Arts

ஆசிரியர் தலையங்கம்

July 26, 2025 | Ilavenil

மறுபடியும், இளவேனில் சஞ்சிகை மூலமாக உங்களுடன் உரையாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

புலம்பெயர்ந்து வாழுகின்ற நம் தமிழ்ச் சமுதாயம் எதிர்கொள்ளும் பல சிக்கல்களில் ஒன்று,  நம் இளந்தலைமுறையினரை எப்படி வழி நடத்துவது என்பது. தனியாளாய் நம் இளையவர்களின் அகப்போராட்டம் பெரும்பாலும் தாம் வாழும் சமூகத்தினுடைய அங்கீகாரத்திற்கு ஏங்குவதாகவே உள்ளது. அதற்காகப் பல முகமூடிகளை அணிய முனைவதால் ஈற்றில் அவர்களது சொந்த முகங்களும் மறைக்கப்பட்டுவிடுகிறது. தன் உண்மை முகம் எது என்ற தேடலில் தானே தொலைந்து போய், பின்னர் ஒருவாறு மீண்டெழுந்து தன்னைத் தேடிக் கண்டடைந்த பிற்பாடு, சுற்றமும் சமூகமும் தன்னை சரியாய் புரிந்துகொள்ளவில்லை என்ற ஆதங்கம் அத்தலைமுறைக்கு மேலோங்கிவிடுகிறது.

ஒவ்வொருவரும் பல முகமூடிகளை அணிந்துகொள்ளும்போது, தம் உண்மை முகங்களை வெளிக்காட்டாதபொழுது, சுற்றமும்கூட அவர்கள் பார்க்கும் முகமூடிக்குத்தான் வினையாற்றமுடியும். இது இயல்பு. புலம்பெயர்ந்த முதல் தலைமுறையினராகத் தங்களின் இழப்புகளையும் போராட்டங்களையும் துன்பங்களையும் இதுவரையில் பெரிதாக நினைக்காதவர்கள் எல்லோரும் பெற்றோராகத் தம் பிள்ளைகளைப் புரிந்துகொள்ளவேண்டிய இந்தப் புள்ளியில் தடுமாறுவதைப் பார்க்கலாம். அடையாளக் குழப்பங்களுள் வீழ்ந்து மீண்டும் எழுகின்ற தம் பிள்ளைகளை, அவர்கள் அதற்காக அவ்வப்போது தெரிந்தோ, தெரியாமலோ அணிந்துகொள்ளும் முகமூடிகளைப் பெற்றோர்களும் பெரு முயற்சியெடுத்துப் புரிந்துகொள்ளுவது என்பது புலம்பெயர் வாழ்வின் கூறுகளுள் அவசியமானதொன்று. 

பிள்ளைகளின் மனவளத்தையும் மனதில்கொண்டு பெற்றோர்கள் மாறும் காலத்திற்கும் வாழும் சூழலுக்கும் தங்களைத் தகவமைத்துக்கொண்டு அவர்களுக்குத் துணை நிற்கவேண்டும். நாம் வேறொரு இடத்திற்குப் புலம்பெயருகையில் நாம் வாழ்ந்த நாட்டின் பண்பாடுகளையும் மதிப்பீடுகளையும் மறுபரிசீலைனையின்றி இங்கேயும் சுமந்து திரிதல் இரு தரப்பினருக்கும் மன உளைச்சலேயே கொடுக்கும். எதிர்மறையாக அமையும். அதற்கான பலன் ஏதும் நமக்குக் கிடைக்குமா என்றால் அதுவும் இல்லை. நாம் இன்று பின்பற்றும் பண்பாடுகூட நூறு வருடங்களுக்கு முன் வேறொன்றாக இருந்திருக்கக்கூடிய சூழலில் அவற்றைக் கட்டிக்காப்பதற்காக நாம் அத்தனை விலையைக் கொடுக்கவேண்டியதுமில்லை.

பெரும்பாலும் வீட்டிற்குள்ளும் வெளியேயும் வேறாக இயங்கும் இருவேறு வாழ்வியல்களுக்கிடையில் நம் இளம் தலைமுறை தங்களைப் பொருத்திக்கொண்டு, தாங்களும் இச்சமூகத்தின் பிரதிநிதியே என்பதை நிலைநிறுத்த எதிர்கொள்ளும் சிக்கல்கள் இலகுவானவை அல்ல. அவற்றை முதற்தலைமுறைப் பெற்றோர்கள் புரிந்துகொள்வதும் கடினம். ஆனால் முயற்சி செய்தல் அவசியம். தம் மதிப்பீடுகளிலிருந்து மாறுபடுவதாலேயே அவற்றைப் பெற்றோர்கள் மறுக்கலாகாது. இடத்திற்கு இடம், காலத்திற்குக் காலம் மதிப்பீடுகளும் வரையறைகளும் மாறுவது கால வகையினானே.

பிள்ளைகளும் தம் பெற்றோர்களின் தடுமாற்றத்தையும் பின்னடைவுகளையும் பதின் வயதுகளில் இல்லையென்றாலும் பெரியவர்களாக மாறும்போதேனும் புரிந்துகொள்ளுதல் அவசியம். பெரு மரத்தைத் தன் நிலத்திலிருந்து பிடுங்கி வந்து பிறிதொரு நிலத்தில் நட்டுவைத்து வளரும் வாழ்வு நம் பெற்றோருடையது. அது அவ்வளவு இலகுவல்ல என்பதும் அந்த வாழ்வுக்கேயான உடல் உளச் சிக்கல்கள் அவர்களுக்கு இருக்குமென்பதையும் இளையவர்கள் உணர்ந்துகொள்ளுதல் அவசியம்.

தங்களுடைய சுதந்திரமும் உரிமையும் தனித்துவமும் மிக முக்கியம் எனக் கருதும் பிள்ளைகள் சுதந்திரமாக வாழவும் பழகவேண்டும். அதனூடாக வரும் பொறுப்புகளையும் ஏற்கவேண்டும். பெற்றோருடன் செளகரியமாக இருந்துகொண்டு, அவர்களிடமிருந்து கிடைக்கக்கூடிய அத்தனைப் பலன்களையும் அனுபவித்துக்கொண்டு, பின்னர் எந்தவித பொறுப்புகளையும் ஏற்காமல் பேச்சளவில் மட்டும் தங்கள் முற்போக்குச் சிந்தனையைக் காட்டுவது என்பது இரட்டைத் தரநிலை. தம் பெற்றோரின் பலவீனங்களில் குளிர்காய்ந்துகொண்டு அவர்களை எள்ளி நகையாடும் குழந்தைகள் தம் முகமூடிகளை ஒருகணம் சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம். 

புலம்பெயர்ந்த நாட்டில் பல வருட ஓட்டத்திற்கு பின் தங்களை நிலைநிறுத்திக்கொண்டு, ஆசுவாசமடையும் தருணத்தில் இம்மாதிரி அதீத சிக்கல்களை எதிர்கொள்வது என்பது  பெற்றொருக்கு வாழ்க்கை மீதான அசூயையைக் கூட்டவே செய்யும். 

சுதந்திரமாக வாழ்க்கையை நடத்த எத்தனிக்கும்பொழுது சறுக்கல்களும் வீழ்தலும் தவிர்க்கமுடியாதவை. வாழ்க்கை இவை எல்லாம் சேர்ந்ததுதான். அதை ஏற்று முன்னோக்கிச் செல்லவேண்டும்

இரு தரப்புகளும் ஒரு புள்ளியில் சந்தித்து மனம்விட்டு உரையாடுதல் வேண்டும். மற்றைய தரப்பைப் பற்றிய முழுப்புரிதல் நமக்கு இல்லை என்பதை முதலில் உணர வேண்டும். தேவை ஏற்படின்  நிபுணர்களின் உதவியையும் நாடலாம். இளவேனில் போன்ற சமூக சஞ்சிகைகள் அதற்கான களத்தை ஏற்படுத்திக்கொடுக்க முயற்சிக்கின்றன. இரு தரப்புகளின் சிந்தனைகளையும் இளவேனில் தொடர்ச்சியாகப் பதிவு செய்துகொண்டிருக்கிறது. உரையாடல் வெளிகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது.

தாம் நினைப்பதே சரி என்று நினைக்காமல், சற்று விலகி நின்று, பிடியைத் தளர்த்தி, விட்டுப் பிடித்து, இணக்கமான ஒரு உறவை பேணுதல் என்பது இரு தரப்பிற்கும் இன்றியமையாத ஒன்று.

இருத்தலும் வாழ்தலும் இனிது.

அன்புடன்

-இளவேனில் ஆசியர் குழு

Ilavenil


157 பார்வைகள்

About the Author

Ilavenil

2 Comments

  1. கலா பாலசண்முகன் says:

    தலையங்கம் மிகவும் அருமை. நடு நிலையாகவும் சிந்தனை தெளிவோடும் எழுதப்பட்டிருக்கிறது.
    பாராட்டுக்கள் 👏👏

    மற்றவை வாசித்து விட்டு எழுதுகிறேன்

  2. கலா பாலசண்முகன் says:

    தலையங்கம் மிகவும் அருமை. நடு நிலையாகவும் சிந்தனை தெளிவோடும் எழுதப்பட்டிருக்கிறது.
    பாராட்டுக்கள்.

    மற்றவை வாசித்து விட்டு எழுதுகிறேன்

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்