Arts

மௌனம்

July 26, 2025 | இமாம்

தனி ஒருத்தியாக பிள்ளைகளை வளர்ப்பது, சில நேரங்களில் எளிதானது. யார் பிள்ளைகளை வகுப்புகளுக்கு ஏற்றி இறக்குவது என்ற வாக்குவாதங்கள் அவசியமற்றுப் போகும். ஏனென்றால் நான் மட்டுமேதான் அதைச் செய்ய வேண்டும். நேற்றோடு அவர் இறந்து 7 வருடங்கள் கரைந்தோடியும், அவ்வப்போது அவர் நினைவுகள் என்னை நிலைகுலைய வைக்கிறது. ஆனால், அந்த நினைவுகளை எப்படி சமாளிப்பது என்பதுதான் இத்தனை வருடங்களில் நான் கற்றுக்கொண்டது.

நீண்ட நேரம் இதமான சூடான நீரில் குளித்தேன். புதிதாக வாங்கிய சுடிதார்களில் ஒன்றை அணிந்து தயாரானேன். “பிள்ளைகளை அழைத்து வர பள்ளிக்கு இவ்வளவு அலங்கரித்துக் கொள்ளும் ஒரே ஆள் நான்தான்” என்று மனதுக்குள் எள்ளி நகைத்தேன். அதன் காரணத்தையும் நான் அறியாமல் இல்லை. ஆனாலும் ஆர்வத்தோடு தயாரானேன்.  

கார் பள்ளியை நெருங்கியபோது, எனக்குள் பரபரப்பு அதிகரித்தது. ஏனோ திடீரென்று, நான் அன்று அவரைப் பார்க்கக் கூடாது என்று எண்ணினேன். ஆனால் அவரைப் பார்க்கத்தானே இவ்வளவு அலங்காரமும். வழமைபோல இன்றும் மனக்குழப்பம் தொடங்கியது. உள்ளே போகாமல், வாகனத் தரிப்பிடத்தில் இருந்து பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு திரும்பிவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். வாழ்க்கையில் ஏனோ நினைப்பது ஒன்று நடப்பது இன்னொன்றாகவே இருக்கிறது. காரை வெகு தொலைவில் நிறுத்தி விட்டுத் திரும்பிப் பார்த்தால் இன்னொரு கார் வந்து பக்கத்தில் நின்றது. 

“ஹாய், வனஜா, லில்லி உங்களுக்காக ஒரு ஓவியம் கொண்டு வந்துள்ளார், நீங்கள் கிளம்பும் முன் அவளைப் பாருங்கள்” என்று காருக்குள் இருந்து ஜேம்ஸின் குரல். 

ஓவியம் பற்றிய செய்தி இவ்வளவு நேரமும் என் மனதில் ஓடிய யோசனைகளை ஒரு நொடியில் மறக்கடித்தது. உற்சாகத்தோடு காரில் இருந்து இறங்கி “ஹாய் ஜேம்ஸ், எப்படி இருக்கிறீர்கள்? மறக்காமல் எனக்காக ஓவியம் தயார்படுத்தி இருக்கிறீர்கள்… நன்றி” 

‘உங்களுக்குத் தெரியும் எனக்கும் லில்லிக்கும் ஓவியம் என்றால் எவ்வளவு விருப்பம் என்று. இரண்டு வாரங்களுக்கு முன்பே அதைத் தயார்படுத்தி விட்டோம். ஆனால் நீங்கள் இன்று பிள்ளைகளை அழைத்துச் செல்ல வருவீர்கள் என்றுதான் இன்று கொண்டுவந்தோம். வாங்கோ, லில்லி உள்ளேதான் இருப்பா…’ என்று என் பதிலுக்கு நிற்காமல் என்னை முன்னோக்கிச் செல்ல விட்டார். நான் பள்ளிக்கூடத்திற்குள் வருவதில் இருக்கும் சங்கடத்தைச் சொன்னால் மட்டும் இவருக்கு விளங்கிவிடுமா என்ன? என்று எண்ணியபடியே அவரோடு நடந்தேன். 

என் கணவர் இறந்த வருடம் லில்லிதான் பிள்ளைகளின் வகுப்பாசிரியை. அந்த நேரம் அவரும் பிள்ளையோடு தனியாகத்தான் இருந்தார் .  அப்படித்தான் அவருடன் பழகத் தொடங்கினேன். நாங்கள் போன ஓவிய வகுப்பின் ஆசிரியர்தான் இந்த ஜேம்ஸ். ஆனால் இப்போது அவர்கள் கணவன் – மனைவி. ஆனால் நான் இப்பவும் தனியாகவே இருக்கிறேன். 

பள்ளி வளாகத்தை அடைந்ததும், நான் எவ்வளவு சொல்லியும், என் கண்கள் அவரைத் தேட ஆரம்பித்தன. ‘அவர் எங்கிருக்கிறார் என்று தெரிந்தால் நான் மறுபக்கமாக ஒதுங்கி  சென்றுவிடலாம்’ என்று எனக்கு நானே அதை நியாயப்படுத்தி கொண்டிருக்கையில், லில்லி வகுப்பறை வராண்டாவிற்கு வந்து சேர்ந்தாள்.

“ஹாய் லில்லி, ஓவியத்திற்கு நன்றி” என்று  என் மகிழ்ச்சியை ஒரு பெரிய அணைப்பின் மூலம் வெளிப்படுத்தினேன். மேலும் வேறு பல ஆசிரியர்களும் அங்கு வந்து கூடினர். எல்லோரும் ஓவியங்கள், தோட்டம் எனப் பல விஷயங்களைப் பேச ஆரம்பித்தோம். கலகலப்பாகப் பேசிச் சிரித்தோம். 

பலமுறை யோசித்தும், நான் அப்போது என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் என்று எனக்கு இன்றுவரை நினைவில் இல்லை. ஆனால் நான் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தபோது, என் முன் இருந்த வகுப்பறைக் கண்ணாடிக் கதவில் அவர் என் பின்னால் நிற்பதைக் கண்டேன். திகைத்துப்போய், பேச்சை இடையில் நிறுத்தி  திரும்பி அவரைப் பார்த்தேன். அவரும் சிரித்துக் கொண்டே என் அருகில் வந்து நின்று அந்த அரட்டையில் கலந்து கொண்டார். 

இதுதான் இன்று நடக்கக் கூடாது என்று நினைத்தேன். எனக்கு எப்பொழுது இந்த கூட்டம் கலைந்து போகும் என்று தோன்றியது. ஒருவாறு கூட்டம் கலைய ஆரம்பித்தது. பிள்ளைகள், நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருக்கும் திசை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அவரும் என்னுடன் பேசிக்கொண்டே நடந்தார். 

எல்லோரும் எங்களைப் பார்ப்பதுபோல உணர்ந்தேன். அந்த இடத்தில் இருந்து மாயமாக மறைந்திட முடிந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆசிரியர் மத்தியில் எந்தவிதமான ஒரு கிசுகிசு இருப்பதையும் நான் விரும்பவில்லை. ஆனால் வெள்ளைக்கார ஆசிரியர் கூட்டம் ஏன் எங்களைப் பற்றி கிசுகிசுக்கப் போகிறார்கள். வெள்ளைக்காரியாக பிறந்திருந்தால் வாழ்க்கை இலகுவாக இருந்திருக்குமோ என்னவோ. கணவர் இறந்ததில் இருந்து, என்னுடைய பெரும் பயம், பலரும் பலவிதமாக கதைப்பார்கள் என்பதுதான் .

அன்னப்பறவை வெளிப்பார்வைக்கு அமைதியாக நீந்துவது போல இருந்தாலும் நீருக்குள் எவ்வளவு வேகமாக கால்களை அடிக்கிறதோ, அதுபோலத்தான் நானும். இந்த வாழ்க்கைத் தரத்தையும் சமூக வட்டத்தையும் பராமரிக்க எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்து கொண்டு இருக்கிறேன். நாற்பது வயதில், 16 வயது இரட்டைப் பிள்ளைகளை ஒரு புலம்பெயர்ந்த நாட்டில் தனியாக வளர்ப்பது அவ்வளவு எளிதல்ல. அவர் இறந்தபோது பிள்ளைகளுக்கு 8 வயது. அப்போ ஒரு விதமான பிரச்சனை என்றால் இப்போ கட்டிளமைப் பருவத்தில் பிள்ளைகளைக் கையாள்வது இன்னொரு விதமான பிரச்சனை. சில வேளைகளில், என் நண்பர்களின் வாழ்க்கையைப் பார்க்கும்போது, ’ஏன் என் வாழ்கை மட்டும் இப்படி இருக்கிறது?’ என்ற எண்ணம் வரும். உடலும் மனமும் சோர்வாக இருந்தால் வேறு எப்படிப்பட்ட எண்ணங்கள் வரும்?

இதையெல்லாம் விட கொடுமை கதைப்பதற்கு கூட ஆள் இல்லாமல் இருப்பது. எங்கேயாவது போய் வந்தால், அங்கு நடந்த விஷயங்களை விடுப்புக் கதைக்கக்கூட யாரும் இல்லை. அந்த வெறுமையை சாகும் வரை அனுபவிக்க வேண்டும் என்ற நினைப்பே என்னை அவருடன் கதைக்கத் தூண்டியது. இதெல்லாம் எங்கே போய் முடியும் என்று எனக்குத் தெரியும். வார இறுதியில் வீடுகளில் நடக்கும் பார்ட்டிகளில் என்னைப் பற்றித்தான் விடுப்புக் கதைகள். இங்கு எல்லாருக்கும் எல்லாரையும் தெரியும். அதனாலேயே நான் ஆண்களுடன் பழகுவதைத் தவிர்த்தேன். எனக்கு இது வேண்டாம்.

ஆழமாக யோசித்தால் எனக்கு உண்மையாகவே வேண்டாமா, அல்லது எங்கள் சமூகத்திற்கு பயந்து வேண்டாம் என்று நினைக்கிறேனா. சமூகத்தை விட்டாலும், என் பிள்ளைகள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? என் மாமனார், மாமியார் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? ஏன் இறந்துபோன அவர் மேல இருந்து என்னைப் பற்றி என்ன நினைப்பார்? என் சொந்தப் பெற்றோர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? அவர்கள்தான் இப்ப உயிரோடு இல்லையே. உயிரோடு இருக்கிற என் விருப்பத்தை விட உயிரற்றவர்களின் விருப்பதையெல்லாம் யோசிக்க வேண்டி இருக்குது… வெள்ளைக்காரியாக பிறந்திருந்தால் இப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிராது .

தேடித் தேடிப் பார்க்கிறேன், எங்கள் சமூகத்தில் எங்கேயாவது ஒரு மறுமணம் நிகழ்கிறதா என்று. ஒன்றையும் காணோம். வெள்ளையரின் மறுமணத்தையும் இழிவாகப் பேசுகிறார்கள். யாராவது மறுமணம் பற்றி என்னிடம் பேச மாட்டார்காளா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். இந்த 7 வருடங்களில் யாரும் அது பற்றிப் பேசவே இல்லை. ஆனால் தங்கள் 38 வயது மகளுக்கு என்னிடமே வரன் தேட சொல்கிறார்கள். ஒரு நாள் hair highlight பண்ணியதற்கே midlife crisis என்று கதை கேட்க வேண்டி இருந்தது. இப்ப போய், எனக்கு ஒருத்தரை பிடித்திருக்கிறது என்று சொன்னால் எத்தனை பேர் எத்தனை விதமாக கதைப்பார்கள். 

“வனஜா… என்ன  யோசனை?” என்ற அவர் குரல் என்னை உலுக்கியபோதே நான் நிஜ உலகிற்கு திரும்பினேன். 

“ஏன் வனஜா ஏதும் பிரச்சனையா?” என்று நடப்பதை நிறுத்தி, திரும்பி என்னை பார்த்து கேட்டார். 

இந்தப் பரிவைத்தான் எதிர்பார்க்கிறேன். ஆனால் அது ஒரு தீ. என் மூளையில் குடைந்து கொண்டிருக்கும் எல்லாவற்றையும் அவரிடம் கொட்டித் தீர்த்து விடலாம். அப்போது அந்த தீ குளிருக்கு இதமாகவும் இருக்கும். ஆனால் அதே தீ என் வாழ்க்கையை அழித்து விடவும் கூடும்.  

அவர் கண்களைப் பார்த்து “Bye” என்று சொல்லிவிட்டு, பிள்ளைகளைக்  காரை நோக்கி வருமாறு சைகை செய்து மௌனமாக காரை நோக்கித் தனியாக நடக்க ஆரம்பித்தேன்… 

வீட்டுக்கு வந்து… பிள்ளைகளுக்குச் சாப்பாடு பரிமாறி… சோபாவில் சாய்ந்து வழக்கம் போல அமேசன் தொடரைப் பார்க்கத் தொடங்கினேன்.

இமாம்


77 பார்வைகள்

About the Author

இமாம்

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்