மீண்டுமொரு இளவேனிலில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம். இம்முறையும் இவ்விதழ் சிறுவர் முதல் பெரியவர்கள்வரை வாசித்து உள்வாங்கும் வகையில் பல்வேறு ஆக்கங்களைத் தாங்கி வருகிறது. இளவேனிலின் ஒவ்வொரு பக்கத்திலும் எங்களின், எம் சமுகத்தின் விம்பத்தினைப் படம் பிடித்துக் காட்டும் முனைப்புடன் நாம் தொடர்ந்து இயங்குகிறோம். இம்முயற்சிக்கு வாசகர்களும் எழுத்தாளர்களும் எமக்குத் தொடர்ச்சியாகக் கொடுக்கும் ஆதரவுக்குப் பேரன்பும் நன்றிகளும்.
இன்று அவுஸ்திரேலியாவின் ஒவ்வொரு மூலையிலும், வாரம்தோறும் தமிழ் மொழிப் பாடசாலைகள், தமிழ்ப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், சமூக ஒன்றுகூடல்கள் எனப் பல தமிழ்ச்சமூகம் சார்ந்த நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. தமிழ் இளைஞர்கள் பாரம்பரிய உடைகளில் மிளிர்கின்றனர். சமூக அமைப்புகளும், ஆர்வலர்களும் தங்களது கணக்கில்லா நேரத்தினை இவற்றில் செலவிடுகின்றனர். தமிழ் எங்கள் அடையாளம் என்ற பெருமிதங்களையும் அறைகூவல்களையும் பொதுவெளிகளிலும் பல சமுக வலைத்தள பகிர்தல்களிலும் நன்றாகவே பார்க்கமுடிகிறது. தமிழ், கலாசாரம் என்றாலே நமக்குள் ஒரு உற்சாகம் பிறக்கிறது.
ஒரு புலம்பெயர் தமிழ்ச் சமூகமாக, எங்கள் ஒவ்வொருவரினது தேடலும், நம்முடையதும் நமது பிள்ளைகளுடையதும் அடையாளத்தினை உறுதிப்படுத்த வேண்டும் என்ற வேட்கையோடு ஒன்றிணைந்தது. பல தமிழ் நிகழ்ச்சிகளின் அடிப்படையும் இதுவே. எமது பிள்ளைகளை எமது தாய் நாட்டிலிருந்தும் எமது உறவுகளிடமிருந்தும் தூரத்தில் வளர்க்கும்போது இயற்கையாகவே எம்முள் ஒரு அடையாளத்திற்கான தேடல் உருவாகுகிறது. சொந்த ஊரில் பிறந்து வளரும்போது இவ்வச்சம் பெரிதும் எழுவதில்லை. ஆனால் இங்கே நாம் தொலைந்துவிடுவோமோ என்ற எச்சரிக்கை உணர்வின் உந்துததில் அத்தேடல் மேலும் விரிகிறது. எமது பிள்ளைகள் தமிழில் பேச வேண்டும், எமது பண்டிகைகள் கொண்டாடப்பட வேண்டும், அவர்கள் தங்களது தமிழ் அடையாளத்தினைப் புரிந்துகொள்ள வேண்டும், அவர்களது வேருடன் ஒன்றிணைந்து இருக்கவேண்டும் போன்ற பல ஏக்கங்களின் வடிகாலே இம்முயற்சிகள்.
ஆயினும் இங்கு நாம் சற்றே நிதானித்து உற்று நோக்கினோமானால் இவற்றுக்கிடையே நாம் கவனிக்காமல் கடந்து போகும் ஒரு பக்கம் இருப்பதையும் உணரவேண்டும். எமது அடையாளத்தினை நோக்கிய தேடலில் தமிழ் கலாசாரமும் மொழியும் நமது வாழ்வியலாக அன்றி ஒரு அரங்கேற்றமாக மட்டுமே மாறிவருகிறதா? கோயில்களிலும் மேடைகளிலும் போட்டிகளிலும் மட்டும் வெளிப்படுத்த கலாசாரமும் மொழியும் கலையும் வெறும் காட்சிப்பொருள்களா என்ன?
மொழியோ, கலையோ அதினின்று எழுந்த கலாசாரமோ ஒரு சமூகத்தின் வாழும் வழிகள். மொழி நமக்கிடையேயும் வரலாற்றுடனும் காலத்துடனும் தொடர்புகொள்ள ஒரு சாதனமாகிறது. கலை நம் கருத்தியல்களை, உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவியாகிறது. இவற்றிலிருந்து முகிழ்வது கலாசாரமாகும். இவை யாவும் சேர்ந்ததே நம் அடையாளம். இதனாலேயே காலந்தோறும் தமிழர்தம் அடையாளம் சூழ்நிலைகளுக்கேற்ப மருவி வந்திருக்கிறது. சங்கத்தின் மொழி இன்றைக்கு எமக்குப் புரிவது கடினம். அப்போதிருந்த கலை வடிவம் இன்றில்லை. கலாசாரமும் இல்லை. ஆனால் அது அன்றைக்கான தமிழ் அடையாளம். அவற்றுள் காலத்தின் போக்கில் வடிகட்டப்பட்டு எஞ்சியவை இன்றும் நிலைக்கிறது. இன்று எமக்கான ஒரு மொழி உண்டு. எமக்கான கலைகள் உண்டு. எண்ணங்கள், கருத்தியல்கள் உண்டு. அதன்வழி நமக்கான கலாசாரம் முகிழ்கிறது. அதுவே நம் அடையாளமுமாம். இந்தப் புரிதல் நம் சமூகத்திடம் இருப்பது அவசியம்.
இந்தப் புரிதலோடு நமது சமூகச் செயற்பாடுகளை மீண்டும் ஒருமுறை உற்று நோக்குவது பயனுள்ளதாக இருக்கும். 30 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட தமிழ் மொழிப் பாடசாலைகள், போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் சமூக நிகழ்வுகள் எமது மொழியையும் கலாசாரத்தையும் பாதுகாப்பதில் மிகப் பெரிய பங்காற்றியுள்ளன. குறிப்பாக முதல் தலைமுறைப் புலம்பெயர் தமிழர்களுக்கு, இவை தமது வேர்களுடன் இணைந்திருப்பதற்கும், அடுத்த தலைமுறைக்குத் தமது அடையாளத்தை அறிமுகப்படுத்துவதற்குமான முக்கியமான தளங்களாக அமைந்தன. ஆனால், இன்று வளரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினரின் அனுபவமும், சவால்களும் வேறுபட்டவை. தமிழ் என்பது அவர்களுக்கு ஒரு இரண்டாம் மொழி மட்டுமே. அவர்களது அன்றாட வாழ்க்கை, கல்வி, நண்பர்கள், தொழில்நுட்பம் மற்றும் சிந்தனைகள் அனைத்தும் பெரும்பாலும் ஆங்கிலத்தைச் சுற்றியே அமைகின்றன. எனவே, அவர்களை அணுகும் வழிகளும் அவர்களது உலகத்தோடு தொடர்புடையதாக மாற வேண்டியுள்ளது.
இன்று பல தமிழ் நிகழ்ச்சிகளிலும், போட்டிகளிலும் நாம் பெருமையாகப் பேசுவது தமிழின் தொன்மை, சங்க இலக்கியம், பழமையான வரலாறு மற்றும் பாரம்பரியங்கள் பற்றியே. இவை நிச்சயமாக நமது பெருமைக்குரியவைதான். ஆனால் ஒரு இளம் தலைமுறையினருக்கு ஒரு மொழி நெருக்கமாக மாறுவதற்கு அதன் வரலாற்றையும், பெருமையையும் மட்டும் அறிந்தால் போதுமா? அந்த மொழியில் அவர்களது கனவுகளையும், கேள்விகளையும், சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்புக் கிடைக்க வேண்டாமா? செயற்கை நுண்ணறிவு, காலநிலை மாற்றம், அறிவியல், விளையாட்டு, திரைப்படம், சமூக மாற்றங்கள் போன்ற இன்றைய உலகத்தைப் பற்றித் தமிழில் பேசுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் அவர்களுக்குக் கடந்த காலத்தின் நினைவாக அல்லாமல் நிகழ்காலத்தின் ஒரு பகுதியாக மாறும்.
இதே மாற்றம் கலாசாரத்திற்கும் தேவையாகிறது. இன்று நமது பொங்கல், சித்திரைத் திருவிழா, கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. பிரமாண்டமான மேடைகள், அழகான அலங்காரங்கள், சிறந்த நிகழ்ச்சிகள் என சமூகத்தின் திறமையையும் ஒற்றுமையையும் அவை வெளிப்படுத்துகின்றன. ஆனால், இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவற்றின் பின்னுள்ள விழுமியங்கள் எவ்வளவு தூரம் எமது பிள்ளைகளின் வாழ்க்கையில் தொடர்கின்றன? ஒரு பண்டிகை என்பது ஒரு நாள் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், அதன் பின்னுள்ள எண்ணங்கள், உறவுகள், இயற்கை மீதான மரியாதை, சமூக உணர்வு போன்றவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒரு வழியாகும். ஒரு கலாசாரத்தை அவர்கள் பார்வையாளர்களாக அல்ல, தங்களது உடமையாக ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும்.
இதற்காக நாம் கடந்த காலத்தை விட்டு விலக வேண்டியதில்லை. மாறாக, அதன் அடிப்படைகளைப் புரிந்துகொண்டு, நாம் வாழும் காலத்திற்கேற்ப அதனை வளர்த்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு தலைமுறையும் தமக்கான அடையாளத்தை உருவாக்குகிறது. இன்று அவுஸ்திரேலியாவில் வளரும் தமிழ்ப் பிள்ளைகளின் அடையாளமும், அவர்கள் வாழும் சூழலுடனும் அவர்களது வேர்களுடனும் இணைந்த ஒரு புதிய வடிவமாக இருக்க வேண்டும்.
எமது நோக்கம் பிள்ளைகளைக் கடந்த காலத்தின் ஒரு பிரதியாக உருவாக்குவது அல்ல. அவர்கள் தமது வேர்களை அறிந்து, தாங்கள் வாழும் உலகுடன் இணைந்து, தமிழையும் கலாசாரத்தையும் தங்களுடையதாக உணர்ந்து வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே. மொழியும் கலாசாரமும் மனிதர்களின் அன்றாட வாழ்வில் இயல்பாக இடம்பெறும்போதுதான் தலைமுறைகளைத் தாண்டி நிலைத்திருக்கும்.
அதனைச் செய்வோமாக.
அன்புடன்,
இளவேனில் ஆசிரியர் குழு
editor@caseytamilmanram.org.au