Arts

புலம்பெயர் வாழ்க்கையில் நான் கண்ட நன்மை தீமைகள் ***மூத்தோர் உள்ளத்திலிருந்து***

July 26, 2025 | சிவயோக ராணி யோகானந்தன்

நான் படிக்கும் காலத்தில் உலகில் மிகச் சிறிய கண்டம் அவுஸ்திரேலியா எனப் படித்த போது ”அட அப்படியா” என என்மனதில் ஒரு அதிருப்தி ஏற்பட்டது. ஆனால் இங்கே வந்து கால் பதித்ததும் முன்பு படித்தது மாபெரும் தவறு என நினைக்கும் அளவுக்கு இந்தச் சிறிய கண்டத்தில் இத்தனை விந்தையா? இத்தனை அழகா? எத்தனை எத்தனை புதுமை என நோக்கும் இடமெல்லாம் பச்சைப் பசேல் என்ற வண்ணம் கண்டு வியப்பின் விளிம்பிற்கே சென்று மகிழ்ந்தேன். மிதிக்கும் புல் எல்லாம் பூப்பூக்கும் புதுமையைக் கண்டு பூரித்துப் போனேன். நான் பிறந்த ஊரிலே ஒரு ரோஜாப்பூ மலர்ந்தால் அது எனக்கு உலக சாதனை போன்று தோன்றும். ஆனால் இங்கே திரும்பும் திசையெல்லாம், பார்க்கும் பக்கம் எல்லாம் வண்ண வண்ண எழில் கொஞ்சம் வகையில் இலைகளைத் தோற்கடிக்கும் அளவிற்கு ரோஜா மலர்களின் எழிலும் ஏனைய பல்வகை வண்ண மலர்களின் இணையற்ற அழகும் என் மனதைக் கொள்ளை கொண்ட முதல் விடயமாகும். இத்தகைய நிகழ்வு எனது மனதிற்கும் கண்ணிற்கும் ஒன்று சேர்த்து மிகையற்ற மகிழ்வை உண்டாக்கியது.

 மற்றும் மிக முக்கியமாக எமது நாட்டிலே முதுமையோடு இயலாமை, இயங்காமை, தனிமை, பொருளாதாரம் பற்றிய கவலையும் சேர்ந்து கூடவே வாட்டத் தொடங்கும். வாழ்க்கையே கேள்விக்குறியாய் உருவெடுக்கும். ஆனால் இங்கே யாவரையும் விட முதியோரின் தவறாது தவழும் புன்னகை கண்டு வியந்தேன். நடுத்தர வயதினரைவிட முதியோர்தான் சகல வகையிலும் நிறைவாக வாழ்கிறார்கள். ஏனெனில் இந்தப் புலம்பெயர் நாட்டிலே முதியோருக்கான மிக நிறைவான ஓய்வூதியம் கிடைப்பது மிக மிகப் போற்றிற்குரியது. அத்துடன் வைத்திய வசதிகள், போக்குவரத்து வசதிகள், குடியிருப்பு வசதிகள் போன்றவற்றால் முதியோருக்கான ஒரு உயர்ந்த அந்தஸ்தை அளித்த இந்த புலம்பெயர் நாட்டை பாராட்டாமல் போற்றாமல் இருக்க முடியுமா ? எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கவலையை இல்லாதொழித்து மனதளவிலும் உடலளவிலும் மகிழ்வையும் நிம்மதியையும் அளித்த இந்த புலம்பெயர் நாட்டிற்குத் தலை வணங்குகிறேன். 

மேலும் வீதி ஒழுங்குமுறை என்னைப் பிரமிக்க வைத்தது. நம் நாட்டில் பாதசாரிக்கடவையிலேயே விபத்தை ஏற்படுத்தும் நிகழ்வைச் சந்தித்த எனக்கு இங்கு நடைமுறைப்படுத்தப்படும் வீதி ஒழுங்கு முறையும், பாதசாரிகளுக்கும் துவிச்சக்கர வண்டிகளுக்கும் பிரத்தியேக பாதையும், பாதசாரிக்கடவையில் நாம் நின்றிருந்தால் குறிப்பிட்ட தூரத்தையும் விடப் பல அடி தூரத்துக்கு அப்பால் வாகனத்தை நிறுத்துவதும், நாங்கள் காத்திருந்தால் சைகை காட்டி நாம் போகும்வரை காத்திருந்து செல்லும் மனிதாபிமானம் கண்டு ஆச்சரியமடைந்தேன். மற்றும் அரச பேருந்துகள் ஒரே ஒரு பயணிக்காக என்றாலும் கட்டாயமாகச் செல்லும் சேவையின் மகத்துவத்தை அனுபவத்தை நானும் பெற்றுக் கொண்டேன். பேருந்து நிலையங்களில் காணப்படும் நேர அட்டவணையில் ஒரு நிமிடம் கூட தவறாது சமூகமளிக்கும் உன்னத சேவையை நான் முன்னொருபோதும் எங்கும் எப்போதும்  கண்டதில்லை. அனுபவித்ததில்லை. அதேபோன்று புகையிரத நிலையங்களிலும் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு வினாடி கூட தவறாது தாமதிக்காது நடைபெறும் உயர்ந்த சேவையின் ஒப்பற்ற நிர்வாகத்திறன் கண்டு பிரமித்தேன்.

 மற்றும் தெரிந்தவர்களோ தெரியாதவர்களோ எங்களைக் கடந்து செல்லும்போது புன்னகை பூத்த முகத்துடன் ”ஹலோ” எனக் கூறும்போது பிரிந்திருக்கும் தாய், தந்தை, சகோதரர்கள், உற்றார் உறவினர் நினைவுக்கு வந்து வாடி இருக்கும் பயிர் வான்மழையைக் கண்ட செழிப்பும் மகிழ்ச்சியும் மனதில் ஏற்படுகின்றது. ஒருசில நிமிட நேர மனிதநேயம் மனதில் பல மணி நேரப் பரவசத்தை ஏற்படுத்த ஏதுவாய் இருக்கின்றது. அந்த மகத்தான பண்பு கண்டு வியக்காமல் இருக்க முடியுமா?

முக்கியமாக வைத்தியசாலையில் இலவச சிகிச்சையைத் தந்து நோயாளிகளைக் கவனிக்கும் திறன் நம்மை மெய்சிலிர்க்க வைத்தது. ஏனெனில் இத்தகைய கவனிப்பு பல லட்சம் கொடுத்தும் நாம் முன்னொருபோதும் கண்டதில்லை. அனுபவித்ததில்லை. எந்த புகழ்பெற்ற வைத்தியரானாலும் காத்திருக்கும் நோயாளியை அவரே வந்து கூட்டிச்செல்லும் மனிதப் பண்பு கண்டு மெய்சிலிர்த்தேன். சேவையில் உள்ளவர்களின் கனிவான பேச்சு, இதமான பராமரிப்பு, புன்னகை சிந்தும் முகம் கண்டு பூரித்துப் போனேன். அவசர சேவைக்குப் பயன்படும் அம்பியுலன்ஸ் சேவையின் துரித செயல்பாடு, முதலுதவி, சிகிச்சைச் சிறப்பு கண்டு மனிதாபிமானம் உள்ள எவராலும் பாராட்டாமல் வியக்காமல் இருக்க முடியாது.

 ஆனாலும், அவசரத்துக்கு வைத்தியரின் சிபாரிசு இன்றி எந்த மருந்தும் மருந்துச்சாலைகளில் வாங்க முடியாது. அந்த விடயம் மனதுக்கு அதிருப்தியை ஏற்படுகிறது. ஏனெனில் முன்பு நாங்கள் அப்படிப் பழக்கப்படவில்லையே. மேலும் முக்கியமாக நோயின் நிமித்தம் வைத்தியர் சிபாரிசுடன் மருந்து வாங்கச் சென்றால், ஐந்து நாட்கள் பயன்படுத்த வேண்டிய மருந்தென்றாலும் அதற்கு ஏற்றாற்போல் கொடுக்காது 10 அல்லது 20 உள்ள மாத்திரைப் பெட்டிகளைத் தருவார்கள். ஐந்து நாட்களில் நோய் மாறிவிடும். மிகுதி மாத்திரைகள் மாதக் கணக்கில் நிலுவையில் இருக்கும். அவற்றைப் பட்டியல் பெயர் விபரம் எழுதி, பத்திரப்படுத்தி மீண்டும் பல மாதங்களின் பின் பாவிப்பது கஷ்டமும் சிரமமுமே என்பதை உணருகின்றேன்.

 சிலசமயம் நாம் விரும்பிய இடத்துக்குச் செல்ல முடியாத இக்கட்டான நிலையம் ஏற்படுவதுண்டு. யாதெனில் வாகன வசதியின்றி அனேகமாக இங்கு வாழ்வது மிக மிகக் கஷ்டமே. வாகன வசதிக்காக குடும்பத்தினரை எதிர்பார்க்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்படும் துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக்கப்படுகின்றோம். அங்கே நாங்கள் விரும்பிய இடத்திற்கு சுயமாகவே சென்று வருவது மனதில் வந்து வாட்டமுற வைத்தது. அங்கே எங்களுக்குக் கிடைத்த பலரது சரீர உதவி, ஒத்தாசை, உபசரிப்பு, இனசன பந்தம் யாவற்றையும் இழந்து ”தனிமரம் தோப்பாகாது” என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு மனதுக்குள் பொருமுகிறோம். மேலும் அங்கே சந்தோஷம் எங்கள் இருப்பிடத்தைத் தேடி வந்தது. இங்கே சந்தோஷத்தைத் தேடி நாங்கள் போக வேண்டியுள்ளது. யாவரும் ஒன்று கூடல், உடற்பயிற்சி, பலரும் ஒன்று சேர்ந்து சுற்றுலா செல்லல் ஆகிய நிகழ்வுகள் மூலம் தனிமை வெறுமைக்கு இடமளிக்காது மனதை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் ஆக்கிக் கொள்ளப் பழகிக் கொண்டோம்.

இந்த நாட்டின் குளிர்காலம் எம்மை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது. பிறந்ததிலிருந்து மிதமான வெப்பநிலையையும் அளவான குளிரையும் தாங்கிய நமது உடல் இங்கே ஆயிரம் ஊசியை ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் குத்தியது போன்ற குளிரால் தாக்கப்பட்டுத் துவண்டு விடுகின்றோம். ஆனால் மற்ற நாடுகளைப் போன்று பனிக்கட்டியால் சூழப்படும் இக்கட்டான சூழ்நிலையும் அவற்றை அப்புறப்படுத்தினால்தான் வழியே போக முடியும் என்ற அவலநிலையும் இறைவன் இங்கே அளிக்காதது இந்த நாட்டுக்கே உரிய சிறப்பாகும். குளிரால் துவண்டு போகும்போது நமது உடலையும், உள்ளத்தையும், புலம்பெயர்நாட்டின் பலவித சலுகைகள், வசதி வாய்ப்புகள், இன்னோரன்ன பலவகை காரணங்களும் குளிரைத் துச்சமென நினைத்து நம்மை நிமிர்ந்து நிற்க வைக்கின்றது. இங்கேயே நிரந்தரமாகக் காலூன்ற வைத்துப் பெருமை அடையச் செய்கின்றது.

மேலும் பல்பொருள் அங்காடிகளில் தரம் நிறைந்த பொருட்களும், ஒரு குறிப்பிட்ட தினத்திற்குப் பின்னர் அதன் அரைவாசி விலையில் கொள்வனவு செய்து மகிழும் உன்னத செயற்பாடு கண்டு வியந்தேன். எத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும், சந்தர்ப்பங்களிலும் குறித்த விலைக்குப் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடிந்ததை மகிழ்வுடன் சிந்திக்க வைத்தது. ஏனெனில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பல மடங்கு விலை கொடுத்து வாங்கி பழக்கப்பட்டவர்கள் நாங்கள். வியக்க வைத்த நன்மைகளில், மனதைக் கவர்ந்த விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.

 சகலவிதமான கடல் உணவுகளும், மரக்கறி வகைகளும், மாமிச உணவுகளும் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தாலும் தாராளமாகக் கிடைத்தாலும் சுவையில் ”நம்மூரைப் போல வருமா” முதுமொழி நினைவுக்கு வருகின்றது. ”பச்சைத் தண்ணீரில் பதினாறு சுவை உண்டு” என முன் இருந்த சித்தர்கள் சொன்னதுபோல் அங்கு பச்சைத் தண்ணீரைக் குடித்தாலும் சாப்பாடு சமைத்தாலும் அந்த சுவையும் வாசனையும் கோடி கொடுத்தாலும் இங்கே பதனிடப்பட்ட உணவுகளில் கிடைக்காதது கவலையும் ஏக்கமுமே. இழந்ததை நினைக்க இனிக்கத்தான் செய்கிறது. எனது பள்ளிப் படிப்புடன் முற்றுப்பெற்ற எனது எழுத்து பல தசாப்தங்களின் பின்னர் புலம்பெயர் நாட்டிலே தான் மீண்டும் துளிர்விட்டது. என் எழுத்தைப் பல வழிகளாலும் பிரகாசிக்க வைத்ததும் இந்த புலம்பெயர் நாடுதான். பலராலும் என் பெயர் உச்சரிக்கப்பட்டதும் கௌரவிக்கப்பட்டதும் இந்த பொன்னான புலம்பெயர் நாட்டிலே என்று கூறி பெருமிதம் அடைகிறேன்.

கடைசியாக அங்கே உங்கள் இனசன பந்தங்களைக் கண்டு களிப்படைந்த கண்களும் மனமும் இங்கே உள்ள அயலவர்களை ஏக்கத்துடன் பார்த்து மனதுக்குள் வெதும்புகிறோம். 

இருந்தாலும் “சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா” என்ற வரிதான் நினைவிற்கு வருகின்றது. நமது மொழியின் இனிய நாதம் போல உலகில் எங்கு தேடினாலும் கிடைக்குமா ? இனியும் கிடைக்காது. பல்லாயிரம் சலுகைகள் சுகபோகங்கள் வசதி வாய்ப்புகள் இருந்தும் நமது தாய் மண்ணில் கால் பதிக்கும்போது மேற்சொன்னவை யாவும் துரும்பாகத் தெரிவதுடன் அப்போது ஏற்படும் பரவச நிலை ஆயிரம் கோடி கொடுத்தாலும் என்றும் எங்கும் கிடைக்காது எனக் கூறி முடித்துக் கொள்கிறேன். 

சிவயோக ராணி யோகானந்தன்


133 பார்வைகள்

About the Author

சிவயோக ராணி யோகானந்தன்

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்