
தச்சனின் மகளுக்குத் திருமணம், வசதி படைத்தவன் அல்ல தச்சன். மகளின் மீது கொண்ட பாசத்தால் உலக பணக்காரர்களை விட வசதி படைத்தவன். அவளின் திருமணத்தை நினைத்தவுடன், அவளுக்குப் பரிசாக ஏதேனும் சிறப்பானதை உருவாக்க வேண்டும் என்ற ஆசை, அவரின் நெஞ்சை நிரப்பியது. கட்டில் செய்ய வேண்டி, மரத்தை தேர்ந்தெடுக்க காட்டுக்குள் நுழைந்தான். அது பெரும் அடர்த்தியான காடு இல்லை என்றாலும், பலதரப்பட்ட மரங்கள் நிறைந்து வனப்புடன் காணப்பட்டது. மரங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்திருந்தன.
அதில் சில மரங்கள் சாமுத்ரிகா லட்சணங்களை கொண்டது போல வளைவு நெலிவுடன் இருந்தன, அழகன்,அழகி போட்டிக்கு போகும் போல; சில ஆஜானுபாகுவாய் நிமிர்ந்து உயர்ந்து முரட்டுத்தனமாக நின்றன, நிதம் 100 தண்டால் எடுப்பவை போலும், இன்னும் சில, இங்கும் அங்கும் சுருண்டு, ஒரே நேர்த்தியில்லாமல் பரவி வளர்ந்தன, சிலர் இவ்வாறு இருப்பதுண்டு, ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்று, ஆனாலும், அவர்கள் வாழ்வில் மிகவும் சந்தோஷமாக தான் இருப்பர்.
சில அதன் கிளைகளை படரவிட்டு அருகில் இருக்கும் தன் காதல் மரத்தை சதா தழுவிக் கொண்டு இருந்தன, மற்றும் சில , தொன்மைக் கால சிற்பங்கள் போல அசையாமல் ,அமைதியுடன் நின்றன. இன்னும் சில ஒற்றைத் தூணைப் போல ஒரே திசையில் நேராகத் தங்களைக் கொண்டு சென்றன, நேர்மையான, ஒழுக்கசீலன் போலும்.
இன்று தச்சனின் கோடாரியில் சிக்கப் போகிறவர் யார் என்று தெரியாமல், தங்களுக்குள் பெருமை பேசிக் கொண்டிருந்தன அந்த மரங்கள். அழகி மரம் தன் பெருமை பாட ஆரம்பித்தது. தச்சனின் மகள் என்னைப்போல் அழகு மிகுந்தவளாக இருக்கக்கூடும், அதனால் அவன் என்னைத்தான் தேர்ந்தெடுப்பான் என்றது. ‘அதெப்புடி, என்னைப்போல் பலசாலி தான் கட்டிலுக்கு உகந்தவன், என்றது ஆணழகன் மரம். கோணல் மரம் உடனே, தன் பக்க நியாயத்தை வைத்தது. நான் ஒரு மரம் பலர்க்கு உபயோகப்படுவேன், நேர்த்தியற்றவை தான் பல சாமான்கள் செய்ய பயன்படும் என்றது. அம்பிகாபதி,அமராவதி மரமோ, காதல் பெருக்கெடுக்கும் கட்டிலுக்கு சரியான மரம் நானே என்று எண்ணினாலும் , எங்கே தான் தன் காதல் ஜோடியிடம் இருந்து பிரிக்கப்பட்டு விடுவோமோ என்ற கவலை அதன் பேச்சில் தெரிந்தது. சாந்தசொரூபிக்கு, தன்னைத் தேர்ந்தெடுத்தால், சண்டை போட்டு மனஸ்தாபத்துடன் கட்டிலுக்கு வரும் தம்பதியை அமைதிபடுத்தும் தன்மை என்னிடம் தான் உண்டு என்று எண்ணி, அமைதி காத்து நின்றது. எப்போதும் உண்மை செப்பும், உயர்ந்தாலும் வணக்கத்திற்குரிய என்னைப் போன்ற ஒழுக்கசீலன் தான் குடும்ப உறவுக்கு ஏற்புடையவன், என்று மார்தட்டிக் கொண்டது அடுத்த மரம். சாகப்போகும் தருணத்தில் யார் பெரிது என்ற கூச்சலும், பெருமை பேசும் குணமும், மனிதர்களைப் போல, மரங்களையும் விட்டுவைக்கவில்லை போலும்.
தச்சன் ஒரு மரத்தை தேர்ந்தெடுத்தான். தன் ஆசை மகளுக்காக கட்டிலும், மிகுதியுள்ள மரத்தில் ஊஞ்சல் செய்ய, ஆணழகன் மரத்தைத் தேர்ந்தெடுத்தான் தச்சன். ஆணழகனுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. தன்னை தேர்ந்தெடுத்ததற்காக அந்த தச்சனுக்கு தன்னால் இயலும் வரை உதவிடும் முனைப்போடு ஆயத்தமானது. மரம், செடி, கொடி இவை எல்லாம் உயிரற்றவை என்றாலும், முற்காலத்தில், மரத்தை வெட்டுவதற்கு முன் அதனிடம் அனுமதி பெறுவராம். தச்சனும் அவன் தேர்வு செய்த மரத்திடம் அனுமதி கோரி, அதன் முன் மண்டியிட்டு, கை நீட்டி, தன் மகளுக்காக இந்த ஊரில் யாரும் இதுவரை செய்திராத கட்டிலை செய்ய தனக்கு உதவும் படி கேட்டான், அப்பொழுது அடித்த பலத்த காற்றில் ஒரு சிறு துணை கிளை உடைந்து அவன் மடியில் விழுந்தது. இதுவே மரம் தந்த பதில் என்று கூறி அவன் மிகவும் சந்தோசமுற்றான். மரத்திற்கோ தன்னை வெட்ட போகிறான் என்ற வருத்தம் துளியும் இல்லை. மாறாக, தன்னிடம் அனுமதி வாங்கி வெட்டும் இந்த தச்சன் எவ்வளவு உயரிய குணம் படைத்தவன் என்று எண்ணி மகிழ்ந்தது. அவன் வெட்ட தொடங்கிய உடனே அதற்கு வலித்தாலும் அதை தாங்கிக் கொண்டு அவன் தன்னிடம் அனுமதி கேட்டான் என்பதற்காக பொறுத்துக் கொண்டது. தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளைந்து கொடுத்து அவன் அந்த மரத்தை இலகுவாக வெட்டுவதற்கு வழிவகை செய்தது. தச்சனும் மரத்தை அவனுக்கு வேண்டிய அளவுகளில் வெட்டி அதை தனது வண்டியில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான். காட்டிலிருந்து வீட்டுக்கு வரும் வரை மரத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. என்னை வைத்து எவ்வாறு அந்த கட்டிலை வடிவமைக்கப் போகிறான் என்று கற்பனை செய்த வண்ணம் இருந்தது, தச்சனும், இந்த ஊரிலேயே யாரும் இப்படி ஒரு கட்டிலை செய்திருக்கக் கூடாது என்ற முனைப்புடன் சாட்டையை சுழற்றி வண்டியை வேகமாக ஓட்டினான். மகளின் மீது அவன் கொண்ட பாசம், அவளுக்கு பிடித்தமான தெனாலிராமன் புத்தகம், பேனா, தஞ்சாவூர் பொம்மை, பல்லாங்குழி, கோவில், கோபுரம், மல்லிகை பூந்தோட்டம், எழுத்துப் பலகை என அத்தனையும், அவள் தலை சாய்க்கும் இடத்தில் செதுக்குவதில் வெளிப்பட்டது. மரத்திற்கு, தான் ஒரு திறமைசாலியிடம் தான் வெட்டு பட்டிருக்கிறோம் என்பதில் பேரானந்தம். அந்தப் பெண் பெரிய அதிர்ஷ்டசாலி. நானும் தான் அதிர்ஷ்டசாலி. எனக்கு வலிக்காமல் எவ்வளவு நிதானமாக இந்த வடிவங்களை எல்லாம் செதுக்குகிறான். வடிவமைத்து முடித்து எவ்வளவு அழகாக நான் மிளிர்கிறேன், என்று மனதுக்குள் பூரித்தது ,
சில மாதங்களுக்கு முன் சந்தையில் ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கினான். அதை அவனும், அவன் மகளும் மிகப் பிரியமாக வளர்த்தனர். அவர்கள் வீட்டில் ஒரு குடும்ப உறுப்பினர் போலவே அது நடத்தப்பட்டது. கல்யாண தேதியும் நெருங்கியது. குல தெய்வத்திற்கு படையல் போட வேண்டும் என்பதற்காக குடும்பத்தார் அனைவரும் கோவிலுக்குச் சென்றனர். அவர்கள் வழக்கத்தில் ஆடு பலி கொடுத்து பிரார்த்தனை நிறைவேற்றுவர். நல்ல அழகான சிறிய கருத்த ஆடு. ஆம் தன் குடும்பத்தில் ஒருவர் போல வளர்த்த அதே ஆடுதான். அந்தக் குட்டியை தான் மஞ்சளும்,சிவப்பும் கலந்த பூ மாலை அணிவித்து கயிறு கட்டி கூட்டி வந்தனர், பலி கொடுப்பதற்காக. அது அங்கே வருவதற்கு முன், இதுவரை சாப்பிட்டிராத அத்தனை நற்சுவையான இலை தளைகள் வழங்கப்பட்டது. அது நன்றாக சாப்பிட்ட பிறகு அதை கோவில் கருவறைக்கு முன் கொண்டு வந்தார்கள். எப்படி மரத்தை அறுக்க ரம்பம் பயன்படுத்தப்பட்டதோ அதேபோல் ஆட்டை பலி கொடுப்பதற்கு ஆணழகன் மரத்திலான கைப்பிடி கொண்ட ஒரு அரிவாளுடன் ஒருவர் அங்கு காத்திருந்தார். கூட்டத்தில் ஒரு முதியவர் ‘சரிப்பா ஆட்டுகிட்ட ஒப்புதல் கேளுங்க’ என்று கூறினார். இதைக் கேட்ட அந்த அரிவாளின் கைப்பிடியாக இருக்கும் மரம் மிகவும் ஆச்சரியப்பட்டது. இந்த மனிதர்கள் தான் எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள் ஒரு பாவச்செயல் செய்யும் முன் அதில் பாதிக்கப்படக் கூடியவர்களிடம் அனுமதி கேட்கின்றார்களே, இந்த மனிதர்களைப் போல் வேறு சீவராசி இருக்க முடியாது. இவர்களுக்கு நான் உதவியாக வந்தேனே அது என் பாக்கியம் என்று பெருமிதம் கொண்டது.
தச்சன் அந்த ஆட்டின் அருகில் சென்று ‘என் மகளுக்கு நல்லபடியாக திருமணம் நடந்து அவள் சந்தோஷமாக வாழ வேண்டும் . அதற்கு உன்னை இந்த கடவுளுக்கு பலி கொடுக்க அனுமதி வேண்டும்’ என்று கூறி தன் கையில் இருந்த மஞ்சள் நீரை அதன் மேல் ஊற்றினான். அந்த காட்சியைக் காண மனம் இல்லாமல், அழுது கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றாள், அந்த கல்யாண பெண். நீரை ஊற்றியவுடன் , ஆடு தலையை குலுக்கியது. அது ஒப்புதலா அல்லது அந்த நீரின் குளிர்ச்சி தாளாமலா என்பது அந்த ஆட்டுக்கும் கடவுளுக்குமே தெரியும். உடனே அந்த முதியவர் ‘ஆடு சரி சொல்லிருச்சுப்பா இப்ப வெட்டலாம்’ என்று சொன்னவுடன், ஆடு வெட்டப்பட்டது. சட்டியில் குழம்பாகவும், சுக்காவாகவும் கொதித்து விருந்தாகியது.
இப்பொழுதுதான் அந்த மரத்திற்கு மிகவும் கடினமாக இருந்தது தன்னால் ஆன கைப்பிடியைக் கொண்ட அரிவாளைக் கொண்டு, ஒரு உயிரை கொன்று விட்டனரே என்று அந்த உயிரற்ற ஆட்டைப் பார்த்து மிகவும் அனுதாபப்பட்டது. எவ்வளவு அழுது புரண்டாலும், மாண்டார் மீள்வரோ!
கல்யாணம் நடப்பதற்கு முதல் நாள் இரவு, கல்யாண பெண்ணின் அறை தோழிகளின் சிரிப்பிலும், கேலி பேச்சிலும் நிறைந்து இருந்தது. கல்யாணப் பெண் தன் தந்தை தனக்காக செய்த புது ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள். அவள் முகம் வாடிப்போய் இருந்தது. வீட்டைப் பிரிய மனமில்லாமல் வருந்துகிறாள் போலும், என்று ஊஞ்சல் வடிவத்தில் இருந்த மரம் எண்ணியது. தோழிகள் அனைவரும் மாப்பிள்ளை அழைப்பிற்காக சென்றனர். அவள் ஊஞ்சலில் சற்று தலை சாய்த்து களைப்பில் அசந்து உறங்கிப் போனாள். கனவுலகில் அந்த ஊஞ்சல் முகம், கை, கால் என உருவெடுத்து அவளை தட்டி எழுப்புவது போல் இருந்தது. அவள் கரம் பிடித்து , அவளை வனத்திற்குள் அழைத்துச் சென்றது. பல வண்ண பூக்கள் அந்த வனம் முழுவதும் மலர்ந்து கண்களுக்கு ரம்யமாக காட்சி தந்தது. மானும், மயிலும், முயலும், நரியும், கரடியும் அங்குமிங்கும் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தன. அவள் பாதம் படும் இடமெல்லாம் பூக்கள் பூத்து சிவப்புக் கம்பளம் விரித்தார் போல் அவள் வழித்தடத்தை மென்மையாக்கியது. இனிமையான தென்றல் காற்று அவளை மெல்ல வருடிச் சென்றது, இதமாக. மாலை மங்கும் நேரத்தில் சூரிய கதிர் பட்டு இலைகளெல்லாம் தங்க நிறத்தில் மிளிர்ந்தன. ஓடை நீரோட்டம் சலனமில்லாமல், மெல்லிய இசையைத் தாங்கிச் சென்றது. வானின் நீலமும், பாசியின் பச்சையும், அந்த ஓடையில் வாழும் பல வண்ண மீன்களும், அந்த வனத்தின் அழகைக் கூட்டின. அவளுக்கு இது ஒரு காடாக தெரியவில்லை, மாறாக இந்த பிரபஞ்சத்தின் நடு புள்ளியாக, இதயத்துடிப்பாக காட்சியளித்தது. அவள் கனவில் தான் இதை அனுபவிக்கிறாள் என்றாலும், இதுவரை எந்த கனவிலும் இவ்வளவு அழகான காட்டை அவள் கற்பனை கூட செய்ததில்லை.
இவ்வாறு அவள் தன்னை மறந்து, வனத்தின் வனப்பில் மயங்கிய தருணத்தில் கால் இடறி கீழே விழுந்தாள். வெட்டப்பட்ட ஆணழகன் மரத்தின் அடிப்பாகம் தடுக்கியது. ஊஞ்சல் உருவில் இருந்த மரம்,அது தான் என்றும், பின் அது எவ்வாறு அனுமதி கேட்டு வெட்டப்பட்டது என்றும் அந்த மரமே விவரித்தது. அதைக் கேட்டு அவளுக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும் கலந்து மனம் குழம்பி அந்த வெட்டப்பட்ட மரத்திலேயே அமர்ந்தாள். மரமோ அவள் குழப்பத்தை அறியாமல், தன்னை தச்சன் எவ்வளவு நேர்த்தியாக கையாண்டான்,தன்னை எவ்வளவு உபயோகமான பொருளாக மாற்றி இருக்கிறான் என்று கூறி ஆனந்தம் அடைந்தது. ஒரு அழகிய வேலைப்பாட்டுடன் ஆன கட்டில், ஊஞ்சல், மரப்பெட்டி என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, மரம் அந்த பெண்ணின் முகம் வாடி கலை இழந்து இருப்பதை கவனித்தது, அவளிடம் இருந்து வந்த அனல் மிகுந்த பெருமூச்சின் வெப்பம் தாளாமல், அவளை சுற்றி இருந்த அனைத்து மரங்களும், உயிர்பெற்று, அவளை நோக்கின. அவள் தன் மனகுமுறளை பகிரளானாள். ‘உங்களை உயிரற்ற மரம் என்று மனிதர்கள் கூறுவார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. நீங்கள் மனிதர்களை விட அறிவாளிகள். ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறீர்கள், காற்றின் வழியே, வேர்களின் வழியே, மௌனத்தின் வழியே. மனிதர்கள் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை — பொறுமையை, அமைதியை, காலத்தின் உண்மையான அர்த்தத்தை. ஆனால் அவர்கள் அவற்றை உற்று நோக்குவதில்லை. ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன்னாடி அது கிட்ட அனுமதி கேக்குறாங்க. ஒரு ஆட்டை வெட்டுவதற்கு முன்னாடி அதுகிட்டயும் அனுமதி கேக்குறாங்க. வாய் பேச முடிஞ்ச மூளைய உபயோகிக்க முடிகிற என்கிட்ட, உனக்கு இந்த திருமணம் வேணுமா வேணாமா என்று ஏன் யாரும் கேட்க மாட்டேங்கிறாங்க. எனக்கு எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்யற அப்பா கூட என் ஆசையை ஏன் கேட்க முனையவில்லை, உனக்கு இந்த மாப்பிள்ளை பிடிச்சிருக்கா? அப்படின்னு ஒரு வார்த்தை கேட்கலையே. என்னாலையும் எதையுமே சொல்ல முடியாம இந்த சமூக கட்டமைப்புக்குள்ள சிக்கிட்டு, அம்மா அப்பாவுக்கு கெட்ட பெயர் வாங்கி தந்துட கூடாதுன்னு, அமைதியா அந்த ஆடு புரியாமல் தலையாட்டுச்சு பார் வெட்டுவதற்கு முன்னாடி, அது மாதிரி அமைதியா உட்கார்ந்து இருக்கேன்’ என்றாள். தச்சனை உயர்வாக நினைத்த அத்தனை மரங்களும், புருவம் சுருக்கி நின்றன. அவள் மேலும் தொடர்ந்தாள். என்னைப் போன்ற பெண்ணுக்கெல்லாம், வேற வழியே இல்லை, ஒரு வயசு வந்த உடனே கல்யாணம் பண்ணனும், யாருன்னு தெரியாத ஏதோ ஒரு இடத்துக்கு போய் அங்க இருக்குற புது உறவுகளுக்கு முன்னாடி நமக்கு நல்லா சமைக்கத் தெரியும், வீடு கூட்டத் தெரியும், கணவனுக்கு பணிவிடை செய்யத் தெரியும், நல்லா துவைக்க தெரியும், நல்லா குடும்பம் நடத்த தெரியும், இப்படி எல்லாத்தையும் அவங்க முன்னாடி நாங்க உறுதி செய்து கொண்டே இருக்கணும். ஆனா எனக்கு இலக்கியமா எழுத தெரியும், தெளிவா பாடம் சொல்லிக் கொடுக்க தெரியும், அருமையா வரைய தெரியும், எனக்கு ஆசிரியர் ஆக வேண்டும் என்கிற கனவு இருக்கு. இதெல்லாம் நான் எப்ப சொல்லுவேன். இதை கேட்டுக்கொண்டிருந்த மரங்களுக்கு இன்னும் தூக்கி வாரிப் போட்டது. அந்தப் பெண் மேலும் தொடர்ந்து , தனக்கு பரிசாக வந்த பேனாவைப் பற்றி கூறினாள். அது அவளுக்கு அவளின் ஆசிரியர் பரிசாக கொடுத்தது. வருடா வருடம் அவள் பள்ளியில் நடக்கும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி அனைத்திலும் பங்கேற்று ஏதாவது ஒரு பரிசைத் தட்டிச் செல்வாள். ஒரு முறை நடந்த கட்டுரை போட்டியில் இவள் எழுதிய கட்டுரைக்கு இரண்டாவது பரிசு தான் கிடைத்தது, ஆனாலும் அவளுடைய ஆசிரியர் அந்த கட்டுரையை அனைவர் முன்னிலையிலும் படித்து அவளை வெகுவாக பாராட்டினார் , அந்த பேனாவை அவளுக்கு பரிசளித்தார். அது அவளுக்கு மிகவும் மனதிற்கு நெருக்கமான ஒரு பேனா. இவை அனைத்தையும் கேட்டு மனம் நொந்த ஆணழகன் மரத்திற்கு, இப்பொழுது தான் வலித்தது, கோடாலியால் வெட்டும் போதும், உளியால் செதுக்கும் போதும், ரம்பத்தால் அறுபடும் போதும் இல்லாத வலி அது. அந்த மரம் அடைந்த அத்துனை மகிழ்ச்சியும் அவள் பேசிய வார்த்தைகளின் முன்பு பொசுங்கிப் போனது. அவளுக்கு வரப்போகும் கணவன் அவளின் நியாயமான ஆசைகளை பூர்த்தி செய்பவனாக இருக்க வேண்டும் என்று அந்த மரங்கள் அனைத்தும், வன தேவதையிடம் பிரார்த்தனை செய்தன.
ஊஞ்சலை தடவியபடி கண் விழித்தாள். அவளுக்கு பேனா பரிசு வாங்கி தந்த கட்டுரையின் பக்கங்கள் சிதறிக் கிடந்தன, அதன் தலைப்பு ‘பெண் சுதந்திரம்’.
மாப்பிள்ளை ஊர்வலம் முடிந்து, ராசா போல மாப்பிள்ளை வந்து இறங்கினான். ‘பாரதியார் கவிதைகள்’ புத்தகத்தை கையில் பத்திரமாக வைத்திருந்தான், புதுமைப் பெண்ணின் கவிதைகளை கோடிட்டு காட்டிய பக்கங்களோடு, தன் வரப்போகும் துணைவி கண்மணிக்கு பரிசாக அளிக்க.
Very good attempt madhu….keep doing…. expecting more from you
கதை மிகவும் அருமை மது..
Congratulations Madhu, Nice story with positive end❤️💐🎉
Nicely attempted, all the very best.