Arts

Google பாட்டி…. – பவித்ரா ராகவன்

July 19, 2026 | பவித்ரா ராகவன்

காலை 7:00 மணியிருக்கும்……
திடீரென நித்திரையிலிருந்து கண் விழித்த விது என்கின்ற விருதாச்சலம் கடிகாரத்தைப் பார்த்தான். ஐயோ யுனிவர்சிட்டிக்கு நேரமாகிவிட்டது என்று புலம்பியவாறு சீக்கிரமாகத் தயாராகத் தொடங்கினான். அம்மாவும் அப்பாவும் வேலைக்குச் சென்றுவிட்டார்கள் போலும். நேற்றைக்கே, “தான் அதிகாலையில் வேலைக்குச் சென்றுவிடுவேன்” என்று கூறியது, இப்போதுதான் விதுவிற்கு நினைவுக்கு வந்தது. அம்மா இருந்திருந்தால் தன்னை 6 மணிக்கு எழுப்பிவிட்டிருப்பார். அடுத்த அறையில் தங்கை விதுரா நன்கு தூங்கிக்கொண்டிருந்தாள். பாடசாலை விடுமுறை என்பதால் இப்போதைக்கு எழும்பமாட்டாள். வின்டர் சீசன் தொடங்கிவிட்டதால் எழும்புவதென்பது கொஞ்சம் கடினம்தான். அத்தோடு அசைன்மண்ட் முடித்து படுக்கவே இரவு ஒரு மணியாகிவிட்டது.

தயாராகிவிட்டு, சாப்பிடுவதற்கு ஏதேனும் இருக்கிறதா எனப் பார்த்தபோது சாப்பாட்டு மேசையில் தோசையும், சம்பலும் இருந்தது. பார்க்கவே விதுவிற்கு எரிச்சலாக இருந்தது. எல்லாம் இந்தப் பாட்டியின் வேலைதான் என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டே, தனக்குப் பிடித்த சீரியலையும் பாலையும் கோப்பைக்குள் ஊற்றிக்கொண்டிருந்தான். வரவேற்பறையிலிருந்து யாருடனோ பாட்டி கதைத்துக்கொண்டிருந்தார். அந்த உரையாடல் வீடு பூராகவும் எதிரொலித்துக்கொண்டிருந்தது.
”ஹலோ ராஜம், நான்தான் அன்றைக்கே சொன்னேனே, விஜய்தான் அடுத்த முதலமைச்சர் என்று. இதற்குத்தான் கொஞ்சமாவது அரசியல் அறிவு வேண்டும் என்பது. ஜென் சீ பிள்ளைகளுடையதும் எங்களைப் போல ஆட்களுடைய வாக்கும் தவேகாக்குத்தான் என்று தெரிந்த விஷயம்தானே.”

“அது சரி, நாளைக்கு நான் சீனியர் சிட்டிசன் கூட்டத்துக்குப் போறேன். நீயும் வருகிறாய்தானே. இந்த முறை நிறைய நிகழ்ச்சிகள் எல்லாம் இருக்கிறதா, சுப்ரமணியம் மனைவி சிவலதா சொன்னவர்.”

இதற்கு மேல் பாட்டியின் கதைகளைக் கேட்டால் விதுவுக்கு கோபம் வந்துவிடும். எப்போதும் கையில் தொலைபேசியுடனேயே இருப்பவர் பாட்டி. யூடியூப்பில் பார்க்கின்ற விடயங்களைக் கேட்டு 10 பேருக்குச் சொல்ல வேண்டும். அரசியல், சினிமா, ஜோதிடம் என்று தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற நினைப்பு பாட்டிக்கு. ஊடகங்களில் சொல்கின்ற அனைத்தும் உண்மை என நம்பி ஊருக்கே கதை சொல்வார். அம்மாவும் அப்பாவும்கூட எங்கட விடயங்களில் தலையிடுவதில்லை. நாங்கள் போடுகிற உடுப்பிலிருந்து, சாப்பிடுகிற உணவு, செய்கின்ற வேலை, சீவுகின்ற தலை, நடையுடை பாவனையென்று அனைத்திலும் பாட்டியின் தலையீடு இருந்தே தீரும். அதுவும் தங்கையின் நிலைமையோ பரிதாபம். ”பெண் பிள்ளை என்றால் இப்படித்தான்…” என்று தொடங்கிவிடுவார். இக்காலத்தில் யாருக்காவது விருதாச்சலம் என்று பெயர் வைப்பார்களா? தாத்தாவின் பெயரைத்தான் மூத்த ஆண் பிள்ளைக்கு வைக்க வேண்டுமாம், என்று பாட்டி சொல்ல, அப்பாவும் தட்டாமல் அப்படியே செய்துவிட்டார். அவர்களுக்கென்ன? பிரச்சனை எல்லாம் எனக்குத்தான். அவுஸ்திரேலியா நாட்டில், அதுவும் வெள்ளைக்காரனின் வாயில் சரியான உச்சரிப்பு வருவதற்குள் எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிடும். இதனாலேயே பாட்டி மீது எனக்குக் காரணம் புரியாத கோபம். நல்லவேளை தங்கை தப்பிவிட்டாள்.

பாட்டியின் கதைகள் தொடர்கின்றன.
”ஹாய் சுகுணா. இன்றைக்கு நான் கோயிலுக்கு வர முடியாது. என்னுடைய நண்பிக்கு 80-வது பிறந்தநாள்.”
கதைத்துக்கொண்டே வரவேற்பறையிலிருந்து சாப்பாட்டு மேசைக்கு வந்தவர்,
“டேய் விருதாச்சலம், உனக்குத்தானே தானியத் தோசை சுட்டு வைத்தனான். இதென்ன, வெள்ளைக்காரன் சாப்பாட்டை சாப்பிடுகிறாய்.”
“என்னப்பு, இப்படி தலையை சீவியிருக்கிறாய். ஜெல் வைச்சிருக்கிறாய் போல.”

”பாட்டி சும்மாயிருங்கோ.” எனக்கு நேரமாகிறது. உங்களோட சண்டை பிடிக்க நோ டைம்.”
“அட, நாங்களெல்லாம் அந்தக் காலத்தில் எவ்வளவு சுறுசுறுப்பாக இருப்போம் தெரியுமா? அதுசரி, உன்னுடைய ஜிம்மில் சீனியருக்கு ஒஃப்பர்ஸ் போட்டிருக்கிறார்களா என்று பார்த்துச்சொல்லு. நானும் சுகுணாவும் ஜிம்மில் சேரலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். ஃபிட்னஸ் முக்கியம் என்று யூடியூப்பில் சொல்றாங்க.”
பாட்டியிடமிருந்து நகன்று அடுத்த வேலையைப் பார்த்தான் விது. பாட்டியோ விடுவதாக இல்லை.
“விருதாச்சலம், இந்த போனில் வைஃபை ஏதோ பிரச்சனையாக இருக்கிறது. கொஞ்சம் கனக்சனில் பிரச்சனையோ? இந்த, முன்னாலிருக்கிற ரோட்டைத் தாண்டிப் போனால் யூடியூப் வேலை செய்யாது. பேஸ்புக்கூட பார்க்க முடியாது.”
அவசரமாக புறப்பட்டுக் கொண்டிருந்த விதுவுக்கு பாட்டியின் நச்சரிப்பு எரிச்சலைக் கொடுத்தது. கோபம் உச்சத்தைத் தொட்டது. தன்னையும் அறியாமல்,
“பாட்டி, உங்களுக்கு வேற வேலை இல்லையா? வைஃபை குறிப்பிட்ட இடத்தைத் தாண்டிப் போனா, கனெக்சன் இருக்காது. உங்கட ஃபோன் டேட்டாவும் முடிந்துவிட்டது. அதுசரி, எப்ப பார்த்தாலும் இப்படியே வாட்ஸ்அப், பேஸ்புக், யூடியூப் என்றிருந்தால்? இதுல, எல்லாம் தெரியும் என்ற ஆட்டிட்டியூட். இந்தச் சின்ன விஷயம்கூடத் தெரியாது.” என்று திட்டிவிட்டுச் சென்றுவிட்டான் விது.

நோபல் பார்க்கில் ட்ரெயின் ஏறியதிலிருந்து, விதுவின் மனம் ஒரு மாதிரி இருந்தது. கொஞ்சம்கூட யோசிக்காமல் பாட்டியைத் திட்டிவிட்டோம் என்றது. மனம் எப்படிப் புண்பட்டிருக்கும். அம்மா இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு வேலையைத் தொடர முடியாமல் திணறிய போது இலங்கையிலிருந்து, அனைத்தையும் விட்டுவிட்டு வந்து, கடந்த 18 வருடங்களாக எங்களுடனேயே இருக்கிறார். எங்களை வளர்ப்பதிலும் வீட்டைக் கவனிப்பதிலும் என்று, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உறுதுணையாக இருக்கிறார். எல்லாவற்றிற்கும் குறை சொல்லும் எத்தனையோ பேருக்கு மத்தியில். ஆஸ்திரேலியா வாழ்க்கையை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டவர். புது ஃப்ரெண்ட்ஸ், கனெக்சன்ஸ் என்று தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டவர். என்னையும் தங்கையையும் ஸ்கூலில் பிக்கப் செய்ததும் அவர்தான். தமிழ் சமூகத்தையும் தாண்டி என்னுடைய ஸ்கூலில் இருந்த மற்றைய சமூகத்தவர்கள்கூட நன்கு பழக்கமானவர். பிடித்தவரும் கூட. இந்த 75 வயதில் டெக்னாலஜியைக்கூட பிடித்துக்கொண்டவர். தனது வார்த்தைகளை எண்ணி தன்னைத்தானே நொந்துகொண்டான் விது. இல்லை, விருதாச்சலம்.
பலமுறை பாட்டிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்த போதும், மறுமுனையில் பதில் இல்லை. மாலை வீடு திரும்பியதும்,
“ஹாய் மாம், பாட்டி எங்க?”
”தெரியல விது. ரூமில் படுத்திருக்கிறார். ஃப்ரெண்டின் பர்த்டே பார்ட்டிக்கு போகலயாம். தலை வலிக்குதாம்.”
பாட்டியின் ரூமுக்குள் நுழைந்த விது குற்றவுணர்வுடன் பாட்டியை நெருங்கி,
“ப்ளீஸ் அப்பலஜாய்ஸ் மீ, பாட்டி. நான் அப்படிக் கதைச்சிருக்கக்கூடாது. ஸாரி பாட்டி.” அவனையே அறியாமல் விதுவின் கண் கலங்கியது.

பேரன் கூறிய எந்த விடயங்களும் பாட்டியின் காதில் விழுந்ததாகத் தோன்றவில்லை. அவரிடமிருந்து பதில் எதுவுமே வரவில்லை. விதுவின் குற்றவுணர்வு மேலும் அதிகரிக்கவே, பாட்டிக்கு அருகில் சென்று அவருக்கு முன்னால் அமர்ந்து கையைப் பிடித்தவாறு நிமிர்ந்து பார்த்தான். பார்த்தவனுக்கு அதிர்ச்சி.
பாட்டி ஹெட்செட் போட்டுக்கொண்டு கையடக்க தொலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தார். தான் கேட்ட மன்னிப்பு பாட்டியின் காதுகளை எட்டாத காரணம் அவனுக்கு இப்போதுதான் புரிந்தது. விதுவைப் பார்த்த பாட்டி,
“விருதாச்சலம், இந்த எக்ஸ்ட்ரா மொபைல் டேட்டாவை அட் பண்ணிட்டேன். இனி எனக்கு டேட்டா பிரச்சனை இருக்காது. இஸ் தட் ரைட்?” என்றார்.
விதுவுக்கோ தூக்கிவாரிப் போட்டது. தனக்குள்ளே சிரித்தவாறு,
”ஓ மை கிரேட் பாட்டி.” என்றான்.
“அதுசரி, உங்களுடைய ஃப்ரெண்டின் பர்த்டேக்கு போகவில்லையா?”
“போக விருப்பம் விருதாச்சலம். ஆனால் அம்மாவுக்கு வேலை இருக்கு. என்னை ட்ராப் பண்ணக் கஷ்டம்.”
“பாட்டி, இன்றைக்கு நான் உங்களை ட்ராப் பண்ணிவிட்டு ஜிம்முக்குப் போறேன்.”
“அப்ப மறக்காமல் ஜிம் மெம்பர்சிப்பையும் கேட்டுட்டு வா” என்று சொல்லிவிட்டு புறப்படத் தயாரானார் பாட்டி.
இன்றைய நிகழ்வுகள் விருதாச்சலத்தின் எண்ணங்களிலும் மனவோட்டங்களிலும் ஏற்படுத்திய மாற்றங்களைப் பாட்டி அறிந்திருக்க வாய்ப்பில்லை. எது எப்படியாக இருந்தாலும், கூகிள் பாட்டியின் அட்டகாசங்கள் தொடர்கின்றன.

பவித்ரா ராகவன்


0 பார்வைகள்

About the Author

பவித்ரா ராகவன்

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்