2000 வருடங்களுக்கு முற்பட்ட ஒரு மாலைப்பொழுது. சோழ நாட்டின் காவிரிப்பூம்பட்டினம். காவிரி வந்து கடலுடன் கூடும் கழிமுகக்கரை. தவழும் அலைகள் சுருதி மீட்ட, குளிர் நிலவு பொழிய, காதல் மயக்கத்தில் கோவலனும் மாதவியும் கானல் வரி பாடிக் களித்திருக்கிறார்கள். இரண்டு பேருமே இசையில் தேர்ந்தவர்கள். காதலிலும் தேர்ந்தவர்கள்தான். முதலில் கோவலன் தொடங்குகிறான். மாதவி மயங்குகிறாள்.
விரல்கள் யாழின் நரம்புகளில் விளையாட, காதல் வழியும் கவிக்குத் தோதான பண்சேர்த்துக் கோவலன் பாடுகிறான். மெய்ம்மறந்து இரசிக்கிறாள் மாதவி. இப்போது மாதவியின் முறை. ஆடலில் மட்டுமல்ல, பாடலிலும் தான் தேர்ந்தவள்தான் என்று, யாழ் மீட்டிப் பாடுகிறாள் மாதவி. காதலியின் கானல் வரிகளில் வருகின்ற ஆடவன் நான்தானோ, இல்லை வேறொருவனோ என்று பதைபதைக்கிறது கோவலனின் மனம்.

கானல் வரி யான் பாட, தான் ஒன்றின்மேல் மனம் வைத்து,
மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள்
மாதவிமீதான காதல், மயக்கம், மோகம் யாவும் உடையக் கோபம் தலைக்கேறுகிறது.
அதுவரை உள்ளம் கவர்ந்திருந்த ஒப்பற்ற பேரழகி ஒருகணத்தில் “மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள்” ஆகிவிட்டாள்.
நம்பியவளைப் பிரிவதில் தேர்ச்சிபெற்ற கோவலன் மாதவியையும் கைவிட்டு, மீண்டும் கண்ணகியிடம் போகிறான். கண்ணகி மீண்டுவந்த கணவனை கோபமின்றி ஏற்றுக்கொள்கிறாள். மாதவி கைவிட்டுப் போனவனை எண்ணிக் கண்ணீர்வடிக்கிறாள்.
கட்டிய மனைவிக்கும் உண்மையில்லாமல், அவளைக் கைவிட்டுப் பின் தேடிய காதலிக்கும் உண்மையில்லாமல், உற்ற தொழிலில் தேர்ச்சியில்லாமல், உருப்படாமல் உழன்றாலும் கோவலனுக்கு எங்கிருந்து வருகிறது இந்தத் திமிர்?
கோவலனின் கோபம் இளங்கோவடிகளுக்கே கொஞ்சம் புதினமாகத்தான் இருந்திருக்கிறது. எப்பிடி நீ கோவிக்கலாம்? கோவலனின் ஊழ்வினைதான் யாழில் வந்தமர்ந்து அவனுக்குக் கோபத்தையும் கொடுக்கிறதோ என்று யோசிக்கிறார்.
“யாழ்-இசைமேல் வைத்து, தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின்”
பாரதிபள்ளி அரங்கேற்றிய சிலப்பதிகாரம் இசை நாடகத்திலே வருகிற கானல்வரிக் காட்சியைப் பார்த்தபோது எனக்குள் இத்தனை கேள்விகளும் எழுந்தன.
திரு மாவை நித்தியானந்தன் அவர்களின் எழுத்தில், திருமதி பாகீரதி பார்த்திபன் அவர்களது இயக்கத்தில் பாரதி பள்ளி மாணவர்கள் நடித்த சிலப்பதிகாரம் இசைநாடகம் 2024-2025 ஆண்டு காலப்பகுதியில் மூன்று முறை மெல்பேர்னிலும் இரண்டு முறை சிட்னியிலும் மேடையேற்றப்பட்டது. எழுத்து, இயக்கம், பாடல்கள், இசை, நடிப்பு, அரங்க வடிவமைப்பு என்று ஒவ்வொன்றும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன.
ஒரு படைப்பு உன்னதமாக அரங்கேற்றப்படும்போது நடித்தவர்கள், இசை, எழுத்து, இயக்கம் என்று பிரித்துப்பார்க்காமல் மனம் முழுமையாக பாத்திரங்களின் உணர்வோடு ஒன்றிப்போய்விடுகிறது. பெரும்பாலும் இரண்டாம் தலைமுறை சிறுவர்களை வைத்து, தமிழின் மிகத் தொன்மையான காப்பியமான சிலப்பதிகாரத்தை, அவுஸ்திரேலிய தமிழர்கள் இரசிக்கும்படி அரங்கேற்றுவது சாதாரண விடயமில்லை. அதன்பின்னால் அளவுகடந்த உழைப்பும், திறமையும் இருக்கிறது.
தமிழை உச்சரிக்க வைப்பது, வசனங்களை மனனம் செய்ய வைப்பது, எல்லாருக்கும் மேலாக மாதக்கணக்கில் மாணவர்களைப் பயிற்சிக்கு வரவைப்பது, இதையெல்லாம் எப்படி சாதித்தார்கள் என்று ஆச்சரியமாயிருந்தது. பாரதி பள்ளி தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் நாடக விழாக்களால் இந்தச் சிறார்கள் புடம்போடப்பட்டவர்கள். பல ஆண்டுகளாக விதைக்கப்பட்ட விதைகளில் உருவான வனம் இந்தச் சிலப்பதிகாரம்.
இருந்தாலும் பொறுப்பில்லாத கோவலனை, அவன்மீது கோபம் கொள்ளாத கண்ணகியை, கானல்வரி கேட்டுக் கைவிட்டுப் போகும் காதலனை எண்ணிக் கண்ணீர்வடிக்கும் மாதவியை, அவுஸ்ரேலிய பண்பாட்டுச் சூழலில் வாழும் இந்தச் சிறார்கள் எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளும் ஆசை எழுந்தது.

முதலில் நான் நாடகத்தை எழுதிய திரு மாவை நித்தியானந்தன் அவர்களோடும், இயக்கிய திருமதி பாகீரதி அவர்களோடும் உரையாடினேன்.
சிலப்பதிகாரத்தை இந்தச் சிறார்களுக்குச் சொன்னபோது அவர்கள் அதை எப்படி எதிர்கொண்டார்கள் என்று கேட்டேன்.
“ஆரம்பத்தில் அவர்களிடம் நிறையக் கேள்விகள், ஆச்சரியங்கள், குழப்பங்கள் இருந்தன. குறிப்பாக பதின்ம வயதில் திருமணம் செய்தது அவர்களுக்கு வினோதமாக இருந்தது. இருந்தாலும் நாங்கள் ஒன்றை ஆரம்பத்திலேயே தெளிவாகச் சொன்னோம். இந்தக் கதை நடைபெற்ற காலம் வேறு, இன்றைய காலம் வேறு. ஆகவே அதனை, இக்கால நடைமுறைகளோடு பொருத்திப் பார்க்க வேண்டாம்”
என்றார் மாவை நித்தியானந்தன்.
“அதை ஆரம்பத்தில் தெளிவுபடுத்தியபிறகு, மாணவர்கள் பெரியளவில் கேள்விகள் கேட்கவில்லை. தமக்கான பாத்திரங்களை தேர்ந்தமுறையில் உள்வாங்குவதில் கவனம் செலுத்தினார்கள். அதிலும் பெரும்பாலும் தாமே தம்மை மேம்படுத்த கடுமையாக சிரத்தை எடுத்துக் கொண்டார்கள். அது மிகவும் நிறைவாக இருந்தது. எனது மகன் சாய் கோவலனாய் நடித்திருந்தார். அவர் ஏனம்மா எனக்கு இப்பிடி ஒரு பாத்திரம் தந்தனீங்கள். வேறை ஏதாவது தங்கோவன் என்று கேட்டார். அந்தளவுக்கு கோவலனில் அவருக்குக் கோவம்” என்றார் நாடகத்தை இயக்கிய பாகீரதி.
காலங்காலமாக காப்பியப் பாத்திரங்களே வாழ்க்கையில் நாம் பின்தொடரவேண்டிய இலட்சிய மாந்தர்கள் எனும் தமிழ்ச்சமூகத்தில் வளர்ந்த எனக்கு இந்த அணுகுமுறை சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இந்தக்காலத்திற்குப் பொருந்தாததை எதற்கு மிகக்கடுமையாக பயின்று மேடையேற்றவேண்டும் என்ற ஐயமும் எட்டிப்பார்த்தது.
அடுத்ததாக கோவலனாய் வந்த சாயோடு உரையாடினேன்.
“கோவலனிடம் இருந்து நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள்?”
“ஒரு ஆண் தன்னை நம்பிய பெண்ணுக்கு உண்மையாக இருக்கவேண்டும். வாழ்க்கையில் எந்தநிலையிலும் அதை விட்டுக்கொடுக்கக் கூடாது என்று உறுதியாக இருக்கிறேன்”

கண்ணகியின் கற்பின் பெருமையைப் பேசிய நாங்கள் கோவலனின் கீழ்மையிலிருந்து அதிகம் கற்றுக்கொள்ள முனைந்ததாய் நினைவில்லை. புலம்பெயர் நிலத்தின் சிறுவன் சாயின் பதில் இன்றைய தலைமுறை தெளிவாக இருக்கிறது என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.
“காதல் காட்சிகளில் நடிப்பதுதான் சற்றுச் சிரமாக இருந்தது. இருந்தாலும் சரியான வழிகாட்டல் இருந்ததால் பழகிவிட்டேன்” என்றார் சாய்.
“பதின்ம வயது சிறுவர்களுக்கு காதல், பிரிவு இவையெல்லாவற்றையும் சொல்லிக் கொடுப்பது அவ்வளவு எளிதல்ல. கத்தியில் நடப்பது போன்ற அனுபவம் அது. அதிலும் சொந்தமகனுக்குச் சொல்லிக் கொடுப்பது இன்னும் சற்றுச் சிக்கல்தான். இருந்தாலும் சாய் அதிகாலையிலேயே அலாரம் வைத்து எழுந்து பயிற்சி செய்ததைப் பார்த்தபோது வந்த மகிழ்ச்சி, எல்லா அயற்சியையும் அகற்றிவிட்ட்து” என்று சொன்னார் பாகீரதி.
கண்ணகியின் கற்பின் பெருமையும், அறச்சீற்றமும் காலங்காலமாக விதந்துரைக்கப்பட்டுவரும் விடயங்கள். கற்பில் சிறந்தவள் கண்ணகியா சீதையா என்று பட்டிமண்டபங்கள் மெல்பேர்ன் மேடைகளில்கூட எட்டிப்பார்த்திருக்கின்றன. கற்பை எப்படி இவர்கள் புரிந்து கொண்டார்கள் என்பது எனது அடுத்த கேள்வி.
“கற்பு உடல் சார்ந்த, ஆண் பெண் சார்ந்த ஒன்று என்றில்லாமல் அது ஒரு உறுதிப்பாடு என்றே நாம் அவர்களுக்குச் சொல்லியிருந்தோம். அதனால் அதுபற்றி அவர்களுக்கு அதிகம் குழப்பங்கள் இருக்கவில்லை ” என்கிறார் மாவை நித்தியானந்தன்.
அடுத்ததாக கண்ணகியாக நடித்த மஹிஷாவுடன் உரையாடினேன். உயர்த்திய சிலம்பும், விரித்த தலைமுடியும், அறச் சீற்றத்தின் அனல் மொழியாக மேடையில் பார்த்த கண்ணகி, கேள்விகளுக்கு வந்தாறுமூலையில் வந்தமர்ந்த கண்ணகிபோல மிக நிதானமாகப் பதிலளித்தார்.
“அப்பாவிக் குடும்பப் பெண்ணாய் இருந்த கண்ணகி, கணவனின் சாவுக்கு நீதிகோரி, அரசவைக்கு அச்சமின்றிப் போனதிலிருந்து , பெண்களால் எதுவும் முடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. இருந்தாலும் கண்ணகி ஒரு பரிதாபத்திற்குரிய பெண்ணாகத்தான் இருக்கிறார். கணவனால் கைவிடப்பட்டு, எந்தத் தவறும் செய்யாவிட்டாலும், கணிசமான காலத்தைக் கண்ணீருடன் கழித்த கண்ணகியைப் போல இன்றும் பல பெண்கள் இருக்கிறார்கள். பாண்டிய மன்னன்மீது கடும் சீற்றத்தை வெளிப்படுத்திய கண்ணகி, கோவலனைக் கண்டிக்கவோ, கோவிக்கவோ செய்யாமல்விட்டது தவறு . இன்றைய பெண்கள் அப்படிச் செய்யமாட்டார்கள்”
அப்படியென்றால் இப்பொழுது காலம் மாறி எமது மரபுகள் தொலைந்துபோகின்றன என்று நினைக்கிறீர்களா என்று கேட்டேன்.
“இன்றைய பெண்கள் கணவனாய் இருந்தாலும் தவறு செய்தால் தட்டிக் கேட்கத் தயங்காதவர்களாக இருக்கிறார்கள். அது நல்லதுதானே” என்று சிரித்தார் கண்ணகி.
படைப்பில் பங்கேற்றவர்களின் புரிதல் என்பதை இங்கே பகிர்ந்திருக்கிறேன். பார்வையாளர்களின் புரிதல் எப்படி இருந்தது? இளவேனில் சஞ்சிகையின் வாசகர் முற்றம்போல இந்தச் சிலப்பதிகார நாடகத்தைப் பார்த்தவர்களின் அனுபவங்களைப் பகிர்துகொள்ள ஒரு நிகழ்வை ஒழுங்கமைத்தால் மிகப் பயனுள்ளதாக அமையும். அவ்வாறான செயற்பாடுகள் பாரதிபள்ளியின் அரும்பணிக்கு அர்த்தமுள்ள அங்கீகாரமாகவும் இருக்கும்.
படைப்புகளைக் கொண்டாடுவதும், கலைஞர்களை ஊக்குவிப்பதும் எவ்வளவு அவசியமோ அதேபோல அவைதொடர்பான கலந்துரையாடல்களும் ஆக்கபூர்வமான விமர்சனங்களும் ஒரு சமூகத்திற்கு அவசியம். போற்றிப் புகழ்ந்திருப்பதையும் தாண்டிப் பொருள் உணர்ந்த ஆழமான கலந்துரையாடல்கள், இலக்கிய வாசிப்புகள், மறுவாசிப்புகள் எமது விழுமியங்களை புரிந்து கடத்துவதற்கு வழிசமைக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக அடுத்த தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்க நினைக்கும் நாம் அவர்களிடமிருந்து பல நல்ல விடயங்களைக் கற்றுக்கொள்ளவும் இதுபோன்ற கலந்துரையாடல்கள் களம் அமைக்கும்.
தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு பெரும் பணியை பாரதி பள்ளி ஆற்றியிருக்கிறது. அதிலிருந்து அடுத்த படிகளைத் தேடி நகர்வது நம் கடன்.