நக்கல் சிரிப்போடு மாறியது. அதை பார்த்ததும், புரிந்துவிட்டது. இன்னைக்கு நமக்கும் புத்தாண்டு இல்லை, பெரிய தீபவாளிதான்.
அடுத்து நடந்த உரையாடலை, அப்படியே வடிவேலையும், பார்த்திபனையும் நினைத்துக்கொண்டு படிக்கவும்.
பார்த்தி: “அது என்ன ஆங்கிலப் புத்தாண்டு?”
வடி: “ஹலோ, தமிழ் புத்தாண்டு, சைனீஸ் புத்தாண்டு மாதிரிதான் இது”
ஒரு ஏத்ததுடன்தான் நான் பதில் சொன்னேன்..
பார்த்தி: “அது ஏன் தமிழ் புத்தாண்டு , சைனீஸ் புத்தாண்டு என்று சொல்லவேணும்?”
ஆஹா இன்னைக்கு அந்தாளுதான் நம்மகிட்ட மாட்டுனது என்ற சந்தோசத்தில் நான் தொடர்ந்தேன்.
வடி : “ஹையோ ஹையோ , இது கூடத் தெரியல, அந்தந்த மொழியோட வருட கால அட்டவணைப்படி அவங்க புத்தாண்டு கொண்டாடுறதால தமிழ் புத்தாண்டு, சைனீஸ் புத்தாண்டுன்னு சொல்லுறோம்”
பார்த்தி: “அப்போ, ஜனவரி ஒண்ணு புது வருடம்னு சொல்லுறது ஆங்கில அட்டவணையா?”
ஆஹா கேள்வி கேக்குற தொனியை பார்த்தா இந்த முறையும் நாமதான் பலி ஆடு என்று தெரிந்துவிட்டது. ஆனாலும் மீசைல மண்ணு ஒட்டவில்லை என்று அடம்பிடித்துப் பார்க்கலாம்.
வடி: “ஆமா ஜூலியன் அட்டவணை ஆங்கில அட்டவணை தானே?”
பார்த்தி: “ஓஹோ ஜூலியன் இங்கிலீஷ்காரனா? எந்த ஊரு? அமெரிக்காவா இல்லை பிரிட்டிஷா?”
வடி: “ஆஹ் அது அது வந்து….”
பார்த்தி : “முதல்ல , இப்போ உலகத்துல அதிகமா பயன்பாட்டுல இருக்குறது ஜூலியன் இல்லை. கிரிகோரியன் காலண்டர்.
கி.மு 45ல் ஒரு உரோமன் ஜெனரல்தான் ஜூலியன் அட்டவணையை வரையறுத்தார். ஆனால் அந்த அட்டவணையை 1582ம் ஆண்டு மாற்றி வரையறுத்தது போப் கிரிகோரியன் அவர்கள். இந்த அட்டவணைதான் ஜனவரி ஒன்றாம் திகதியை ஆண்டின் முதல் நாளாகக் குறித்தது. உங்க ஆங்கில தாராள பிரபுக்கள் ரொம்ப நாள் பின்னாடி, 1752ம் ஆண்டில்தான் இத்னைப் பின்பற்றவே ஆரம்பித்தார்கள். இப்ப சொல்லுங்க. இது எப்பிடி ஆங்கிலப் புத்தாண்டு ஆகும்?
அதனால எந்த எடத்துல எண்ணெய்க் கிணறு இருந்தாலும் அது எங்க ஊருன்னு சொல்லுற உங்க ஆங்கில பிரபுக்கள் இந்த கிரேக்க அட்டவணையை அவர்களது என்று வியாபாரமயமாக்கிவிட்டதை இன்றுவரை தெரியாமல் ஆங்கிலப் புத்தாண்டு சொல்லுற உங்கள மாதிரி ஆள் இருக்குறவரைக்கும் அட்டவணையில் இருந்து அதைத் தொங்க விடுற ஆணிவரைக்கும் ஆங்கிலச் சொத்து என்றாலும் அதை ஏன் என்று கேட்க ஆளும் இல்லை, இருந்தாலும் கேட்கத் தோன்றுவதும் இல்லை”
எனக்கு வியர்த்துவிட்டது. ஆஹா ஒரு புத்தாண்டு வாழ்த்து சொன்னதுக்கு இப்படி காதுல ரத்தம் வர வச்சுட்டாரே இந்த ஆளு. இனிமே எல்லாத்துக்கும் ஒரே வாழ்த்துதான் சொல்ல போறேன்
பார்த்தி : என்னது ?
வடி: “காலையில குட் டே சொல்ற மாதிரி குட் இயர்ன்னு சொல்லிட்டு போறேன். ஆள விடப்பா.”
பார்த்தி: “இப்பவும் ஆங்கிலகாரன் சொன்னதைத்தான் காப்பி அடிக்கணுமா?”
வடி: “ஐயா சாமி ஆள விடு , நான் யாருக்கும் என்னைக்கும் எந்த வாழ்த்தும் சொல்லல, போதுமா?”
பார்தி: அட அப்படி இல்ல. வாழ்த்து சொல்லுறது ஒரு பெரிய விசயம், அது சொல்லும்போது சொல்றவங்க மனசுல மட்டும் இல்லை கேக்குறவங்க மனுசுலயும் அது ஒரு பெரிய சந்தோசத்தை குடுக்கும். அப்படி ஒரு அழகான விஷயத்தில் அரசியல் , அலங்கார வார்த்தைகளை சேர்க்காமல் அந்த மொழியில் உள்ள எளிமையான , இனிமையான வார்த்தைகளால் வாழ்த்து சொன்னா போதும்..