Arts

வாசகர் முற்றம்

January 25, 2026 | Ilavenil

வாழ்க்கைத்துணைத் தெரிவு – பிள்ளைகள் எதிர்பார்ப்பும், பெற்றோர் குரலும்

வாழ்க்கைத் துணைத் தெரிவு என்பது குடும்பங்களிலும் எமது சமூகத்திலும் நீண்ட காலமாக விவாதிக்கப்படும் ஒரு முக்கியமான விடயமாகும். தலைமுறை மாற்றம், கல்வி, தொழில், சமூகச் சூழல் போன்ற காரணிகள் இந்த முடிவை அணுகும் முறையிலும் மாற்றங்களை உருவாக்கியுள்ளன. இந்தப் பின்னணியில், பெற்றோரும் இளைஞர்களும் ஒரே மேடையில் அமர்ந்து வாழ்க்கைத் துணைத் தெரிவு குறித்து பேசுவதற்காக நடத்தப்பட்ட வாசகர் முற்றக் கலந்துரையாடல் கவனிக்கத்தக்க ஒரு உரையாடல் முயற்சியாக அமைந்தது. இளவேனில், வருடம் இருமுறை இதழ்களை வெளியிடுவதோடு மட்டும் நிறுத்தாமல் ஒஸ்ரேலியத் தமிழ் சமூகத்தின் வாழ்வியலையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் எமது சமூகத்தினுள் ஊடுருவச் செய்யும் முயற்சியாக “வாசகர் முற்றம்” நிகழ்வையும் நடாத்திவருகிறது. அவ்வகையில் கடந்த ஐப்பசி மாதம் 19ம் திகதி நடைபெற்றது இக் கலந்துரையாடல்.
இது சரி–தவறு என முடிவுகளை வகுப்பதற்கான ஒன்றாக அல்லாமல், வாழ்க்கைத் துணைத் தெரிவை ஒவ்வொரு தரப்பினரும் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பாகவே வடிவமைக்கப்பட்டது. பாதுகாப்பான உறவுகள் எவ்வாறு உருவாகின்றன, அதில் பெற்றோர் மற்றும் இளைஞர்களின் பங்கு என்ன என்பதைக் குறித்தே பெரும்பாலான உரையாடல்கள் நகர்ந்தன.
இந்த நிகழ்வில், குடும்பநல ஆலோசகர், திருமதி. ரத்னா செந்தில்வேல் மற்றும் மனநல ஆலோசகரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, உரையாடலுக்கு ஒரு சமநிலையான வழிகாட்டுதலை வழங்கினார்கள். வாழ்க்கைத் துணைத் தெரிவு தொடர்பான உளவியல் மற்றும் குடும்பநலக் கோணங்களை விளக்கினார்கள். இதன் மூலம், விவாதம் உணர்ச்சி பூர்வமாக மாறாமல், சிந்தனைக்கான தளமாக உருவானது.

இளைஞர் பார்வை
இளைஞர்களைப் பொறுத்தவரையில் தமக்கான வாழ்க்கைத்துணைத் தெரிவு என்பதில் தங்களது பிடித்தமும், மகிழ்ச்சியும் முதன்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பெற்றோர்களின் சிந்தனைகளும், கருத்துக்களும் நிச்சயமாக அவர்களது தெரிவுகளில் பிரதிபலிப்பதாகவும் உணர்கிறார்கள். சிறுவயதிலிருந்து அவர்களது கருத்துக்களுடன் ஒன்றி வளர்ந்தது இதற்கான காரணம் என்றும் புரிந்துகொள்கிறார்கள். தங்களது தெரிவுகள் தொடர்பான பெற்றோரது நியாயமான கருத்துக்களைக் கேட்கத் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் அதே வேளையில் இன, சாதி, மத பேதங்கள் தொடர்பான பெற்றோரது கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதனையும் மிகவும் ஆழமாகப் பதிவு செய்தார்கள்.

ஒஸ்ரேலியா ஓர் பல்கலாசாரச் சமூகமாக இருப்பதனால், பெற்றோரது பெரிய பயமே, தாங்கள் வேறு இனத்தவரோடு பழகுவதுதான் என்றும், குறிப்பாக dating என்று வரும்போது அதன் செயன்முறை பற்றிய புரிதல் இல்லாமையே பெற்றோரது பயத்தை அதிகரிப்பதாகவும் எண்ணுகின்றனர்.

அதே நேரம் சில தமிழ்ப் பெற்றோர்கள், தங்களது தெரிவுகளை மறுப்பது மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளனர், காதல் என்ற வார்த்தை வந்தாலே அதற்கு மேல் எங்களை பேச விடுவதில்லை அல்லது எமது மனதை மாற்றும் முயற்சியே செய்கிறார்கள் என்ற கருத்தும் எழுந்தது. மேலும் தங்களது வாழ்க்கைத் துணைத் தெரிவு தவறும் பட்சத்தில் பெற்றோரை அணுகுவது பயமளிப்பதாகவும், “நான் உனக்கு படிச்சுப் படிச்சு சொன்னேன், கேட்காததாலதான் இப்ப அனுபவிக்கிற” போன்ற குற்றம் சுமத்தும் தன்மையும் தங்களது அச்சத்தை அதிகரிப்பதாகக் கூறினர்.

பெற்றோர் பார்வை

தங்களது வாழ்க்கை முழுவதும் பிள்ளைகளைச் சுற்றியே அமைந்ததாகவும், அவ்வகையில் பிள்ளைகளுக்கு எது சரி, எது தவறு என்பதை சிறு வயதிலிருந்து சொல்லி வளர்க்கவேண்டும் என்று உறுதியாகக் கூறினார்கள். அதே நேரம் வாழ்க்கைத் துணைத் தெரிவு என்று வரும் போது, தங்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருப்பதாகவும், தாங்கள் சிறுவயதிலிருந்தே வளர்ந்து வந்த பாரம்பரியத்தையும், எடுத்துவந்த கருத்துக்களையும், பழக்கவழக்கங்களையும் உடைத்து வெளிவருவது சிரமமான விடயம் என்பதையும் பதிவு செய்தார்கள்.
அதேவேளை பிள்ளைகளது விருப்பங்களைக் கண்மூடித்தனமாக இன்றைய பெற்றோர்கள் மறுப்பதில்லை என்பதை வலியுறுத்திய அதே நேரம், தங்களது எதிர்பார்ப்புகள் உடையும்போது, அது கோபமாகவோ ஆதங்கமாகவோ வெளிப்படுவதைத் தடுக்க இயலவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டார்கள். முதலில் கோபம் எழுந்தாலும் பிள்ளைகள் எப்படியோ போகட்டும் என்று விடுவதில்லை. தங்களுக்கு அவர்களது தெரிவு தவறாக இருப்பதாக எண்ணினால் அவ் உறவிலிருந்து பிள்ளைகளை வெளிக்கொணரவே முயல்கிறார்கள். தோல்வியடைந்தாலும் கூடவே இருந்து அவர்களுக்கான அனுசரணையை வழங்கவே முயல்வோம் என்பதையும் வலியுறுத்தினர்.
அதே நேரம், பிள்ளைகள் தங்களது உணர்வுகளையும் புரிந்துகொள்ள முயல வேண்டும். அவர்களை மட்டுமே முன்னிலைப்படுத்த விளைகிறார்கள் என்ற கருத்தும் வைக்கப்பட்டது.

குடும்பநல ஆலோசகர் மற்றும் மனநல ஆலோசகர் கருத்துக்கள்
பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளை போக்கும் ஒரே வழி மனம் திறந்த உரையாடல்களும், பரஸ்பர புரிந்துணர்வும் மட்டுமே என்பதை வலியுறுத்தினர். அதிலும் திருமதி.ரத்னா அவர்கள், பெற்றோர் பிள்ளைகளின் நம்பிக்கையை பெறும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். குறிப்பாக பிள்ளைகள் தங்களிடம் மனம் திறந்து ஒரு விடயத்தினைப் பகிரும் பொழுது, அதைப் பற்றி அறிவுரைக்காகவேனும் ஏனையோருடன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார். இல்லையேல் அவர்களது நம்பிக்கை உடையும்பட்சத்தில் ஒரு பிரச்சனைக்காக உங்களை அணுகத் தயங்குவார்கள். மேலும் பெற்றோர் பிள்ளைகள் தங்களது பிரச்சனைகளைக் கூறும்போது எந்தவொரு உடனடி எதிர்வினையையும் காட்டாமல், அவர்களைக் குற்றம் சுமத்தாமல், பொறுமையாக அவர்கள் கூறுவதினைக் கேட்க வேண்டும். அதேவேளையில் பிள்ளைகளும் எந்தவொரு பிரச்சனை வந்தாலும் முதலில் பெற்றோருடன் கலந்துரையாட வேண்டும். பெற்றோரினைவிட வேறொருவரும் உங்கள் நன்மையை மாத்திரம் கருத்திற்கொண்டு செயற்படமாட்டார்கள் என்பதையும் வலியுறுத்தினார்.
மனநல ஆலோசகரும் இளைஞர்கள் எப்பொழுது எவ்விடயங்களை, எப்படிப் பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என்பதயும் புரிந்து நடந்துகொள்ள வேண்டும். சரியான தருணத்தில் நடைபெறும் உரயாடல்கள், நல்லதொரு சமநிலையான தீர்வைக் கொணர உதவும் என்பதை வலியுறுத்தினார்.

நேயர்கள் கேள்வி நேரம்.
இந்நிகழ்வின் மிகச் சிறந்த வெற்றியாக நேயர்கள் ஆவலுடன் உரையாடியதையும், தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டமையையும் கூறலாம். அதிலும் குறிப்பாக இத்தருணத்தில் எமது சமூகத்தில் நிலவிவந்த சில கருத்துக்கள் தகர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முதலாவதாக சிறுவர்களாக இருந்தபோது பெற்றோரிடம் நெருங்கிப் பழகும் நீங்கள் இளைஞரானது வெகுதூரம் சென்றுவிடுவதாகவும், பெரும் இடைவெளி ஏற்படுவதாகவும் நேயர் ஒருவர் கேட்டபோது, இளைஞர்கள், அதை ஏன் இடைவெளியாகப் பார்க்கிறீர்கள்? அது எங்களது உறவு முறையில் ஏற்பட்ட சிறிய மாற்றம்தானே தவிற இடைவெளி அல்ல என்பதை வலியுறுத்தினர். சிறியவர்களாக இருந்தபொழுது நாங்கள் அதிகம் உங்களில் தங்கியிருந்தோம், இப்பொழுது வேலை, படிப்பு போன்ற காரணங்களால் வேறு இடங்களிற்கும் செல்லவேண்டி இருக்கிறது. இது இடைவெளி அல்ல. ஒரு மாற்றம் மட்டுமே என்றனர்.

இரண்டாவதாக, நேயர் ஒருவர், இன்றைய இளைஞர்கள் மத்தியில் “brakeup” சாதரணமாகிவிட்டது. ஏன் எப்பொழுதும் தாவிக்கொண்டே இருக்கிறீர்கள்? என்று கேட்டபொழுது, இளைஞர்கள், அப்படிப் பொதுப்படையாக நீங்கள்தான் கருதுகிறீர்கள். நீண்ட காலமாக ஒரே உறவில் நிலைத்திருப்பவர்கள் அதிகம் உள்ளனர். தாவிக்கொண்டே இருப்பவர்கள் ஒரு சிறிய சதவீதமானவர்கள்தான். மேலும் அப்படியே வைத்துக்கொண்டாலும், அக்காலத்தில் விவாகரத்துக்கள் அதிகம் நடைபெறவில்லையா என்ன? என்ற கேள்வியும் இளைஞர் பக்கமிருந்து வந்தது. அதேவேளையில், திருமதி.ரத்னா அவர்களும், நாங்கள் முன்னர் எத்தனை ஜாதகங்களை நிராகரித்திருப்போம்? அதுதான் இவர்களது “breakup”ம் என்றார். மேலும் இளைஞர்களும் வழ்க்கைத்துணையுடன் எப்பொழுதும் மகிழ்ச்சியாக மட்டுமே இருக்காது, சண்டைகளும் வரும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

இந்தக் கலந்துரையாடல், சரி–தவறு என்பதைத்தாண்டி, ஒரு பாதுகாப்பான உறவினை உருவாக்க பெற்றோருக்கும், பிள்ளைகளுக்குமான மனம் திறந்த உரையாடல்களும், பரஸ்பர நம்பிக்கையும், மரியாதையும் முக்கியம் என்பதை உணர்த்திய ஒரு முயற்சியாக அமைந்தது. உறவுகள் மாறலாம்; கருத்துக்கள் வேறுபடலாம். ஆனால், அந்த மாற்றங்களுக்குள் கூட ஒருவரை ஒருவர் கேட்கும் மனநிலை நிலைத்திருக்கும்போது, குடும்ப உறவுகள் மேலும் வலுப்பெறும் என்பதே இந்நிகழ்வின் மையக் கருத்தாக வெளிப்பட்டது.

மீண்டும் ஒரு வாசகர் முற்றத்தில் சந்திப்போம்.
-இளவேனில் ஆசிரியர் குழு-

Ilavenil


24 பார்வைகள்

About the Author

Ilavenil

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்