
“பெண்ணின் பெருந்தக்க யாவுள” என்கிறார் திருவள்ளுவர்
இவ்வுலகில் பெண்ணை விட பெரியது எது? பெண்ணைவிட பெரியது எதுவுமே இல்லை என்கிறார் திருவள்ளுவர். இதன் காரணம்; “கற்பெனும் திண்மை உண்டாகப் பெறின்”
இங்கு கற்பு என்பது உடலை சார்ந்த விடையம் அல்ல. இது மனதைச் சார்ந்த விடையமாகும். கற்பு ஒரு பெண்ணின் திண்மையைக் குறிக்கின்றது என்பதை இந்த சமுதாயத்திற்கு மீண்டும் வலியுறுத்தியவர் பாரதியார். கற்பு எனும் சொல் வலிமையை, உறுதியை, திடத்தன்மையை, கடினதன்மையை, கம்பீரத்தை குறிக்கின்றது.
பாரதியார் ஒரு ஆணாக, ஒரு பிராமணராக, மேலாதிக்க சமூகத்தைச் சேர்ந்த ஒருவராக எப்படி பெண் விடுதலையை ஆதரித்தார்? பாரதியார் ஆரம்பம்முதலே பெண்விடுதலையை முன்னிறுத்திய ஒருவரல்ல. காலங்கள் கழிய, அறிவும் அனுபவமும் மேலோங்க பெண்கள் ஆண்களுக்கு நிகராக நடத்தப்படுவதில்லை என்பதை உணர்ந்தார். பிற்காலங்களில் சமூகத்தின் பிற்போக்குத்தனத்திற்கு எதிராகப் போராடினார். அக்காலத்தில் பெண்களுக்கு வாக்களிப்பு உரிமைகள்
வழங்கப் படவில்லை, குழந்தை திருமணங்கள் நடைபெற்றன, உடன் கட்டை ஏறுதல், மாதவிடாய் கட்டமைப்புகள் இருந்தன. ஆண்களுக்கு கீழ் இருப்பது, அவர்களுக்கு பரிமாறுவதும், சேவை செய்வதுமே ஒரு பெண்ணின் வாழ்க்கையின் பிரதான அர்த்தமாக இருந்தது.
பாரதியாரின் உணர்ச்சிகளை பாடல்கள் மற்றும் கவிதைகள் மூலம், பிற்போக்கான ஆணாதிக்க சமூகத்திற்கு புகுத்த முயற்சித்தார். பெண்கள் விடுதலை அடைய எப்படி செயற்படவேண்டும் என்பதை வலியுறுத்தினார். பல புரட்சிப் பெண்களும் புதுமைப் பெண்களும் அவரது ஆதரவால் உருவாகினார்கள்.
“அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு” எனும் கட்டமைப்புகள் தொன்று தொட்டு, காலம் காலமாக மருவி வந்து, பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற இலக்கண்த்தையும், வரையறையையும் ஆணாதிக்க சமூகம் வைத்திருந்த போது, அதைப் புறக்கணிக்கும் வகையில்
“நாணும் அச்சமும் நாய்க்குட் வேண்டுமாம், ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்” என்றார் பாரதியார்.
இதன் மூலம், பெண் விடுதலையை நடைமுறையில் எப்படி சாத்தியப் படுத்த முடியும் என பாரதியார் உணர்த்துகிறார்.
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்” என்கிறார்
பெண்கள் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும், யாருக்கும் பயப்படாமல், கம்பீரமாக நெஞ்சில் துணிவுடன், தைரியத்துடன் தாமாக இயங்கவேண்டும் என்கிறார்
“சாத்திரங்கள் பலபல கற்பராம்
சவுரியங்கள் பல பல செய்வராம்
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்
மூடக் கட்டுக்கள் யாவும் அழிப்பராம்”
வேதம் சாத்திரம், அறிவியலைக் கற்று எது உண்மை, எது பொய், எது பெண்களை சம்பிரதாயம் என்ற பெயரில், ஒடுக்கிவைக்கிறது என்பதை உணர்ந்து, அவற்றை உடைத்தெறிய வேண்டும் என்று உற்சாகப்படுத்துகிறார் பாரதியார். மாதவிடாய் என்றால் தீட்டு, சமையல் கட்டுக்குள், கோவிலுக்குள், சாமியறைக்குள் செல்லக் கூடாது என்று சொல்வதெல்லாம் அடக்குமுறையின் மறைமுகம் தான்.
பாரதியார் கண்ட கனவுகள் பல நனவாகிவிட்டன.
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” எத்தனையோ சோதனைகள் கடந்து சாதனைகள் படைக்கும் பெண்களைப் பற்றி கேள்விப் பட்டு வருகின்றோம். அவற்றில் பாதிக் கணக்கான பிரச்சனைகள் எமது சமூகத்திலுள்ள ஆண்களினாலே இருக்கின்றது என்பதையும் நாம் அறிவோம்.
“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தேடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய் சிவ சக்தியாம்”
பெண் உருவத்தில் தோன்றி நிற்பது தாய் சிவ சக்தியாம். காக்கும் கடவுளுக்கு நிகராக பெண்ணை கருதிகிறார் பாரதியார். இங்கும் அவரது கனவு நனவாகிவிட்டது.
ஒரு காலத்தில் களமாடி, துப்பாக்கிகளை ஏந்தி எமது மக்களை காத்தவர்களில் பலரும் பெண்கள்தான்.
“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சகத்திலுள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்தபோதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சை கொண்ட பொருளெல்லாம் இழந்து விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சகத்திலுள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும், அதாவது ஒன்பது நாடுகள் சேர்ந்து எதிர்த்து நின்ற போதிலும் அச்சமின்றிப் போராடிய பெண்களை நாங்கள் மறக்கமுடியுமா.
துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்தபோதிலும், இலங்கை அரசாங்கம் எமது மக்களின் மனித உரிமையைக் கூட மதிக்காமல், மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்ட போதிலும் எம்மை தைரியத்துடன் காத்தவர்கள் இந்த பெண்களும் தான்.
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை கூட எங்களுக்கு இருக்கவில்லை, உணவுக்கும் மருந்துக்கும் பிச்சை கூட எடுக்க முடியாத போதிலும் எம்மை அச்சமின்றி காத்தவர்கள் இவர்கள்.
அனைத்தும் பாரதியார் விதைத்த விதை தான். அவர் கொடுத்த திண்மை, தைரியம், நெஞ்செழுத்தம் தான் இங்கு அடித்தளமாக இருக்கின்றது. பெண்கள் எப்பொழுதும் இச் சமுதாயத்திற்கு ஒரு எடுகோலாக, ஆளுமையும் ஆற்றலும் தைரியமும் மிக்கவர்களாக இருந்துகொண்டேதான் இருக்கின்றார்கள்.
ஆகவே பாரதியாரின் பெண் விடுதலை உணர்வு தலைமுறைகள் தாண்டியும் மேலோங்கி நிற்கிறது. அவர் இட்ட விதைகளில் வளர்ந்து வரும் பெண்களில் நானும் ஒருத்தி தான்.