
சில்லென்று வீசும் காற்று மனதை வருடிச்சென்ற கொள்ளை அழகு நிறைந்த இயற்கை. அவசரமாய் பச்சிளம் குழந்தையை ஸ்ட்ரோலரில் வைத்துத் தள்ளியபடி நடக்கும் சீனப்பெண். வேலைக்குச் செல்வோரை ஏற்றியவாறு அடுத்தடுத்து CBDஐ நோக்கிப் பயணிக்கும் துரித ரயில்கள். ஹெட்போனை போட்டுக்கொண்டு தலையை அசைத்தவாறு தமக்குள் சிரிக்கும் இளைஞர். புறப்பட இருக்கும் ரயிலில் ஏறுவதற்குப் படிகளில் விரைந்து ஏறிக்கொண்டிருக்கும் பாடசாலை மாணவி. இவ்வாறு Rushall புகையிரத நிலையம் பரபரப்பாக இருந்தது. நானோ எந்தவித படபடப்பும் இன்றி அமைதியாக நின்றிருந்தேன். என்னுடைய படபடப்பெல்லாம் நேற்றோடு முடிந்துவிட்டது. ஒரு யுத்த காண்டமே நிறைவடைந்துவிட்டது. இது எனக்கான நாள். எனது வாழ்க்கை. எனது மகள். எனது எதிர்காலம். இதுவே எனது சிந்தனையில். இதற்கு மேலும் நடந்த விடயங்களைப் பற்றிக் கவலைப்படுவதில் அர்த்தமில்லை. நினைத்து வருந்துவதால் எதுவும் மாறப் போவதும் இல்லை. எல்லாம் சொல்வதற்கு இலகுதான். முடிகின்ற விடயமா? ஐந்து வயது மகள் விதுராவின் முகம் வந்து போனது. கடைசியாக எல்லாவற்றையும் ஒருமுறை அசைபோட்டுத் தூரத் தூக்கிப் போட்டுவிடு என்றது மனது. தேவையில்லை என்றது அறிவு. மனதை மீறி அறிவு ஜெயிக்குமா என்ன? காலம் பத்து வருடங்கள் பின்னோக்கி நகர்கிறது.
பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் மூன்றாம் வருடத்தில் படித்துக் கொண்டிருந்தேன். பட்டாம்பூச்சிகளாய் திரிந்த காலம். பல்கலைக்கழக விடுதி, குறிஞ்சிக் குமரன், கண்டி ஐயர் கடைச் சாப்பாடு எனக் கஷ்டமே தெரியாத காலம். அந்தக் காலப்பகுதியில்தான் திவாகரின் பெற்றோரை எனது சித்தப்பா மகளின் திருமணத்தில் முதன் முதலில் சந்தித்தேனாம். சொல்லப் போனால் அவர்கள் முகத்தைக் கூட அன்று நான் பார்த்தேனா என்று எனக்குத் தெரியாது. சித்தப்பா மகளின் திருமணம் முடிந்து ஒரு வாரம் இருக்கும். அப்பாவிற்கு சித்தப்பாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. திவாகரின் பெற்றோருக்கு என்னைப் பார்த்ததும் பிடித்து விட்டதாம். ஆஸ்திரேலியாவில் உள்ள இளைய மகன் திவாகருக்கு என்னைப் பேசி முடிக்க சித்தப்பாவை அணுகி இருந்தார்கள் போலும். அப்பாவும் திவாகரின் அப்பாவும் ஒரே ஊர்தானாம். சித்தியின் தங்கை கல்யாணம் முடித்தது திவாகரின் அம்மாவின் ஒன்றுவிட்ட தம்பியின் மனைவியின் தம்பியையாம். இவ்வாறு ஒருவாறாகப் பூர்வீகங்களை அலசி ஆராய்ந்து திருமணம் நிச்சயக்கப்பட்டது. பெண்பார்க்கும் படலம் அவசரமாய் மணமகனின்றியே நடந்தது. Whatsapp callஇல் சம்பிரதாயத்துக்கு முகத்தைக் காட்டினார் மாப்பிள்ளை. மாப்பிள்ளையைப் பற்றி மெல்பேனில் இருக்கும் பெரிய அண்ணாவின் மூத்த மகளிடம் விசாரிக்கட்டுமா என அம்மா கேட்க ”அதுதான் ஒரே ஊராச்சே” என்று ஒரே வார்த்தையில் அம்மாவின் வாயை மூடினார் அப்பா.
எனக்கோ எல்லாம் கனவாய் இருந்தது. ஊர், பழக்கவழக்கங்கள், அந்தஸ்து என அடிக்கடி அம்மா சுப்ரபாதம் பாடிப் பாடி காதல் என்றால் கைகூடாது என்பது எனக்குச் சின்ன வயதிலிருந்தே புரிந்ததாலோ என்னவோ அதைப் பற்றி நான் ஒரு நாளும் யோசித்ததில்லை. பல்கலைக்கழகம் முதலாம் ஆண்டிலிருந்து என் பின்னாலேயே சுத்திய முரளியிடம் பக்குவமாய் இது சரிவராது என நான் சொல்ல அவனும் பவ்யமாய் விலகிக் கொண்டான். ஒருவாறாகப் பரீட்சையை முடித்துவிட்டு திருமதி திவாகராக ஆஸ்திரேலியாவில் காலடி எடுத்து வைத்தேன்.
” வேலைக்குப் போகட்டுமா” என்று கேட்க “இங்க much experience உடையவர்களுக்கே no work. நீர் no experience” என்று அன்பாய் ஆணாதிக்க சிந்தனையை எனக்கே புரியாமல் விதைத்தான். ஆரம்பத்தில் எல்லாம் இனிப்பாகத்தான் இருந்தது. வாரம்தோறும் நண்பர்கள் வீட்டில் வரவேற்பு விருந்து. மாலை 6 மணிக்குச் சென்றால் நள்ளிரவு மூன்று மணி தாண்டும் வீடு வந்து சேர. எனக்கும் எல்லாம் பிடித்திருந்தது. வருடங்கள் நான்கு வசந்தங்களாய் கடந்தன.
காலம் செல்லச் செல்ல திவாகரின் பொறுப்பற்ற தன்மையும் உல்லாச வாழ்க்கையும் எனக்குக் கோபத்தை வரவழைத்தது. குறிப்பாக விதுரா பிறந்த பின்னர் அவளைப் பார்த்துக் கொள்வதிலேயே எனது முழு நேரமும் செலவானது. கோவிட் பெருந்தொற்றுக்கால ஆரம்பத்தில்தான் விதுரா பிறந்தாள். பெற்றோரால் கூட இங்கு வர முடியவில்லை. ஆஸ்திரேலியா தன் எல்லைகளை மூடி நாட்டை வேண்டுமானால் கோவிட்டில் இருந்து பாதுகாத்து இருக்கலாம். ஆனால் எனது வாழ்க்கையே இந்தக் காலப்பகுதியில் தடம் புரண்டு விட்டது. கன்பராவிற்கு வேலை நிமித்தம் சென்றிருந்த திவாகர் அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. நான் தனியே கைக்குழந்தையுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தேன். தொலைபேசி ஆறுதல்களும் அறிவுரைகளும் எனக்கு ஏட்டுப் பாடமாகவே இருந்ததே தவிர, கை கொடுத்து உதவவில்லை.
ஒருவாறாக திவாகர் இரு மாதம் கழித்து மெல்பேன் வந்தார். ஆசையாய் காத்திருந்த எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவரது இயல்பு நன்கே மாறி இருந்தது. என்னிடமோ என் பிள்ளையிலோ எந்த ஈடுபாடும் காட்டவில்லை. அடிக்கடி யாரோ ஒருத்தியுடன் தொலைபேசி உரையாடல். நாட்கள் நகர சில நொடி உரையாடல் மணிக்கணக்கில் நீண்டது. அவர்கள் என்ன கதைப்பார்கள் எனக்குத் தெரியவில்லை. அறைக் கதவுகளைப் பூட்டிக்கொண்டு கதைத்தால் கேட்கவா போகிறது. யார் எனத் தெரிந்து கொள்ள நான் கேட்ட கேள்விகள் அவர் காதுகளில் விழவே இல்லை. காலப்போக்கில் விரிசல் விவாதமானது. அதுவே விவாகரத்துக்கு வித்திடவும் செய்தது. தினசரி சண்டை சச்சரவாக வீடே அமைதி இழந்தது. நண்பர்கள் சமரசம் செய்ய முனைந்தும் அது கைகூடவில்லை. எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. வெளிநாட்டு வாழ்க்கையில் அத்துணை வசதி இருந்தும் வெறுமையே எஞ்சியிருந்தது. பெற்றோருடனான உரையாடலும் என் மன வேதனையைத் தணிக்கவில்லை. தணிக்கத்தான் முடியுமா. சில சமயம் திவாகரை பார்க்கும்போது எல்லாவற்றையும் தூக்கிப்போட்டு விட்டு மீண்டும் ஒரு வாழ்க்கையை ஆரம்பிப்போமா எனக் கேட்கத் தோன்றும். ஒரு நாள் கேட்கவும் செய்தேன். பதில் அதே மௌனம்தான். ஏதோ சொல்ல வந்தவர் சொல்லாமலேயே அறைக்குள் சென்று விட்டார்.
ஒருநாள் வழமையான வாக்குவாதம் பெரும் சண்டையாகவே வெடித்தது. கோபத்தில் காரை எடுத்துக்கொண்டு போனவர் வரவே இல்லை. விவாகரத்து அறிக்கைதான் வந்தது. இதற்கு மேல் யாரையும் வற்புறுத்தி வாழ என் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. நானும் எனக்குத் தெரிந்த நண்பியினூடாக “லீகல் எய்ட்” உதவியுடன் விவாகரத்து வழக்கினை கொண்டு சென்றேன். இதில் வேடிக்கை என்னவென்றால் நாம் இருக்கும் வீடு மற்றும் கார் அனைத்தையும் எனக்கே ஜீவனாம்சமாகக் கொடுக்கிறாராம். எல்லாவற்றையும் கிழித்து முகத்தில் எறியத்தான் தோன்றியது. ஆனாலும் இது விதுராவின் எதிர்காலத்திற்குக் கைகொடுக்கும் என மெளனம் காத்தேன். பல்கலைக்கழக பட்டம், எனக்கென்று உத்தியோகம், அடிமைத்தனம் அற்ற பெண்ணுரிமை என நான் பேசிய பெண்ணியம் என்னைக் கேலி செய்தது. ”ஒரே ஊர்தானே, எல்லாம் எங்கட ஆட்கள்தான்” என்ற அப்பாவின் உத்தரவாத வார்த்தைகள் வெறும் கானல் நீராயின. அப்பாதான் அப்படிச் சொன்னார் என்றால் எனக்கு அறிவு எங்கே போனது. இங்கு வந்த பின்னாவது எனக்கான ஒரு வேலையைத் தேடிக்கொண்டேனா. அதற்குத்தான் அதிகபட்ச முயற்சி எடுத்தேனா. பிறரை நொந்து என்ன லாபம். பட்டதாரி மாணவி இன்று McDonalds ஒன்றில் பகுதி நேர ஊழியராக வேலை செய்கிறேன். இதைவிட single mum pay என்று அரசாங்கத்தின் அனுதாபக் காசு. ஏதோ புண்ணியத்தால் வீட்டு வாடகை கட்டத் தேவையில்லை. அது கட்டியவன் கொடுத்த நஷ்ட ஈடாம். பணத்திற்குப் பெரிதாகக் கஷ்டமில்லை. மனக் கஷ்டத்துடன் ஒப்பிட்டால் பணக்கஷ்டம் ஒரு பொருட்டல்ல. திவாகரை நான் பார்த்து எட்டு மாதங்கள் கடந்துவிட்டன. எல்லாமே ஆன்லைன் மூலம் என்பதால் வழக்குக் காலப்பகுதியில்கூட அவரைச் சந்திக்கவில்லை. அவர் சார்ந்த நண்பர் எவரையும் சந்திப்பதில்லை. எல்லா தொலைபேசி இலக்கங்களையும் block செய்து 8 மாதமாகிவிட்டது. நான்கு மாதத்திற்கு முன்னர் திவாகரின் பெற்றோரை dandenong marketல் கண்டதாகவும் கதைக்கவில்லை என்றும் ஒன்றுவிட்ட அண்ணன் சொன்னான். என்னுடைய விவாகரத்துக்குப் பிறகு அப்பாவும் எங்கள் ஊர் என்று யாருக்கும் சொல்வதில்லை. சொல்லப் போனால் ஊர்காரர்களின் கண்ணில் படுவதே இல்லை. சித்தப்பா குடும்பத்துடன் தொடர்பும் இல்லை. ஆனால் ஊர்தான் என்ன செய்தது. சித்தப்பாதான் என்ன செய்தார். ஆனாலும் கடந்த மூன்று நாட்களாக புதுப்புது இலக்கத்திலிருந்து 20 phone calls. ”ஹலோ நான் திவாகரின்..” சொல்லி முடிப்பதற்குள்ளே பட்டென்று துண்டித்துக் கொண்டேன். மீதம் 19 கோல்களையும் எடுக்கவே இல்லை. வந்திருந்த குறுஞ்செய்தியையும் பார்க்க மனம் சம்மதிக்கவில்லை. சரி போதும். முடிஞ்சது முடிஞ்சதுதான். எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளியிட்டு எனது ரயிலில் ஏறிக்கொண்டேன்.
“நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்” இளையராஜாவின் இசை என்னை ஆர்ப்பரிக்க தொடங்கியது. புதிய அத்தியாயத்தை நோக்கிப் பயணிக்கிறேன். விடுதலைக் காற்றைச் சுவாசிக்கின்றேன்.
அழைக்கப்பட்ட 20 கோல்களுக்கு ஒரு மறுகோல் எடுக்கப்படாதவரையும், குறுஞ்செய்திகள் வாசிக்கப்படாதவரையும் உன் ஊரையும் உறவையும் நீ தேடாதவரையும் உன் புதிய அத்தியாயம் அமைதியாய் தொடரும். திவாகர் ஏன் உன்னை பிரிந்தான் என்பது உனக்குத் தெரியாமல் இருக்கும் என்று விதி சொல்லியது என் காதுக்குள் கேட்கவில்லை. அதற்குள் கண் பட்டது போலும்.
ஒரு கையின் தொடுகையை உணர்கிறேன். ”சுதா நீங்க இங்க எப்படி”.. திவாகருடன் முன் வேலை செய்தவர். ”எல்லம் முடிந்து விட்டதா? இப்படி சின்ன வயதில் திவாக…” அவர் சொன்னது எதுவும் சரியாக கேட்கவில்லை. நிறுத்தி வைத்த கையடக்க தொலைபேசியை ஆன் செய்கிறேன். வந்திருந்தவை குறுஞ்செய்தி அல்ல. நடந்த அனைத்தையும் விளக்கிச் சொல்லும் துயர் செய்தி. அடுத்த புகையிரத நிலையத்தில் இறங்கி விதுராவின் day care நோக்கி விரைகிறேன். அப்பா முகத்தை கடைசியாக காட்டிவிட. எல்லா விவாகரத்தும் விடுதலை அல்ல என்பதை உணர்ந்தவளாய்.