Arts

சுந்தரர் தாண்டவம்

July 26, 2025 | கேதா

சுந்தரமல்லன் தன் வீட்டின் பின் இறக்கத்தின் ஓய்வு இருக்கையில் கால் நீட்டி அமர்ந்திருந்தான். அருகில் இருந்து அனல் வீசிக்கொண்டிருந்த வெப்பமாக்கி மெல்பர்ண் குளிருக்கு இதமாக இருந்தது. உடல் மட்டும் ஓய்ந்திருக்க நடுத்தர வயதின் நாய்மனம் ஓயாமல் எண்ண அலைகளில் அலைக்கழிந்துகொண்டிருந்தது. வருகிற மார்கழியோடு ஐம்பத்தைந்து வயதாகப்போகும் மல்லனை நாமும் சற்று மரியாதையோடே விளிப்பது நல்லதென்பதால் இனி அவரை சுந்தரமல்லர் என்றே விளிப்போம். 

செம்பாட்டு மண்ணும் நல்லதண்ணி ஊற்றுமுள்ள ஒரு விவசாயக் கிராமத்தில் இரண்டு கடின உழைப்பாளிகள் இயற்றிய இல்லற வேள்வியில் விளைந்தவர்தான் சுந்தரமல்லர். பாறை பிளந்து பயன்விளைவித்ததாலும், மனைவி கொடுக்கும் பதமான உணவின் பலனாலும் மல்லரின் தந்தை ஒரு மாமல்லராகத்தான் இருந்தார். வியர்வையும் செம்மண் புழுதியுமாய் அவர் வீடு திரும்பும்போதும், கோவணத்தோடு துலா மிதிக்கும்போதும் பல கண்கள் அவரை மேய்வதுண்டு. இந்தக் கட்டழகனின் புத்திரனாக நமது நாயகர் அவதரித்தபோது, தான் மல்லனென்றால் மகன் மாமல்லன் என்று பூரித்து, “குஞ்சரமல்லன்” என்று பெயரிட எண்ணினார். 

‘எப்பொழுதும் அக்கணத்தை மட்டுமே நினைப்பராம் ஆண்கள் அது தவிர்த்து மற்ற எக்கணத்தையும் நினைப்பர் பெண்கள்’ 

என்ற ஆன்றோர் வாக்குக்கமைய, இந்தப் பெயர் எதிர்காலத்தில் தன் மகனுக்கு இம்சையாகிவிடுமே என்றஞ்சிய தாயார், குஞ்சரம் தவிர்த்தால் நன்றென்று பகர்ந்தார். மனைவி சொல்லை மந்திரமாய் ஏற்று சர்வ இலட்சணமும் பொருந்திய தம் மைந்தனுக்கு சுந்தரமல்லன் என்று பெயர்சூட்டினார். 

இந்தத் தோட்டந்துரவுக்க கிடந்து சீரழியாமல் படிச்சு நல்ல உத்தியோகத்துக்குப் போகவேணும் என்ற திடசங்கற்பத்தோடு படித்தார் சுந்தரர். கல்வித்திறமையால் பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்று, புலம் பெயர்ந்து, கலியாணம் கட்டி, மக்களைப் பெற்று, ஆளாக்கி இப்போது வானப்பிரஸ்த்தத்தின் வாசலில் நிற்கிறார். 

எண்ண அலைகளில் அலைந்துகொண்டிருந்த மல்லரை “தேத்தண்ணி வேணுமோ” என்ற மனைவி மகிழினியின் குரல் தடுத்தாட்கொண்டது. “ஓம்” சொல்லி முடித்தவுடன் மீண்டும் எண்ண அலைகள். உள்ளே அடி ஆழத்தில் ஏதோ ஒரு குறை.

கற்றோரும் மற்றோரும் மதித்துப் போற்றும் உயர் பதவி, வசிப்பதற்கொன்று, முதல் வளர்ப்பதற்கு மூன்று என்று நான்கு வீட்டுக் கடன்களைக் கட்டவல்ல வருமானம். பட்டம் பெற்றுப் பணியில் சேர்ந்து சொந்தக் காலில் நிற்கும் மகன். அன்பான மனைவி. இதுவரை பெரிய நோய் பிணி இல்லை. பலபேரின் கனவு வாழ்க்கைதான் மல்லரின் வாழ்க்கை. எல்லாம் இருந்தும் மனதில் ஒரு குறை. 

“என்னப்பா, இண்டைக்கு ஒரே யோசனையா இருக்கிறயள்? வேலையில ஏதும் பிரச்சினையே?” 

தேநீர்க் குவளையை மேசையில் வைத்தபடிக்கேட்டார் மகிழினி. “ஒண்டுமில்லை” என்றபடி, ஒருமிடறு தேநீரை உள்ளே இறக்கினார் மல்லர். ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் ஒரு மிடறுத் தேநீருக்குத் தலைவணங்கி சற்றே ஓய்வெடுத்தன. மறுமிடறு இறங்கியதும் மல்லருக்கு மகிழினியோடு மனம்விட்டுப் பேசவேண்டும் போலிருந்தது. 

“மகிழ், நாங்கள் படிப்பு, வேலை, பிள்ளையள், வீடு வாசல் எண்டு ஓடித்திரிஞ்சதில, எங்களைப் பற்றி யோசிக்காம விட்டிட்டமோ எண்டு யோசிக்கிறன்” ஒரு நீண்ட உரையாடலைத் தொடங்கும் முதற்படியை எடுத்து வைத்தார்.

“எங்கட வேலை, எங்கட பிள்ளையள், வீடு. இதுக்கு நாங்கள் ஓடித்திரியாமல் வேறயார் திரிவினமாம்? ஏதோ ஊருக்கு உழைச்சுக் களைச்சமாதிரிப் புலம்புறியள்?”

மல்லர் மௌனித்தார். அந்த அதீத அமைதியில் மல்லர் தேநீர் உறிஞ்சும் சத்தம் சற்று அதிகமாகவே கேட்டது. 

“அப்பிடி இல்லையப்பா. பெரிய விசயங்களை முடிக்கோணும் எண்டு திரிஞ்சதில எங்கட சின்னச்சின்ன ஆசைகளைக் கவனிக்காமல் விட்டுட்டம்”

“எல்லாரும் எல்லாத்தையும் கவனிக்கேலுமே?  எனக்குந்தான் பாட்டுப் பாட விருப்பம். அஞ்சு வயசில நான் தேவாரம் பாடினதைப் பார்த்து என்ற ஒண்ட விட்ட பெரியம்மா அப்பவே சொன்னவா, எனக்குப் பெரிய எதிர்காலம் இருக்கெண்டு. இப்ப உங்களோடையும் பெடியனோடையும் கத்திக் கத்தித் தொண்டைத் தண்ணி வத்தினதுதான் மிச்சம்”

மகிழினியின் சலிப்புச் செறிந்த பதில் மல்லருக்கு ஆடே ஓடிவந்து அடுப்படியில அணைஞ்சதுபோலிருந்தது. கதிரையில் நிமிர்ந்து அமர்ந்து, ஆழமாகத் தன் மனைவியின் கண்களைப் பார்த்து ” அதேதான் நானும் சொல்லுறன். அப்பிடி நாங்கள் விட்ட விசயங்களை இனிச் செய்யவேணும். இப்பப் பிள்ளையள் வளந்திட்டுதுகள். நாங்கள் இனி எங்களுக்காக வாழவேணும். எங்களுக்குப் பிடிச்சதுகளைச் செய்யவேணும். அதுதானப்பா we need some “me time”.

“சரி நீங்கள் இருந்து உங்கட மீ டைமை என்ஜோய் பண்ணுங்கோ. எனக்கு வேலைகிடைக்கு”.

ஒரு ஆழமான, ஆத்மார்த்த கலந்துரையாடலை அலட்சியமாகக் கடந்துபோன மனைவிமேல் மல்லருக்கு ஆத்திரத்தைவிட, அவள் அறியாமையை நினைத்துச் சிரிப்புத்தான் வந்தது. அது ஒரு ஞானச் சிரிப்பு. மாயையின் தளை அறுத்து, நிலையான பேரின்பத்தின் வழியறிந்த ஞானிகளுக்கே உரிய சிரிப்பு. இனி என்வழி தனிவழி என்ற உள்ளத்து உறுதியின் சிரிப்பு. 

அடுத்தநாள் தனியாக ஒரு திரைப்படத்தில் மூழ்கியிருந்த மகிழினியின் கவனத்தை மாடியிலிருந்து தொடர்ச்சியாகக் கேட்ட இடியோசைகள் கலைத்தன. பதறிப்போய் மாடி அறையைத் திறந்துபார்த்த மகிழினிக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.  

‘தகிட ததிமி தகட ததிமி தந்தானா, இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா’ என்று பாடல் சத்தமாக ஒலிக்க மல்லர் சுழன்று சுழன்று ஆடிக்கொண்டிருந்தார். அந்த ஊழிப் பெருங்கூத்தின் அதிர்வில் மேசையிலிருந்த சில பல பொருட்கள் விழுந்து சிதறியருந்தன. 

“நிப்பாட்டுங்கோ. என்ன விசர்க்கூத்திது. விசர் முத்திப் போச்சே?” என்ற மனைவியின் அதட்டல், மல்லரைக் கலையுலகிலிருந்து மண்ணுலகிற்கு மீட்டுவந்தது. 

“உமக்குத் தெரியாது. நீர் சின்னனில பாடினமாதிரி, நான் நல்லா ஆடினனான். பரத நாட்டிய வகுப்பில சேத்துவிடக் கேட்டனான். ஆம்பிளைப் பிள்ளைக்கு என்ன ஆட்டம் எண்டு அப்பா விடவேயில்லை. இனியெண்டாலும் என்ற விருப்பங்களை நான் நிறைவேற்றவேணும்.”

“அதுக்கு இப்பிடிக் கூத்தாடி வீட்டையேன் உடைக்கிறயள்?” 

“சரி. நான் இனி வேற இடத்தில ஆடுறன்”

இதென்ன சீரழிவப்பா. இந்தாள் நல்லாத்தேனே இருந்தது. எதுக்கும் கொஞ்சம் விட்டுப்பிடிப்பம் என்று சிந்தித்த மகிழினி, “ உங்கட வீடுதானே, அதை நீங்களே ஆடி அடிச்சுடையுங்கோ” என்ற சலிப்புரையுடன் அவ்விடம் விட்டகன்றார். 

 மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. அதிகாலை ஐந்து மணி. மெல்பேர்ண் நகரம் மைனஸ் இரண்டு பாகை செல்சியஸ் குளிரில் இறுக்கமான பனிப் புகாரில் நடுங்கிக் கொண்டிருந்தது. மல்லரின் வீடு மட்டுமல்ல அந்த வீதியிலேயே யாரும் விழித்திருக்கவில்லை. 

மல்லர் யாதும் சுவடுபடாமல் எழுந்து கராஜுக்குள் நுழைந்தார். முக்காலியில் கமராவைப் பொருத்திச் சரிபார்த்தார். எலும்புகளை நடுங்கவைக்கும் குளிர் மல்லருக்கு நட்டுவாங்க ஆசானாகத் தெரிய, தூரத்தில் கேட்ட கோக்கபுராவின் சிரிப்பும், கொக்கட்டுவின் கனைப்பும் இசையாக, தொலைபேசியில் பாடலை ஒலிக்கவிட்டார். 

ஆடல் கலையே தேவன் தந்தது. தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது. 

இடையில் வேட்டியை பஞ்சகச்சமாகக் கட்டி, வெறும் மேலோடு ஆடியபோது கயிலைமலையில் களிநடம்புரியும் ஆடலரசனே தன்னுள் இறங்கி ஆடுகிறான் என்று உணர்ந்தார் மல்லர். மைனஸ் இரண்டு பாகைக் குளிரிலும் வேர்த்துக் கொட்டியது. ஆடி அடங்கியதும், எந்தத்  தடயமும் இல்லாமல் கராஜை பழையபடி மாத்தியபின் காணொளியைப் போட்டுப் பார்த்தார். பெருமை பிடிபடவில்லை. கலையென்பது ஒரு கொடை. எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. எனக்கு எக்கச்சமாக வாய்த்திருக்கிறது என்று உள்ளம் நெகிழ்ந்தார்.

இதை யாருக்காவது சொல்லோணுமே. யாரொடு பகிர்வேன், யார்க்கெடுத்துரைப்பேன் என்று சிலகணங்கள் சிந்தித்து, உயிர்நண்பன் இந்திரபாலனுக்கு வாட்ஸப்பில் தட்டிவிட்டார். உடனடியாக “சீன்” என்று இரண்டு சரிகள் வந்தது. அவன் பதிலுக்காக காத்திருக்கும்போதுதான் வெறும்மேல் குளிரத்தொடங்கியதை உணர்ந்தார். குளிரும் வியர்வையும் நீங்க ஒரு வெந்நீர்க் குளியல்போட்டு, சூடான கோப்பியோடு வந்து தொலைபேசியை எடுக்கவும் இந்திரனின் அழைப்பு வரவும் சரியாக இருந்தது. 

“மச்சான். எப்பிடி மச்சான். இப்பிடி ஆடுறாய். எங்கயடா இருந்தனி இவளவு நாளா? இதையெல்லாம் நீ டிக்டோக், இன்ஸ்ட்டா, பேஸ்புக் எண்டு போடோணுமடா. ஒரு நல்ல கலைஞன் குடத்துக்குள்ள விளக்காய் இருக்கக்கூடாது கண்டியோ” 

மல்லருக்கு இருந்த நேர்மறை எண்ண அதிர்வுகளுடன் மகிழினி போன்றோரின் எதிர்மறை அதிர்வுகள் பொருந்தவில்லை. இந்திரனின் இதமான வார்த்தைகள் ஒரே அதிர்வெண்ணில் இருந்ததால் உடனடியாகப் பரிவடைந்து “உண்மைதானடா, போடத்தான் வேணும்” என்று உடன்பட்டார். உடனேயே செயற்பட்டார். 

அடுத்த அரைமணி நேரத்தில் வாழ்த்துகளும், அருமைகளும், இதயக் குறிப்புகளும் மல்லரின் முகநூலையும் இன்ஸ்டாவையும் இன்னபிற தளங்களையும் நிறைக்க, அவரின் காணொளி பல வாட்ஸப் குழுமங்களிலும் பகிரப்பட்டது. 

உருகிப்போனார் மல்லர். “When you want something, the whole universe conspires in order for you to achieve it” என்ற மகாவாக்கியத்தின் அர்த்தத்தின் தித்திப்பை நினைந்து திளைத்தார். ஒரு கலைஞனாகத் தொடர்ந்து தான் களிநடனம் புரிந்து காணொளிகளைப் பகிரவேண்டும் என்று திடசங்கற்பம் கொண்டார். 

நாளொரு காணொளி, பொழுதொரு நாட்டியம் என்று வளர்ந்தது கலை. வருகின்ற ஏராளம் வாழ்த்துகளில், ஒருநாள் உனைக்  காணாவிடின் உறங்காதெந்தன் இருமான்விழி என்று வந்திருந்த வாழ்த்து கவனத்தை ஈர்த்தது. அனுப்பியது அம்பிகைவாணி. அம்பிக்கு என்னில எப்பவும் ஒரு தனி அன்புதான் என்று தன்னை நோக்கி மெல்லச் சிரித்தார் மல்லர். அம்பியின் முகநூல் கவிதைகளால் நிரம்பியிருந்தது. இரண்டுமூன்று அருமையையும் ஆங்காங்கே இதயக் குறிகளையும் இட்டு மீண்டார். மறுகணமே நாண இரசம் மேலோங்கும் ஒரு பாடலை அடுத்தமுறை அரங்கேற்றவேண்டும் என்றும் நினைத்துக்கொண்டார். பாடகர்களைப்போல, அறிமுகமில்லாதவர்களுடன் சேர்ந்து ஆடும் தளங்கள் ஏதாவது இருக்கிறதா என்று தேடவேண்டும் என்றும் நினைத்துக்கொண்டார். ஆர்மோனியத்தில் பட்டதும் பாடல்களைக் கொட்டும் இளையராஜாவின் விரல்கள்போல தன் மனதின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் பாதங்களை நினைத்துப் பரவசமுற்றார். இப்போது மீண்டும் நண்பன் இந்திரனிடமிருந்து அழைப்பு. 

“மச்சான். இப்ப எங்க பாத்தாலும் உன்ற ஆட்டத்தைப் பற்றித்தான் கதை. உன்னை மேடையேத்தி அழகுபாக்கோணும் எண்டு எங்கள் எல்லோருக்கும் ஆசையாக் கிடக்கு. மாட்டன்  எண்டு சொல்லிப் போடாத. எல்லா அலுவலும் நாங்கள் பாக்கிறம்” படபடவென இந்திரன் சொல்ல, மல்லருக்கு என்ன சொல்லிறதெண்டே தெரியேல்ல. கம்பருக்கு ஒரு சடையப்பராய் எனக்கு இவன் வாய்ச்சிருக்கிறான். 

“டேய், நன்றியடா. ஆனால் நான் முறையா நாட்டியம் படிக்கேல்ல. குருவெண்டு ஒருத்தரும் இல்லை. அதோட இந்த வயதில..சனம் சிரிக்குமடா. சும்மா உசுப்பேத்தாத” 

“சனத்தின்ற கதையை விடு. நீ ஏகலைவனடா, உனக்கு நீதான் குரு. பிறவிக் கலைஞனுக்கு குரு தேவையில்லை. அதோட எந்தவயதிலையும் சாதிக்கலாம் எண்டதுக்கு நீ ஒரு எடுத்துக்காட்டு. நீ கட்டாயம் அரங்கேறவேணும்” 

இந்திரனின் மந்திரச் சொற்களில் மயங்கிப் போனார் மல்லர். மனுசி பிள்ளையளிட்ட ஒருவார்த்தை கேட்கக்கூட நினைக்காமல், “சரி உன்னை நம்பி இறங்குறன். எல்லாம் நல்லா நடக்கோணும்” என்று அரங்கேற இணங்கினார் மல்லர். 

இரவுமுழுவதும் தூக்கமின்றித் தவித்தார் எங்கள் ஆடலரசர். பூசலாரின் கோயில்போல மெல்ல மெல்ல அவர் மனதில் அரங்கேற்ற ஆயத்தங்கள் தொடங்கின. 

சில இரசிகர்கள் மேலைத்தேய, பொலிவூட் வகை நடனங்களை எதிர்பார்த்தாலும், தன் மனதிற்கு நெருக்கமான பரதநாட்டியம் சார்ந்த நடனங்களையே அரங்கேற்றவேண்டும் என்பதில்  உறுதியாக இருந்தார் மல்லர். உரைகள் எதுவும் தேவையில்லை. ஒரேநேரத்தில் அரங்கிலும், இணையவழியிலும் கண்டுகளிக்கும் வகையில் இருக்கவேண்டும். ஒரு மூன்று கமரா போட்டு, லைவ் மிக்சிங் செய்தால் சிறப்பு. மங்கோ ட்ரீயிடம் சைவச் சாப்பாடு எடுக்கோணும். சில தெலுங்குக் கீர்த்தனைகள், தமிழ் உருப்படிகள், பாரதியார் பாட்டொண்டு, ஒரு தில்லானா, கொஞ்சம் சினிமாப் பாட்டுகள். லோக்கல் ஆக்களைப் போட்டால் குவாலிட்டி குறைஞ்சிடும். வெளியாக்களை இறக்கினால் செலவு. அதோட நேரமும் இல்லை. இந்தியாவில இருந்து ரெக்கோட்பண்ணி எடுத்து இஞ்ச போடுவம். பொன்னாடைச் செலவும் மிச்சம். உன்னிகிருஷ்ணனையும், மகளையும் கேக்கலாம். கடுமையாச் செலவழிக்கவும் கூடாது. எனக்கும் ஒரு நாலஞ்சு காஸ்ட்யூம் எடுக்கோணும். மகிழுக்கும் பிள்ளையளுக்கும் உடுப்பு…எக்கச்சக்கமா வேலைகிடைக்கு. 

மல்லர் மனம் நில்லாமல் ஓடியது. 

சிலவாரங்களில் அரங்கேற்ற நாளும் வந்துவிட்டது. டான்டினோங் தமிழர் கலாசார மண்டபத்தில் இரசிகர்கள் குழுமியிருக்கிறார்கள். மெல்பேர்னின் புகழ்பூத்த அறிவிப்பாளர் சத்தியா நிரஞ்சனின் சிம்மக் குரல் “உடலால் இளையவர்கள் அரங்கேறிப் பார்த்ததுண்டு. உள்ளத்தால் இளையவரின் அரங்கேற்றம் காண வந்துள்ள கலை இரசிகப் பெருமக்களே..” என்று விழாவைத் தொடங்கிவைத்தது. 

வாசலில் நின்று வரவேற்றுக் கொண்டிருந்த மகிழினிக்கு எப்பிடி இப்பிடிச் சிக்கினாங்கள் என்ற குழப்பமே மேலோங்கி இருந்தது. “ஏதோ இந்தாள் விளையாட்டாத் தொடங்கி, இங்க கொண்டந்து விட்டிருக்குதே. குழப்பம் இப்ப ஆத்திரமாய் மாறியது. எல்லாம் இந்த இந்திரன் விசரன்ற வேலை. பெடியன்ற கலியாணத்துக்குச் சேத்து வச்ச காசை இந்தாள் கூத்தாடி அழிக்குமெண்டு நான் கனவிலையும் நினைச்சனானே”  தனக்குள் பேசிக்கொண்டிருந்த மகிழினியை, “அம்மா” என்ற மகனின் அழைப்புச் சற்று நிறுத்தியது. 

“How the hell we ended up here amma. It’s ridiculous and disgusting. All my friends are laughing behind my back. I know for a fact, even though they don’t say that to my face. I feel so embarrassed. I mean, this is serious cringe stuff. I feel bad for you too. I know appa is stubborn, but this is a disaster” 

இடைவிடாமல் பொழிந்த மகனை மகிழினி இடைமறிக்கவில்லை. அவனெண்டாலும் மனதில் பட்டதை சொல்லட்டும் என்று நினைத்திருக்கலாம்.

“இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பொன்விழாக்கண்ட புத்துயிர் இளைஞன், தானே தனக்குக் குருவாயிருந்து தனை வளர்த்த தன்னிகரிலாப் பெரும் கலைஞன். இணையவழி வந்து நம் இதயம் கொண்டவன். இதோ உங்களை மகிழ்விக்க வருகிறார். ” அறிவிப்பாளர் முழங்க, இசை முழங்க, விளக்குகள் ஒளிர அத்தனை கண்களும் மேடையை மொய்க்கப் பாடல் ஒலிக்கிறது.

“வாக்ரதாயாவத சம்பிரக்தோ…” சலங்கையொலியின் பாடல் ஒலித்தது.

சிவப்புப் பட்டுப் பஞ்சகச்சத்தோடு, வெறும்மேலில் சரிகைச் சால்வை மட்டுமே அணிந்து ஒற்றைக் காலைத் தூக்கியபடி சுந்தரமல்லர் நடுநாயகமாகத் தோன்றினார். அடுத்த அடியில் அவைக்கு வணக்கம் சொல்லி மீண்டும் திருவடி தூக்கினார். முழங்காலிலிருந்து  இழுபட்டுப் போகும்பொது மகிழினிக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற பதட்டம் தொற்றிக்கொண்டது. அடுத்ததாக இரண்டு கைகளையும் பம்பரமாய்ச் சுற்றிச் சுழன்றாடினார் மல்லர். அடுத்தது மிகச் சிக்கலான அசைவு. துள்ளி வானில் எழுந்து, தரையில் பாதத்தை ஊன்றி, சடுதியாக முழங்காலில் இருக்கவேண்டும். முழங்காலை இழுத்தபடி நகரவேண்டும். பல அசம்பாவிதங்கள் நிகழலாம் என்ற அச்சத்தால் ஒத்திகைகளில் அதைத் தவிர்பதாகாகவே தீர்மானிக்கப் பட்டிருந்தது. தாளம் தப்பிவிடலாம் என்று சிலர் எச்சரித்தார்கள். அது எப்போதும் சேரவேயில்லை என்பது வேறுகதை. இருந்தாலும் இது அரங்கேற்றம். இதிலெப்படி உச்சக்கட்ட கலை வெளிப்பாட்டைத் தவறவிடலாம் என்று சிந்தித்த மல்லர், முழுவேகத்தோடு துள்ளி எழுந்து, இரண்டு காலையும் மடக்கிக் காற்றில் பறந்து, வலதுகாலை ஊன்றினார். கணப்பொழுதில் கால் வழுக்க, பஞ்சகச்சம் கிழிய, இரண்டு காலும் இருவேறு திசைகளில் போக மல்லாந்து விழுந்தார் மல்லர். 

“என்ற சிவபெருமானே” என்ற மல்லரின் ஓலம் அரங்கைப் பிளந்தது. ஒருகணம் இதுவும் நடனத்தின் அம்சமோ என்று நினைத்த அவைக்கு, “ஐயோ சுந்தர் அப்பவும் சொன்னனான்..” என்று கத்தியபடி மேடைக்கு ஓடிய மகிழினியின் குரல் நிலைமையின் தீவிரத்தை உணர்த்தியது. 

தறித்து விழுத்திய சோத்திப் பனைபோல் விழுந்துகிடந்தார் மல்லர். 

நாதவினோதங்கள் நடன சந்தோசங்கள் பரம சுகங்கள் தருமே 

அபிநயம் காண்பதும் அதில்மனம் தோய்வதும் வீடுபேறு தருமே 

உன்னிகிருஷ்ணனும் மக்களும் பாடிய கவர் பாடல் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. 

“சுந்தர், சுந்தர்..” மகிழினியின் பதட்டமான குரல் கொஞ்சம் கொஞ்சமாய் அழுகையாய் மாறத்தொடங்கியது. “அப்பா. எழும்புங்கோ அப்பா” விம்மினான் மகன். 

யாரோ அவசரசேவைகளுக்கு அழைப்பெடுத்தார்கள். முன்வரிசையில் சிறப்புவிருந்தினர்களில் ஒருவராக அமர்ந்திருந்த மருத்துவர் பாலா ஓடிவந்தார். 

மூச்சும் இதயத்துடிப்பும் இருக்கிறதா என்று சோதிக்க மல்லரின் கையைப் பிடித்தார் பாலா.

சலங்கைகள் ஒலிக்க மல்லரின் கால்கள் மெல்ல அசையத் தொடங்கின.  

நர்த்தனமே சிவகவசம் நடராஜ பாதம் நவரசம். 

பாடல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது. 

கேதா


260 பார்வைகள்

About the Author

கேதா

2 Comments

  1. Gajamugan says:

    மிகவும் அருமையான படைப்பு..
    உங்களின் நம் சமூகம் மீதான ஆழமான உற்று நேக்கல் தெளிவாக தெரிகிறது….

  2. கேதா says:

    நன்றி கஜமுகன்.

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்