Arts

மொய் விருந்து

July 26, 2025 | Bala

‘இங்க இந்த இலைக்கு சாதம் வைங்க , உங்களுக்கு குழம்பா , இல்லை ரசமா? நல்லா கேட்டு வாங்கி சாப்புடுங்க. அட நீங்களா, எப்படி இருக்குறீங்க, வீட்டுல வரலையா? இன்னும் கொஞ்சம் பீன்ஸ் வைக்கட்டுமா? சின்ன பசங்களுக்கு கேட்டு வைங்க.’ என்று விருந்து பந்தி ஒரே பரபரப்புடனும், பயங்கர உபசரிப்புடன் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

ஏசி ஹால் , 250 பேர் அமரக்கூடிய பந்தி அமைப்பு, முக்கியமாக சைவத்திற்கு  தனி, அசைவத்திற்குத் தனி என இரண்டு ஹால். அதில் எனக்கு இடம் கிடைத்தது மூன்றாவது பந்தியில். வெளியில் நின்றுகொண்டிருந்தது இன்னும் மூன்று பந்திக்குரிய கூட்டம். ஆம், கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு பேருக்கு சைவம், அசைவம் என்று தனித்தனியாக விருந்து சிறப்பாகப் போய்க்கொண்டிருந்தது.

அது ஒரு  பெரிய புள்ளி வீட்டுக் கல்யாண விருந்தோ, இல்லை வார வாரம் நடக்கும் கச்சேரி நிகழ்ச்சியோ இல்லை. அப்படியென்றால்,வேறு என்ன விருந்து இது என்ற உங்க கேள்விக்கு, புதுக்கோட்டை அருகில் உள்ள சிறிய கிராமத்தில் இருக்கும் மன்னார் வீட்டு விருந்தை பற்றி தெரிந்துகொண்டால் பதில் புரியும்.

இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்கு, அதுக்குள்ள எப்படியாவது பீஸ் கட்டணும்பா என்ற மகளின் இரண்டு வரி திருக்குறள் செய்தியை தபால்காரர் வாசித்து விட்டுப் போனது காதுகளில் ரீங்காரமிட, வேறு வழியில்லாமல் மனைவி சொன்ன விருந்துக்கு சரி என்று சம்மதித்தான் அரிசி மண்டி மன்னார். மகளை கல்லூரியில் ஒரு வருடத்திற்கு முன் சேர்த்தபொழுது , அந்த வருடத்து போகத்தை  போல் இன்னும் ஒரு போகத்தை பார்த்தால் அவளது நான்கு வருட படிப்பிற்கு சம்பாதித்துவிடலாம் என்று நம்பிக்கையோடு இருந்தான். அவனைவிட, ஊரில் உள்ள எல்லோருக்கும் பெரும் சந்தோஷம். அவர்கள் வீட்டின் முதல் பட்டதாரி என்று எல்லோரும் பெருமைப்பட்டார்கள். ஆனால்  ஒரே வருடத்தில் மன்னாரின் நிலைமை இந்த அளவிற்கு சரியும் என்று யாரும் நினைக்கவில்லை.

ஒரு காலத்தில்  ஊரில் உள்ள எல்லா வியாபாரிகளுக்கும் குடுத்தது போக மிச்சம் இருக்கும் போகத்தை குறைந்த விலையில் கடைநிலை தொழிலாளிகளுக்கு வாரி குடுத்த மன்னார், இன்று ஊரைக் கூட்டி விருந்து வைக்கும் நிலைக்குக் காரணம் பொய்த்துப்போன மழை மட்டும் அல்ல, அடுத்தவர்கள் மனதை மட்டும் பார்த்து அவர்களது திறமையைச் சோதிக்காமல் கொடுத்த கடன் எல்லாம் கானல் நீராய்ப் போனதும்தான்.

ஊரைக் கூப்பிட்டு விருந்து வைப்பது சகஜம்தான் என்றாலும், இந்த இரண்டு வருடத்தில் அக்கம் பக்கம்  கிராமத்தில் யாரும் விருந்து வைக்கவில்லை. அது மன்னாருக்கு கொஞ்சம் தெம்பை குடுத்தது. மேலும், இன்னும் இரண்டு மாதத்திற்கு விசேஷ நாட்கள் எதுவும் இல்லை என்பதும் கூடுதல் நிம்மதியை குடுத்தது.

பெரும்பாலும், புதுத் தொழில் தொடங்குவதற்கு, இல்லையென்றால், நல்ல விசேஷம் கொண்டாட “மொய் விருந்துக்கு” கூப்பிடுவார்கள். ஆனால், தன் வீட்டில் முதல் பட்டதாரியை உருவாக்க, மன்னாரு விருந்துக்கு யோசனை கேட்டவுடன், அனைத்து வியாபாரிகளும் போட்டி போட்டுக் கொண்டு , தங்களால் ஆனமட்டும் விருந்துக்கு தங்கள் கடையில் இருந்து கணக்கு பார்க்காமல் பொருட்களை தர முன்வந்தது, எத்தனை பேருக்கு இந்த படிப்பின் படிகள் கிடைக்காமல், வாழ்க்கையில் மேலே ஏற  முடியாமல் போன ஏக்கத்தின் வலி தெரிந்தது.

விருந்துக்கு தேவையான காய்கறி முதல் ஆட்டுக் கறிவரை எல்லாவற்றிக்கும் சொல்லி வைத்தாயிற்று. அடுத்து விருந்துக்குக் கூப்பிடுவதுதான் பாக்கி. அதில்தான் மன்னாருக்கு இருதலைக்கொள்ளி எறும்பைப்போல் பிரச்சனை . அவனது பழக்கத்திற்கு கண்டிப்பாக எல்லோரும் விருந்துக்கு வருவார்கள். ஆனால் அவ்வளவு பெரிய கூட்டத்திற்கு இலை போட்டு பரிமாற அவனது வீட்டில் இடமில்லை. வேறு வழியின்றி , நெல்லை அடித்துக் காயவைக்கும் மில்லில் பெரிய அளவில் பந்தல் போட்டு விருந்தை சிறப்பாக நடத்தினான்.

அவனது கிராமத்தில் இருந்து மட்டுமில்லாமல், பக்கத்துக் கிராமத்தில் இருந்தும் கூட்டம் கூட்டமாக வந்து பொறுமையாக காத்திருந்து விருந்தில் கலந்துகொண்டார்கள். அத்தனை பேருக்கும் சளைக்காமல் விடிய விடிய சமைத்துப் பரிமாறியது எல்லாம் அக்கம்பக்கத்துக் கூட்டாளிகள்தான்.

பந்திக்கு முந்து படைக்குப் பிந்து என்ற சொல்லுக்கு எதிராக, பந்திக்கு போகும்முன், மொய்யுக்கு முண்டியடித்த கூட்டத்தை சமாளிக்கத்தான் முடியவில்லை. ஏனன்றால், பன்னிரெண்டுமணிக்கு மேல் மொய் எழுதினால் அது “பின் வரவு” கணக்கில் போய்விடும் , அப்புறம் அது பெரும் மானப் பிரிச்சனையாகிவிடும் என்பதால்.

மன்னாருக்கு மொய் கணக்கு எழுதிகொடுத்த, அந்த கிராமத்து வங்கி மேலாளர், இதுவரைக்கும் அவரது வங்கியில் கூடப் பார்த்திராத அளவிற்கு மொய் வரவைப் பார்த்து மூச்சடைத்துப் போனார். ஆனால் வந்த மொய்யில், ஒரு தொகையை  அப்படியே அவரது வங்கியில் சேமிப்பு கணக்கில் மன்னாரு போடச் சொன்னது அவருக்கு விசித்திரமாக இருந்தது. இந்த மொய் விருந்தை ஏற்பாடு செய்தது மன்னாரின் மகளின் படிப்பிற்கு. ஆனால் அதில் பாதியை எதற்கு சேமிப்பு கணக்கில் போட வேண்டும் என்று அவனிடமே கேட்டார். ஐயா, நாங்கள் எப்பொழுது மொய் விருந்தில் மொய் வசூலித்தாலும், அதை செய்தவர்களுக்கு திருப்பி இரண்டு மடங்காகச் செய்வோம், அதற்கு இப்படி கொஞ்சம் சேர்த்து வைத்தால்தான் முடியும். ஏனென்றால், இனிமேல் இந்த பொய்த்துப்போன வானத்தை மட்டும் நம்பி என்னால் இருக்கமுடியாது என்று வருத்தத்துடன் கூறினான்.

வந்திருந்து வாய்மணக்க விருந்து சாப்பிட்ட அனைவருக்கும் வயிறு நிறைந்ததைவிட, ஒரு பட்டதாரி உருவாகத் தங்கள் கையை நனைத்ததை பெரிதாக நினைத்துச் சென்றனர்.

அன்று ஒரு கிராமத்துப் பட்டதாரியை தன் வீட்டுப் பட்டதாரியாக நினைத்து அவளுக்காக மொய் விருந்தைக் கொண்டாடிய மக்களைப்போல்,  பல தரப்பட்ட ஏழைக் குடும்பத்தில், முதற்தலைமுறைப் பட்டதாரிகள் உருவாக, ஆஸ்திரேலிய தமிழர்கள் அமைப்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெல்போர்ன் வாழ் நல்லுள்ளங்களைக் கூப்பிட்டு வாழையிலை போட்டு  springvale town ஹாலில் நடத்திய மொய் விருந்துதான் அந்த பெரும் கூட்டம் கூடிய விருந்து.

இன்றைய காலத்தில்,  கல்யாண வீடாகயிருந்தாலும் சரி, சரவணபவன் மீல்ஸ் கூடமாக இருந்ததாலும் சரி, இலையில் முதலில் ஊற்றிய சாம்பார் காலியாகும்முன்னே அவர்களுக்கு பின்னாடி போய் இடம் பிடிக்க நிற்கும் பழக்கத்துக்கு நடுவில், குழந்தைகள், முதல் வயதான பெற்றோர்கள் வரை பொறுமையாக அவர்களது மணிக்கட்டில் அணிந்திருந்த அடையாள அட்டையின் வண்ணத்தை அழைக்கும்வரை மேடையில் நடைபெற்றுகொண்டித்திருந்த கலை நிகழ்ச்சிகளைப் பார்த்தபடி காத்திருந்தது பார்க்க ஆச்சரியந்தான். 

எந்த ஒரு விருந்தின் சிறப்பும், மூன்று உப்பின் அளவிலே தெரியவரும். வரவேற்பு, உபசரிப்பு, இலையில் வைக்கும் உணவில் இருக்கும் உப்பு. அந்த வகையில், இந்த மொய் விருந்தில், அவை மூன்றும் சிறப்பாக இருந்தது. அதற்கு முக்கிய காரணம், அந்த மூன்று உப்பை பரிமாறிய தன்னார்வலர்களே. 

பல தமிழ் அமைப்புகளில் இருந்தும்,  மிக முக்கியமாக மாணவர் சங்கங்களில் இருந்தும் கிட்டத்தட்ட, நாற்பதிற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்று தங்கள் வீட்டு நிகழ்ச்சியாகப் பாவித்து மிகச் சிறப்பாகச் செயல்பட்டனர்.

இன்முக வரவேற்பில் இருந்து, உணவு வரிசையில் நிற்பவர்களில் சைவத்திற்கு ஒரு இடம் உள்ளது, அசைவத்துக்கு இரண்டு இடம் உள்ளது என்று ஒவ்வொரு முறையும் வரிசை முழுவதும் முன்னும் பின்னும் சென்று ஒவ்வொருவரிடமும் கேட்டு, எந்தப் பந்தியிலும்  வெறும் இலை விழாமல் பார்த்ததும், மிக முக்கியமாக பந்தி பராமரிப்பில் கேட்டுக் கேட்டுப் பரிமாறியதும் மொய் விருந்தை ஒரு குடும்பத்து கல்யாண விருந்தாகவே மாற்றிவிட்டது.

அந்த மூன்றாவது உப்பின் சிறப்பிற்கு பின்னால், பல சமையல் கலைஞர்கள், தன்னார்வலர்கள் இரண்டு நாட்கள் முழுவதும், காய்கறியில் இருந்து, ஆட்டுக் கறிவரைக்கும் வெட்டுவது, அனைத்து வகை மசாலாக்களையும் தாங்களே தயாரித்து , அவைகளை தன்னார்வலர் ஒருவரின்  தொழிலகத்தில் உள்ள குளிரூட்டியில் இரவில் வைத்து, காலையில் அரங்கத்தின் சமையலறைக்கு எடுத்துவந்து சுடச்சுடச் சமைத்து கொடுத்ததே காரணம்.

அந்த சுவைக்குச் சுவை சேர்த்ததற்கு அரிசி, காய்கறி, முட்டை, பலசரக்கு என்று அனைத்தும் பாதி விலையிலோ, இலவசமாகவோ தந்துதவிய தொழிலதிபர்களும் முக்கிய காரணம்.

மன்னாரும் அவனது  கூட்டாளிகளும் ஒரு பட்டதாரிக்கு அளித்த மொய் விருந்தினைப்போல், மெல்போர்னில் ஆஸ்திரேலிய தமிழர்கள் அவர்களது கூட்டாளி சங்கங்களுடன் சேர்ந்து இரண்டு வருடத்துக்கு ஒருமுறை இந்த மொய் விருந்தை நடத்தி வருகிறார்கள். நற்சுவை உணவுக்காக மட்டுமில்லாமல் விருந்தின் மூல காரணத்திற்காக மெல்போர்ன் நல்லுள்ளங்கள் அளித்த மொய் வரவில், கிட்டத்தட்ட நூறு ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு இரண்டு வருட பட்டப் படிப்புச் செலவிற்க்குப் பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல், பல கிராமங்களில் ஏரிகளை தூர் வாரி, அவர்களின் தண்ணீர் தாகத்தையும் தணிக்கப் பயன்படப்போவது  மிக சிறப்பான செயல்.

மெய் வருத்தி அளித்த
மொய் விருந்தில்
கை நனைத்து மகிழ்ந்த
நல் உள்ளங்கள்
மனம் மகிழ்ந்து தந்த
மொய் கொடையில்
கல்விக்கு ஒளி ஏற்றி குடும்பங்களை
உயர்த்த தொண்டாற்றிய
தன்னார்வலர்கள் வாழ்க!🙏🏼

🙏🏼

Bala


89 பார்வைகள்

About the Author

Bala

2 Comments

  1. கலா பாலசண்முகன் says:

    மொய் விருந்தைப் பற்றி அறிந்து கொண்டேன்.
    மன்னாரின் கதையுடன் தொடங்கி மெல்பேர்ன் விருந்துடன் இணைத்தது சுவையாக இருந்தது.
    நல்ல கட்டுரை 👏👏

  2. Shan Dhinakaran says:

    மொய் விருந்தின் பின்புலம் பற்றி அருமையான தகவல். நன்றி பாலா.

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்