
சமரன் இன்றைக்கு எங்களை சோதிப்பதென்று முடிவெடுத்துவிட்டான். “Terrible Twos” என்பதை சரி என்று நிரூபிக்கும் வரை ஓயமாட்டான் போல இருக்கிறது. காலை, மாலை இருவேளையும் நித்திரை கொள்வதை கொஞ்ச காலமாக காலை அல்லது மாலை இரண்டில் ஒரு வேளையாக குறைத்துவிட்டான். ஒன்று ஹிட் ஆனால் ஒன்று மிஸ் ஆகிறது. பின்னேரம் அண்ணன் கரிகாலனுக்கு சங்கீத பள்ளி கச்சேரி இருக்கிறது. இப்போது நித்திரை கொள்ளாமல் விட்டால் பின்னர் சமாளிக்க ஏலாது. பொறுத்த நேரத்தில் போட்டு படுத்தி எடுத்துருவான். நித்திரை வந்தால் அந்த இடத்துலயே விழுந்து படுத்துவிடுகிற, அம்மா அல்லது அப்பாவின் மடியில் ஏறி தோளில் சாய்ந்து படுத்துவிடும் பிள்ளைகளை பெற்றவர்கள் பாக்கியசாலிகள். எங்களுக்கு பிரச்சினையே அந்த “நித்தா” விசயத்துலதான். அவனை பழுதாக்கினது அவனது அம்மம்மா. காலில் போட்டு ஆட்டி நித்திரை ஆக்கி பழக்க வேண்டாம் என்று எத்தனை முறை சொன்னாலும் கேட்காமல் ஆட்டோ ஆட்டென்று ஆட்டி அவன் தற்போது எங்களை ஆட்டுவிக்கின்றான். அந்த மனிசி விசா முடிஞ்சு ஊருக்கு போய்ட்டுது, திரும்பி வரும் வரைக்கும் எங்களுக்குத்தான் ஆப்பு. அடுத்த விசாவிற்கு விண்ணப்பித்து ஆறு மாசங்களுக்கு மேல் ஆகிவிட்டது இன்னும் இந்த அறுவான்கள் ஒரு பதிலும் சொல்லவில்லை. சில வெள்ளக்கார மொக்குகள் போலின் ஹான்சனுக்கு கொடி பிடிக்கிறதைப் பார்த்தால் ஒரு வருடம் ஆனாலும் விசா கிடைக்காது போலத்தான் தெரிகிறது.
இவனை நித்திரை ஆக்குவது பழைய மொரிஸ் மைனர் காரை ஓட்ட தொடங்குவது மாதிரியானது. எப்பவாவதுதான் அதுவாகத் தொடங்கும், மற்ற நேரங்கள்ல தள்ளி தள்ளித்தான் தொடக்க வேண்டும். பல நேரங்களில் தொடங்கப் போற மாதிரியே வந்திட்டு கடைசியில் “டொக்” அடிச்சிரும். இன்றைக்கும் அந்தக் கதைதான். அதுவும் எங்களுக்குப் பிடித்த ஸ்பொட்டிஃபை பாடல்த்தொகுப்பு இருப்பது மாதிரி, அவனுக்கும் ஒரு நித்திரைக்கான பாடல் தொகுப்பு இருக்கிறது. அதிலிருந்து நேயர் விருப்பமாக அவன் கேட்கும் ஒவ்வொரு பாடலாக பாடி வர வேண்டும். “வண்ணத்து பூச்சி வண்ணத்து பூச்சி பறக்குது பார்”ல ஆரம்பித்து ”வீல்ஸ் ஒன் த பஸ்” ஊரைச் சுற்றி ஒரு ஒன்பது முறை ரொளன்ட் அண்ட் ரெளன்ட் போய், இப்போது “குருவி ஒன்று மரத்திலே”க்கு வந்தாயிற்று. அந்தப் பாட்டில் தாய்க் குருவி “இறைவன் தந்த இறகினால், எழுந்து பறக்க பழகுவீர்” என்று குஞ்சுகளிடம் சொல்லும். இரண்டு குஞ்சுகள் தாயுடன் சென்றுவிட, ஒரு சோம்பேறி கூட்டுலேயே இருக்க அந்த பக்கமாக வந்த வேடன் அதை பிடித்துக்கொண்டு போய்விடுவான். வேடன் அந்த குருவிக் குஞ்சை ஒரு அரை மணி நேரத்துக்கு மேலாக திரும்ப திரும்ப கவர்ந்து சென்றுவிட்டான் ஆனால் எங்கட குஞ்சு இன்னும் நித்திரை ஆகவில்லை. கண்கள் சொருகி இந்தா,அந்தா என்று செல்கிறான், அப்பாடா வெற்றி என்று நினைக்கையில் பட்டென்று முழித்துவிடுகிறான்.
போர்வைகளுக்குள் மறைத்து வைத்திருந்த கைபேசி கிறுகிறுத்தது. அநேகமாக, பக்கத்து அறையில் ஒளிந்திருந்து வீட்டிலிருந்து வேலை செய்யும் மனைவி, “தூங்கிவிட்டானா?” என்று குறுஞ்செய்தியில் கேட்டிருப்பாள். அண்மைக்காலமாக எங்களுக்குள் அதிகமாக இடம்பெறும் உரையாடல், நித்திரை ஆக்குபவருக்கு மற்றவர் ஒரு அரை மணி நேர அவகாசமளித்து நித்திரையா? என்று கேட்பதும், அதற்கு ஓம், இல்லை என்று பதில் அளிப்பதும்தான். நமது வழக்கமான ராஜதந்திரங்கள் எதுவும் பலிக்காததால் இறுதி ஆயுதமாக காரில் வைத்து கொஞ்ச நேரம் ஓட்டிப்பார்க்கலாம், அப்படியாவது நித்திரை கொள்கிறானா பார்ப்போம் என்று அவனுக்குத் தெரியாமல் பதில் செய்தியை அனுப்பிவிட்டு, “வா டட்டா போவோம்” என்று ஆளை தூக்கிக்கொண்டு கிளம்பினேன். எனது நண்பரின் மகள் வீட்டின் ஓடுபாதையில் காரை பின்புறமாக நகர்த்தி வாசலை தாண்டுவதற்குள் தூங்கி விடுவாளாம். எங்கட ஆளிட்ட அதுவும் நடக்காது. அடிக்கடி நிறுத்தாமல் கொள்ளாமல் அதிவேக நெடுஞ்சாலையில் சில மைல் தூரம் ஒருசீராக ஓடினால், சில வேளைகளில் அந்த அதிசயம் நடக்கலாம்.
Pound Road இல் இருந்து M1 அதிவேக நெடுஞ்சாலைக்கு வலது பக்கம் திருப்புவதற்கிடையில் முன்னால் சென்றுகொண்டிருந்த செம்மறி தடவிக்கொண்டு போனதில் சிவப்பு சமிக்ஜை விழுந்துவிட்டது. வந்த கோவத்தை காரின் ஒலிப்பானில் இடைவிடாது இசைத்து காட்டினேன். பச்சை விளக்கு விழுந்ததும் T2 Lane இற்குள் புகுந்து, நெடுஞ்சாலைக்குள் நுழைவதற்கான இரண்டு வரிசைகளில் காத்திருந்த வாகனங்களுக்கு இடையில் புகுந்து ஒருவாறாக M1 இற்குள் ஏறிவிட்டேன். இனி Cruise Control இல் மணிக்கு 100 Km வேகத்தில் காரை செலுத்தினால் எப்படியும் Springvale Road இற்கு வெளியேறும் பாதை வருவதற்குள் ஒரு முடிவுக்கு வந்து விடலாம்.
பேசாமல் வெள்ளைக்காரர் போல பிறந்ததிலிருந்தே குழந்தைகளை அவர்களுக்கென்ற தனி அறையில் படுக்க வைத்திருந்தால் இந்த பிரச்சினை வந்திராதுதான். ஆனால் பச்சைகுழந்தையை தனியே விட்டுவிட்டு ஒளிப்படக்கருவி வழியாக பார்த்து மகிழ்வது(?) நமது வளர்ப்பு முறைக்கு சரி வருமா? இப்படித்தான் ஆறு மாத குழந்தைக்கு தந்தையான என்னுடைய அலுவலக நண்பன் லூக் ஒரு நாள் கவலையாக இருந்தான். ஏன் என்று கேட்டதற்கு, “தூக்கதிற்கான ஆலோசகர்” மூலம் பிள்ளைக்கு “தூக்க பயிற்சி” கொடுத்து வருவதால் மன அழுத்தமாக இருப்பதாக கூறினான். அது என்னடா ஆறு மாத குழந்தைக்கு பயிற்சி என்று கேட்டால், குழந்தை தூங்க தயாரானதும் கொஞ்ச நேரம் தூக்கி வைத்திருந்துவிட்டு தொட்டிலில் போட்டுவிட்டு அறைக்கு வெளியே காத்திருக்க வேண்டுமாம், குழந்தை வீறிட்டு அழுமாம். அப்படி அழுதவுடன் ஓடிசென்று தூக்கக்கூடாதாம், ஐந்து நிமிடம் கழித்து சென்று, குழந்தையை ஆசுவாசப்படுத்திவிட்டு மறுபடியும் வெளியே சென்றுவிட வேண்டுமாம், மறுபடி குழந்தை அழுதால் இந்த முறை பத்து நிமிடம் கழித்து உள்ளே செல்ல வேண்டுமாம். இப்படி உள்ளே செல்லும் நேரத்தை படிப்படியாக கூட்டி வர நாளடைவில் குழந்தை அதுவாகவே தூங்க பழகிவிடுமாம். இது என்னடா நாய்க்கு சுச்சா போக பழக்குவது மாதிரி நாசமறுந்த பயிற்சி என்று நினைத்துகொண்டேன். சமரன் தூங்கிவிட்டானா என்று அடிக்கடி கண்ணாடியில் நோட்டம் விட்ட படி நினைவுகளில் மூழ்கி இருக்க, பின்னால் இருந்து சிகப்பு,நீல விளக்குகள் திடீரென மின்ன ஒரு கறுப்பு கார் வேகமெடுத்து எனக்கு சமாந்தரமாக வந்தது.
அது ஒரு சாதாரண கார் போல தோற்றமளிக்கும் போலீஸ் கார் என்று புரிவதற்குள், அதற்குள் இருந்த வெள்ளைக்கார போலீஸ்காரர் எனது வண்டியை ஓரமாக்கி நிறுத்துமாறு சைகை செய்தார். அவர் சொன்னபடி வண்டியை நிறுத்தியதும், எனக்கு முன்பாக தனது வண்டியை நிறுத்திவிட்டு ஒரு போலீஸ்காரர் இறங்கி வந்தார். இது என்ன கோதாரி என்று நினைத்துக்கொண்டு என் பக்க கண்ணாடியை கீழே இறக்கினேன். எனதருகில் வந்தவர், Pound Road இலிருந்து உன்னை கவனித்து வருகிறோம், நீ வண்டி ஓட்டும் முறை ஒழுங்கற்றதாக இருக்கிறது. “Are you under the influence of Alcohol?” என்றார். நான் பதறிப்போய் “பின்னால இருக்குறவன நித்திரை ஆக்க முயல்கிறேன், that’s the only influence I’m under ஹிஹி” என்று வழிந்தேன். அவர் முறைத்த படி “Are you sure, mate?” என்றார். அப்பொழுது தான் திரும்பி பார்த்தேன். பல மணி நேரமாக தூங்கும் அனந்தசயனன் போல சமரன் அசந்து தூங்கிகொண்டிருந்தான். அப்பாடா துன்பத்திலும் ஒரு இன்பம் என்று எண்ணுகையில், “நீ குடித்து விட்டு வண்டி ஓட்டுகின்றாயா என்று சோதனை செய்ய வேண்டும்” என்று Breath Analyser கருவியை நீட்டினார். அடேய், பேராதெனிய கம்பஸ்சில நாலு வருஷம் படிச்சும் குடிக்கப்பழகாத ஆளடா நான் என்ற இறுமாப்புடன் அந்த ஊதாங்குழலை கதவை திறந்துவாங்கி ஒரு ஊது ஊதி குடுத்தேன். அதனை வாங்கி பார்த்தவர், “You are good to go, but please drive carefully” என்றார். அது எங்களுக்கு தெரியும், நீர் உம்மட வேலைய பாரும் அய்சே என்று சொல்லாமல் சொல்வது போல கதவை “படார்” என்று அடித்து மூடவும், பின்னால் “வீல்ல்ல்ல்ல்” என்று சமரன் அழ ஆரம்பித்தான். நான் திடுக்கிட்டு போய், “சுகம் வரும் ஆள் தப்பாது” என்றேன். போலீஸ்காரர், What did you say? என்று கேட்க “Operation success but patient dead” என்றேன்.