Arts

ஆசிரியர் தலையங்கம் – இதழ் 29

January 25, 2026 | Ilavenil

இளவேனிலின் இன்னுமொரு புதிய படைப்பின் வாயிலாக வாசகர்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

இளவேனில் ஒரு சஞ்சிகையாக மட்டுமன்றி, நம் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக அமையவேண்டும் என்பதே எம் அடிப்படை நோக்கம். பேசப்படாத விடயங்கள், உள்ளக்கிடக்கைகள் வெளிப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடங்கிய எம் பயணம், வாசகர் கருத்துகளிலும், வாசகர் முற்றம் நிகழ்வுகளில் காணும் உற்சாகமான பங்களிப்புகளிலும் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. அதற்கும் மேலாக, தங்கள் ஆக்கங்களை எங்களுடன் பகிர முன்வரும் வாசகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதும் எமக்குப் பெரும் ஊக்கமாக உள்ளது.

அதே நேரம் வாசகர் கருத்துக்களில் ஒரு விடயம் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படுகிறது. அதாவது, பல்வேறு வடிவங்களில் ஆக்கங்கள் வெளிவந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை சோகம் அல்லது மனஅழுத்தம் இழையோடும் ஆக்கங்களாக இருப்பதாகும். இந்தக் கருத்தை நாம் வெறும் குறிப்பாக அல்ல ஆராய வேண்டிய பொறுப்பாகவே எடுத்துக்கொள்கிறோம்.

பொதுவாகப் பேசப்படாத விடயங்களை வெளிக்கொணரும் எம் முயற்சியில், பல ஆழ்மன ஆதங்கங்கள் இயல்பாக வெளிப்படுகின்றன. அவை பெரும்பாலும் பயம், கவலை, இயலாமை, தோல்வி , தனிமை, நிராகரிப்பு போன்ற எதிர்மறை உணர்வுகளாக இருப்பதால் அவற்றின் தாக்கம் படைப்புகளிலும் உரையாடல்களிலும் பிரதிபலிக்கின்றன. இதனாலேயே படைப்புகள் கனதியாக அமைகின்றன. இது இயல்பே. ஆனால் இதனை ஒரு கோணத்திலிருந்து மட்டும் பார்க்காமல் அவற்றின் ஆழ்ந்த அர்த்தத்தையும் அவை ஏற்படுத்தும் மாற்றங்களையும் பார்ப்பது அவசியம்.  இத்தகைய உணர்வுகள் தைரியமாக வெளிப்படுத்தப்படுவதும் அவற்றைப் பற்றிய கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்த்தப்படுவதும் உரியவர்களுக்கு ஒருவகை வடிகாலாக அமைவது மட்டுமன்றி அவர்களுக்குள் ஏற்படக்கூடிய உளவியல் மாற்றத்திற்கான ஆரம்பமாகவும் அமையலாம்.  அவர்களுக்குள் தாம் தனிமையில் இல்லை என்ற உணர்வைக் கொண்டுவரலாம். காலப்போக்கில் இதுவே மனநிலை மாற்றத்திற்கும் மீண்டெழும் திறனுக்கும் வழிவகுக்கும் என்பதே எம் நம்பிக்கை.

இந்த ஆக்கங்களில் பிரதிபலிக்கும் பொதுவான விடயங்களாக தலைமுறை இடைவெளி, கல்வி மற்றும் தொழில்தேர்வு, விவாகரத்து, மறுமணம், கலாசார வேறுபாடுகள் போன்றவை காணப்படுகின்றன. இவை தனிநபர் அனுபவங்களாக மட்டுமல்லாது, ஒரு சமூகத்தின்  பொதுவான மனநிலையை வெளிப்படுத்துவதாயும் அமைகின்றன.  குறிப்பாகத் தலைமுறை இடைவெளி என்பது பெற்றோர்–பிள்ளைகள், மூத்தோர்–இளையோர் என்ற உறவுகளுக்கிடையே உருவாகும் புரிதல் குறைபாடுகள், எண்ணங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளின் மோதல்களை வெளிக்கொணர்கிறது. அதேபோல் கல்வி மற்றும் தொழில்தேர்வு தொடர்பான அழுத்தங்கள் தனிநபரின் விருப்பங்களுக்கும் குடும்பம் மற்றும் சமூகம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கும் இடையிலான மோதல்களை வெளிப்படுத்துகின்றன. விவாகரத்து, மறுமணம் போன்றவை  இன்னமும் சமூகத்தின் பிற்போக்கான சிந்தனையையும் குற்ற உணர்வுடன் அணுகும் தன்மையையும் வெளிக்கொணர்கின்றன.

புலம்பெயர்ந்து காலமாற்றத்துக்கு ஏற்ப தொழில்நுட்பம், வசதி, சிந்தனை என பல முன்னேற்றங்களை நாம் அடைந்தபோதும், அறிந்தோ அறியாமலோ சில பிற்போக்குத்தனங்களை இன்னமும் சுமந்துகொண்டிருப்பதும் உண்மை. பாரம்பரியம், கலாசாரம் என்ற பெயரில் நாம் வாழும் ஒரு யூடோபியன் சமூகக் கற்பனைகூட இதற்குக் காரணமாக இருக்கலாம். 

ஆனால் இவ்விடயங்களின் மறுபக்கத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் முயற்சிகள் காலப்போக்கில் சமூகப் பார்வைகளையும் மாற்றக்கூடும். சமூகப் பார்வைகளில் மெதுவான ஆனால் ஆழமான மாற்றங்களை உருவாக்கக்கூடும். புரிதல் அதிகரிக்கும்போது நெருடல்கள் மங்கலாம். மேலும் மனித அனுபவங்களை திறந்த மனதுடன் அணுகும் ஒரு சூழல் உருவாகும் என்பதே இந்த முயற்சிகளின் அடிப்படை நம்பிக்கையாகும்.

இங்கே நாம் சிந்திக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விடயம், வாழ்க்கையை நாம் எந்தக் கோணத்தில் இருந்து பார்க்கின்றோம் என்பதுதான். பாதி நிரம்பிய குவளையா அல்லது பாதி காலியான குவளையா என்று அடிக்கடி சொல்லப்படும் உவமை, உண்மையில் மனித மனநிலையின் ஆழமான பிரதிபலிப்பாகவே இருக்கிறது. குறைபாடுகளை மட்டுமே முன்னிறுத்தி, இல்லாதவற்றைத் தொடர்ந்து எண்ணிக்கொண்டிருக்கும் மனப்பாங்கு நம்மை அறியாமலேயே எதிர்மறை எண்ணங்களை வளர்க்கிறது. அதனுடன் சேர்ந்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் அளவுகோல்களால் மதிப்பிடும் பழக்கம் உருவாகி, மன அமைதியையும் உள்ளார்ந்த மகிழ்ச்சியையும் மெதுவாகக் களைந்துவிடுகிறது.

இன்றைய சமூகச் சூழலில், கல்வி, தொழில், பணம், கலை, கலாசாரம், குடும்பவாழ்க்கை என அனைத்தும் ஒரே மனிதரிடம் சமமாகவும் முழுமையாகவும் இருக்கவேண்டும் என்ற ஒரு மறைமுக எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முழுமைச் சித்திரம் உண்மையில் பலரின் வாழ்வைத் தொடர்ந்து ஒப்பீட்டின் சுழலில் சிக்கவைத்து, தம்மிடம் இல்லாத ஒன்றையே பெரிதாகப் பார்க்கும் மனநிலையை உருவாக்குகின்றது. அதன் விளைவாக, இருப்பதெல்லாம் சாதாரணமாகவும் போதாமையாகவும் தோன்றத் தொடங்குகிறது. மன அழுத்தம், தன்னம்பிக்கை குறைவு, ஏமாற்றம் போன்ற உணர்வுகள் வலுப்பெறுகின்றன.

இல்லாததைத் தேடும் முயற்சியே மனித முன்னேற்றத்தின் அடிப்படை இயக்கமாக இருப்பது உண்மை. அந்தத் தேடலும் அந்த ஓட்டமும் இல்லையென்றால் வளர்ச்சியும் மாற்றமும் சாத்தியமில்லை. ஆனால் அந்தப் பயணம் இருப்பதை மறந்து இழப்புகளின் பட்டியலாக மட்டுமே மாறும்போது வாழ்க்கை ஒரு முடிவில்லாத ஓட்டமாகவும் சோர்வூட்டும் அனுபவமாகவும் ஆகிவிடுகிறது. அதற்கு மாறாக இருப்பதையும் உணர்ந்து, மகிழ்ந்து, அனுபவித்தபடியே முன்னேற வழிதேடினால், வாழ்வில் ஒரு நிறைவு உருவாகத் தொடங்குகிறது. அப்பொழுது வாழ்க்கை பாதி காலியான குவளையாக அல்லாது பாதி நிரம்பிய குவளையாகத் தோன்றத் தொடங்குகிறது.

அத்தகைய பார்வை மாற்றம் நிகழும்போது, தடைகளைத் தாண்டிச் செல்லும் ஊக்கம் அதிகரிக்கும். சவால்கள் தோல்விகளாக அன்றி கற்றலின் பகுதிகளாகத் தோன்றும். எதிர்மறை எண்ணங்கள் குறையத் தொடங்கும். தன்நம்பிக்கையும், மீண்டெழும் திறனும் வளரும். 

இவ்வாறான பார்வை மாற்றத்திற்கான உரையாடல்களை உருவாக்கும் ஒரு திறந்த, பாதுகாப்பான தளமாக இளவேனில் அமைய வேண்டும் என்பதே எங்கள் நம்பிக்கை. கேள்விகளோடும், அனுபவங்களோடும், முரண்பாடுகளோடும்கூட, வாசகர்களுடன் இணைந்து இந்த சிந்தனைப் பயணத்தைத் தொடர விரும்புகிறோம். ஒருவருக்கொருவர் கண்ணாடியாகவும் துணையாகவும் மாறும் இந்தப் பயணத்தில், வாழ்க்கையைப் பார்க்கும் நமது பார்வை மெதுவாக விரிவடையும் என்ற நம்பிக்கையுடனே இந்த முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்க விரும்புகிறோம்.

Ilavenil


21 பார்வைகள்

About the Author

Ilavenil

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்