
கடந்த சில ஆண்டுகளாக, இளவேனில் குழு சமூக இதழை வெளியிடும் பணியுடன், நமது சமூகத்தினருக்கிடையே சிந்தனையூட்டும் உரையாடல்களையும் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. இளவேனில் சஞ்சிகையில் ஆழமாகப் பகிரப்படும் கருத்துகளின் இயல்பான தொடர்ச்சியாகவே இவ்வாறான கலந்துரையாடல்களை நாம் வடிவமைத்து வருகின்றோம்.
அத்தகைய முயற்சிகளின் இன்னொரு அர்த்தமுள்ள படியாகவே ‘வரையறைகளைத் தாண்டி’ (Beyond the Stereotype) என்ற நிகழ்வு அமைந்தது.
இளவேனில் சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவரான தாமரை மதியழகன் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வில் சமந்தா இரத்தினம், ரஷான், திவ்யா மஹேன், விதூஷா துஷியந்தன் மற்றும் கிரென் ஜோன் பிரிட்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
சமந்தா சமூகநீதியையும் கொள்கை அரசியலையும் முன்னிறுத்தி இயங்கும் அரசியல் செயற்பாட்டாளர். ரஷான், தான் சார்ந்த சமூகமும் பாலினமும் அரிதாகவே தெரிவுசெய்யும் பரதநாட்டியத்தில் உறுதியுடன் தனது இடத்தை உருவாக்கியவர். திவ்யா மஹேன், விக்டோரிய மாநில மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை. விதூஷா துஷியந்தன், விக்டோரிய மாநில காவல்துறையில் பணியாற்றுபவர். கிரென் ஜோன் பிரிட்டோ, அமேசான் நிறுவனத்தின் அவுஸ்திரேலிய விநியோகச் சேவையின் தலைவராகப் பணியாற்றுகிறார்.
இவர்கள் அனைவரும் நமது சமூகத்தின் திறமையாளர்கள் மட்டுமல்ல; புதிய பாதைகளைத் திறந்த முன்னோடிகளும் ஆவர். வழமையாக நமது சமூகத்தினர் அதிகம் பயணிக்காத துறைகளில் தங்கள் தடத்தைப் பதித்து, அத்தகைய துறைகளில் பயணிக்க விரும்பும் அடுத்த தலைமுறைக்கு முன்மாதிரிகளாகத் திகழ்கிறார்கள்.
சமூகத்தில் நிலவும் முன்முடிவுகள், பொதுப்புத்திகள் மற்றும் அடையாளங்களின் குறுகிய வரையறைகளைக் கடந்து, மனிதர்களின் உண்மையான திறன்களையும் அனுபவங்களையும் புரிந்துகொள்வதற்கான அர்த்தமுள்ள முயற்சியாகவே ‘Beyond the Stereotype’ நிகழ்வு வடிவமைக்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கான சிறு பொறியாக அமைந்தது, பதினான்கு வயதான அன்ஷுருதா தனது கிரிக்கெட் பயணத்தைப் பற்றியெழுதிய ஒரு கட்டுரை. அந்தக் கட்டுரை எழுப்பிய சிந்தனைகளே, சமூகத்தின் வரையறைகளையும் எதிர்பார்ப்புகளையும் பற்றிய விரிவான உரையாடலுக்கு வழிவகுத்தன.
மருத்துவத் துறையையும் கிரிக்கெட்டையும் எவ்வாறு சமநிலைப்படுத்துகிறீர்கள் என்று கிரிக்கெட் வீராங்கனை திவ்யாவிடம் கேட்கப்பட்டபோது, அவர் அளித்த பதில் மிகவும் ஆழமானதாக இருந்தது. “உண்மையாகவே ஒரு விஷயத்தை நேசித்தால், அதற்கான நேரத்தையும் வாய்ப்பையும் நாமே உருவாக்கிக் கொள்வோம்” என்ற அவரது கருத்து, இந்த உரையாடலின் முக்கியமான செய்திகளில் ஒன்றாக அமைந்தது.
இந்தக் கருத்தை சமந்தாவும் வலியுறுத்தினார். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு ஒன்றைத் தேர்ந்தெடுத்து மற்றொன்றை முழுமையாகக் கைவிட வேண்டிய அவசியமில்லை. தெளிவான முன்னுரிமைகள், நல்ல திட்டமிடல் மற்றும் அர்ப்பணிப்புடன், ஒருவரால் தனது கல்வி, தொழில் மற்றும் ஆர்வங்களை இணைத்துப் பயணிக்க முடியும்.

பாரம்பரியக் கலைகளைக் கற்பது செலவு மிகுந்ததா என்ற கேள்விக்கு பரதநாட்டிய ஆசிரியர் ரஷான், இல்லை. கலை வடிவம் தானாகவே செலவு மிகுந்ததல்ல; அதை நாம் அப்படியாக மாற்றியிருக்கிறோம்.
நடன ஆசிரியரின் இந்தப் பதில், இன்றைய சூழலில் மிகவும் அவசியமான ஒரு சிந்தனையை முன்வைக்கிறது.
ஒரு கலை வடிவத்தின் மதிப்பு, அதற்காக செலவிடப்படும் பணத்தில் இல்லை; அதை கற்கும் ஆர்வம், ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான பயிற்சியில்தான் இருக்கிறது. ஆடைகள், ஆபரணங்கள், அரங்கேற்றங்கள் போன்றவற்றைச் சுற்றி உருவாக்கப்பட்டிருக்கும் தேவையற்ற எதிர்பார்ப்புகளே, இந்தக் கலை மிகவும் செலவு மிகுந்தது என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளன.கலை வடிவமே தடையாக உள்ளதா, அல்லது அதைச் சுற்றி நாம் உருவாக்கியுள்ள நடைமுறைகளும் பார்வைகளும்தான் தடையாக உள்ளனவா என்ற கேள்வியையும் இது எழுப்புகிறது.
தனது ஆண் சகாக்கள் குறித்துக் கேட்கப்பட்டபோது, கிரென் பகிர்ந்த அனுபவம் மிகவும் நேர்மறையானதாக இருந்தது. தனது தாத்தா, தந்தை மற்றும் பணியிடத்தில் உள்ள ஆண் சக ஊழியர்கள் அனைவரும் தனக்கு மிகுந்த ஆதரவாக இருந்ததாக அவர் கூறினார். மேலும், “நாம் சொல்ல வேண்டிய விஷயங்களைச் சரியான முறையில், தெளிவாக எடுத்துரைத்தால், நமக்குத் தேவையான ஆதரவைப் பெற முடியும்” என்ற அவரது கருத்து இந்த உரையாடலில் முக்கியமான ஒரு செய்தியாக அமைந்தது.
மேலும், இந்த உரையாடல் முழுவதும் மீண்டும் மீண்டும் வெளிப்பட்ட முக்கியமான கருத்து என்னவென்றால், இன்றைய Gen Z தலைமுறையினர் தங்களுடைய சிந்தனையிலும் எதிர்காலக் கனவுகளிலும் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் என்ன விரும்புகிறார்கள், எந்தப் பாதையில் பயணிக்க விரும்புகிறார்கள் என்பதை நன்கு அறிந்திருக்கிறார்கள்.
இளம் காவல்துறை அதிகாரியான விதுஷா இதை மிக அழகாகச் சுட்டிக்காட்டினார்: பதினேழு வயதிலேயே ஒரு குழந்தை தனது வாழ்நாள் முழுவதற்குமான முடிவை எடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்வதும், புதிய பாதையைத் தேர்ந்தெடுப்பதும் முற்றிலும் இயல்பானதே.ஒவ்வொரு தலைமுறையும் தாங்கள் வாழும் காலத்தின் அனுபவங்கள், தகவல்கள் மற்றும் வாய்ப்புகளின் அடிப்படையில் வளர்கின்றன. பெற்றோர்கள் தங்களுடைய அனுபவத்தின் மூலம் வழிகாட்டுகிறார்கள்; அதே நேரத்தில் இன்றைய இளைஞர்கள் புதிய தொழில்கள், கல்வி வாய்ப்புகள், தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய அனுபவங்கள் மூலம் வேறுபட்ட பார்வையைக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்கள் இதை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். பிள்ளைகளின் விருப்பங்கள், கனவுகள் மற்றும் வாழ்க்கைப் பாதைகள் காலத்திற்கேற்ப மாறக்கூடும் என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களின் தேர்வுகளுக்குத் துணைநிற்பதே அவர்களுக்கு அளிக்கக்கூடிய மிகப் பெரிய ஆதரவாகும்.
பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த சமூக உறுப்பினர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைத்த இந்த நிகழ்வு, கருத்துப் பகிர்வு, அனுபவப் பரிமாற்றம் மற்றும் சிந்தனையைத் தூண்டும் உரையாடல்களின் மூலம் புரிதல், பரஸ்பர மரியாதை மற்றும் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியது. கேள்விகள் எத்தனை பிற்போக்குத்தனமாக இருந்தாலும் முகம் சுளிக்காது இளையவர்கள் நிதானமாகவும் தீர்க்கமாகவும் பதில் அளித்தது பெரும் நம்பிக்கையையும் நிறைவையும் கொடுத்தது.
இந்த உரையாடலும், சமூகத்தின் வழமையான வரையறைகளைத் தாண்டி புதிய பாதைகளைத் தேடி பயணிக்க முனையும் அனைவருக்கும் ஊக்கமாக அமையும் என்றும், அவர்களின் பயணத்தை சிறிதளவாவது இலகுவாக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.