என்றுமே இல்லாதவாறு எனது கையடக்கத் தொலைபேசி கடந்த மூன்று நாட்களாக ஓய்வின்றி அழைத்தவாறே உள்ளது. நண்பர்கள், உறவினர்கள், உற்றார், தெரிந்தோர், தெரியாதோர், அறிந்தோர் மற்றும் அறியாதோர் என தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக்களைத் தெரிவிப்போர் ஒரு பக்கம். முக நூல்களிலும், சமூக ஊடகங்களிலும், குறுஞ்செய்திகளிலும் பாராட்டுவோர் ஒரு பக்கம். இதற்கு மேலாகப் பூச்செண்டுகள், வாழ்த்து மடல்கள் மற்றும் பரிசுகள் வீட்டு வாசலில் நிறைந்திருந்தன. இன்னும் இரு நாட்களில் எனக்கு விருதும் வழங்கப்போகின்றார்கள். இந்த அளவு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெறுமளவுக்கு நான் என்ன செய்தேன்? என்னுடைய 70 வருட வாழ்க்கையில் மருத்துவத் துறையில் எத்தனையோ சத்திர சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்திருக்கின்றேன். பல்லாயிரம் உயிர்களைக் காத்திருக்கின்றேன். இலங்கையிலே போர்ச் சூழலில் ஆயிரமாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டபோது உயிரைப் பணயம் வைத்து, குடும்ப நலனுக்கு மேலாகப் போர்க்களத்தில் வைத்திய சேவை செய்திருக்கின்றேன். உயிராபத்து, அச்சுறுத்தல் என இராணுவத்தினாலும், பல அரசியற்கட்சிகளாலும் விடுக்கப்பட்ட போதிலும் எதனையும் கண்டு அஞ்சாது, துச்சமாகத் தூக்கி எறிந்து மருத்துவ சேவையே மகேசன் சேவை என வாழ்ந்திருக்கின்றேன். அப்போது கூட இந்த அளவிற்கு நான் பாராட்டப்பட்டேனா?
மூன்று தலைமுறைகளாக எனது குடும்பம் வைத்தியர்களால் நிறைந்திருந்தது. என்னுடைய அப்பப்பாவின் அப்பா ஒரு அப்போதகர். சாவகச்சேரியில் அவரைத் தெரியாதவர் இருக்க முடியாது. எனது அப்பா ஒரு சத்திர சிகிச்சை நிபுணர். அம்மா யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதான தாதி(head nurse). நானும் அப்பா வழியில் ஒரு சத்திர சிகிச்சை நிபுணர். என் மனைவி சித்ரா ஒரு மகப்பேறு வைத்தியர். எனது தம்பி குழந்தைகள் நல வைத்தியர். சொல்லப்போனால் குடும்பமே ஒரு வைத்தியக் குடும்பம் எனப் பலரும் பாராட்டுவார்கள். 1996 ஆம் ஆண்டு புகலிடம் கோரி ஆஸ்திரேலியாவுக்கு வந்த போது எனது மகன் ராகுல் பிறந்து மூன்று மாதக் குழந்தை. பிறந்த ஊரையும் மக்களையும் சொத்துக்களையும் விட்டு யாரும் இல்லாத நாட்டில் வாழ்க்கையை மீளவும் அடிமட்டத்திலிருந்து தொடங்குவது எவ்வளவு கடினமானது என்பது நாட்டை விட்டு வெளியேறிய ஒவ்வொருவருக்கும் புரியும். வார்த்தைகளால் அந்த வலியை விவரித்துவிட முடியாது. நானும் இந்த விதிக்குள் உட்பட்டவனே. ஒருவாறாக இதுவும் கடந்து போனது. இரவு பகலாய் ஆஸ்திரேலியா நாட்டில் பரீட்சைக்குப் படித்து, பகுதி நேர வேலைகளுக்குச் சென்று எனது மருத்துவச் சேவையை இங்கும் தொடங்கினேன். எனக்கும் என் மனைவி சித்ராவிற்கும் அத்தனை வளங்களை இழந்த பின்பும் இருந்த ஒரே கனவு எப்பாடுபட்டாவது ராகுலை நல்ல வைத்தியனாக உருவாக்க வேண்டும் என்பதுதான். ராகுலும் பாடசாலையில் அனைத்துப் பாடங்களிலும் நன்கு சிறந்து விளங்கினான். ஆசிரியர்களாலும் அதிபராலும் பாராட்டப்பட்டான். அவனது திறமை அவனை மட்டும் அடையாளப்படுத்தவில்லை. எம்மையும் அடையாளப்படுத்தியது. இதைத் தவிரவும் கால்பந்து விளையாட்டிலும் ஆர்வமாக ஈடுபடுவான். அவனது உடல்வாகு அதற்குப் பெரிதும் ஒத்துழைக்காத போதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து பயிற்சி செய்வான். சொல்லப் போனால் அவனது விடாமுயற்சியைக் கண்டு நானும் சித்ராவும் பலமுறை பிரமித்ததுண்டு. ஆனாலும் கல்வியிலும் அவன் சிறந்து விளங்கியதால் நாம் எதுவும் சொல்வதில்லை. இப்படி இருக்கின்றபோது vce பரீட்சையில் ராகுல் மிகச்சிறந்த சித்தியையும், மருத்துவத்துறைக்குத் தேர்வாகப் போதுமான ATAR புள்ளிகளையும் பெற்றிருந்தான். நானும் சித்ராவும் அவனை எந்தப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் கற்கச் சொல்லலாம், அதன் பின் ஏதாவது மேற்படிப்பு, தொழில் எனக் கற்பனையில் மிதந்து கொண்டிருந்தோம். பிள்ளைகளைப் பெற்றதன் பின்னர் பெற்றோரின் வாழ்க்கை அவர்களைச் சுற்றியே அமைகிறது. அவர்கள் பெறுகின்ற வெற்றிகள் தாம் பெற்ற வெற்றிகளை விடப் பல மடங்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. அன்று நாங்களும் அவ்வாறான வெற்றியில் திளைத்திருந்தோம், மகிழ்ந்திருந்தோம். ராகுலோ எமக்கு ஒரே பிள்ளை. அவனை அன்றி எமக்கு வேறு உலகம் இல்லை.
அன்று நண்பர்களுடன் வெற்றியைk கொண்டாடிவிட்டு வந்தவன் ”அம்மா அப்பா நான் உங்களோட கொஞ்சம் discuss பண்ணோணும்”
”சொல்லு ராகுல். மொனாஷ் யுனிவர்சிட்டி வேணுமா அல்லது யுனிவர்சிட்டி ஆஃப் மெல்பன் நல்லமா? இல்லை வேறு நாட்டுக்குச் சென்ற படிக்கப் போகிறாயா. எதுவென்றாலும் எனக்கும் அம்மாவுக்கும் ஓகேதான்” என்றேன்.
“அதில்லை அப்பா. நான் காற்பந்து விளையாட வேண்டும். நல்ல காற்பந்து வீரனாக வரவேண்டும். வெற்றிகள் பல பெற வேண்டும்.”
”என்ன ராகுல், உனக்கு என்ன ஆச்சு? நீ ஒரு வைத்தியனாக வரவேண்டும். அதற்குத்தானே எல்லாமே”
”ஆனால் அப்பா soccer எனது passion. எனக்கு அதில்தான் ஈர்ப்பு அதிகம். அதனால்….” அவன் முடிப்பதற்குள்
”போதும் ராகுல் உன் முட்டாள்த்தனத்தை மூட்டை கட்டி வை. இந்த சுப்ரமணியன் பெடியன் பரத்தான் உன் மூளையைக் கெடுத்திருப்பான். எல்லாம் அவனால்தான். தேவையில்லாமல் உன்னைக் கிளப்பில் சேர்த்து விட்டவன். நான் அப்ளிகேஷன் fill பண்ணுகிறேன். உனக்கு எந்த யூனிவர்சிட்டியில் மெடிசின் படிக்க விருப்பம் என்று சொல்லு.” என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றேன்.
எதற்கும் தளராத நான் செய்வது அறியாது நிலை குலைந்து நின்றேன். பரம்பரை வைத்தியர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் நாங்கள். மருத்துவத் துறையிலே கைதேர்ந்தவர்கள். அப்படிப்பட்ட பேர்போன குடும்பத்திலிருந்து வந்தவன் காற்பந்துத்துறையிலா? நாடு விட்டு நாடு வந்தது இதற்காகத்தானா? என்னுடைய தம்பியின் மகன் கூட மருத்துவம்தான் படிக்கின்றான். அப்படி இருக்கையில் ராகுல் மட்டும் எப்படி? சொந்தக்காரர்கள் சிரிப்பினம். சமூகம் என்ன சொல்லும். நான் தோற்றவனாகி விடுவேன். சித்ரா எப்படி எனக்குச் சமாதானம் சொல்வதென்று தெரியாது நின்று கொண்டிருந்தாள்.
எது எவ்வாறாக இருந்தாலும் ராகுல் தனது முடிவில் திடமாக இருந்தான். பலரும் பேசிப் பார்த்தோம். அவன் முடிவில் மாற்றம் இல்லை. கடைசியாக என்னிடம் வந்த சித்ரா ”நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கோ. விருப்பமில்லாத துறையில் அவனை வலுக் கட்டாயமாகத் திணிக்க முடியாது. சமூகத்தின் வசைமொழிக்குப் பயந்து எங்கட மகனிண்ட வாழ்க்கையை முடிவு செய்யக்கூடாது. உங்களுக்கு மருத்துவத்துறை பிடித்த ஒன்று. ஆனால் ராகுலுக்கு அது பிடிக்கவில்லை.”
“என்ன விசர்க்கதை கதைக்கிறீர். உமக்கு டாக்டராக வர விருப்பம் இருக்கவில்லை. டீச்சர் ஆகவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டீர். ஆனால் இன்றைக்கு நீர் எவ்வளவு நல்லா இருக்கிறீர். உம்முடைய அம்மா அன்றைக்கு உம்மை force பண்ணினதால்தான் இந்த வாழ்க்கை உமக்கு கிடைத்தது.”
”ராம், ஆனால் பிடித்த தொழில் செய்வதற்கும் தொழிலைப் பிடித்ததாக மாற்றுவதற்கு வித்தியாசம் இருக்கின்றது அது உங்களுக்குப் புரியாது. இழந்தவனுக்குத்தான் வலி தெரியும். சொல்வதைக் கேளுங்கோ. மருத்துவம், பொறியியல், சட்டம் என்று ஒரு சில துறைகள்தான் உயர் தொழில் என்று சொல்லும் குறுகிய எண்ணம் உடையவர்களாக நாங்களும் இருக்கக்கூடாது. கண்டிப்பாக ராகுல் உங்களுக்குப் பாராட்டுகளை வாங்கிக் கொடுப்பான். நம்புங்கோ. அவனது முடிவை நீங்கள் ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை. குறுக்க நிக்க வேண்டாம். எனக்காகவாவது இதை செய்யுங்கள்.”
சித்ராவின் வார்த்தைகள் என்னைச் சமாதானப்படுத்தவில்லை. ஆயினும் அவளது வேண்டுகோளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனத்தோன்றியது. எப்போதும் தூரநோக்கில் அவள் முடிவெடுப்பவள். அத்தோடு இதற்கு மேல் போராடிப் பயனில்லை என்று மௌனம் காத்தேன்.
வருடங்கள் கடந்தன……..
இன்று இத்தனை பாராட்டுகளும் வாழ்த்துக்களும் நான் மருத்துவத்துறையில் செய்த சாதனைகளுக்காகவில்லை. எனது சமூக சேவைக்கும் இல்லை. எனக்கு கிடைத்த விருது, சாதனையாளனைப் பெற்றதற்காக. அன்று எந்தத் துறையை ஒரு பொருட்டாக நான் கருத மறுத்தேனோ, அந்தக் கால்பந்துத் துறையே என் மகனை சாதனையாளனாக மாற்றி இருக்கின்றது. மகனின் அபிலாசைகளுக்கு மதிப்பளித்துத் துணிந்து அவனுக்கு உறுதுணையாக நின்றவர் என்று அந்த நிகழ்வின் பிரதம விருந்தினர் என்னைப் புகழ்ந்து ஆற்றிய உரை என்னை ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைத்தது. இந்த பாராட்டுகளுக்குரிய என் மனைவி சித்ரா எனக்கு அருகில் இல்லை. இந்த உலகத்திலும் இல்லை. அவள் தீர்க்கதரிசிதான்.
இன்று நானோ ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக் கேட்ட தந்தையாய்……., கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர்த் திவலைகள் இதற்கு சாட்சியாய்………..