பள்ளிக்கூடத்தில் கூடைப்பந்துப் பயிற்சி நடந்துகொண்டிருந்தது. எல்லாரும் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது என் இரண்டு நண்பர்கள் மடிக்கணனியில் ஏதோ விளையாடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு அது என்ன என்று அறிய ஆர்வமாக இருந்தது.
”நீங்கள் என்ன கணினி விளையாட்டு விளையாடுகிறீர்கள்” என்று நான் அவர்களிடம் கேட்டேன். ”நாங்கள் இராணுவ விளையாட்டு விளையாடுகின்றோம்” என்று சொன்னார்கள். ”இந்த விளையாட்டு எப்படி விளையாடுவது” என்று நான் கேட்க ” இது ஒரு கணினி விளையாட்டு இதில் நீங்கள் எதிரி வீரர்களைச் சுட வேண்டும். ஒவ்வொருவரையும் மூன்று தரம் சுட்டு விழுத்த வேண்டும். அதையும் ஒரு கொஞ்ச நேரத்திற்குள் விழுத்தினால்தான் வெற்றி” என்று என் நண்பர்கள் விளங்கப்படுத்தினார்கள். இதைக் கேட்டதும், இதில் உள்ள துப்பாக்கிகளையும் கத்திகளையும் பார்த்ததும் எனக்கும் இந்த விளையாட்டை வாங்க வேண்டும் என்று ஆசை வந்தது.
நான் வீட்டுக்குப் போய் ”முப்பது வெள்ளிகள் தர முடியுமா” என்று அம்மாவிடம் கேட்டேன். ”முப்பது வெள்ளிகள் ஏன் வேண்டும்” என்று அம்மா கேட்டார். கணினி விளையாடினால் நான் அதையே திருப்பி திருப்பி விளையாடி படிப்பில் கவனம் செலுத்த மாட்டேன் என்றதால் அம்மா என்னை கணினி விளையாட்டு வாங்க விடமாட்டா என்று எனக்கு ஏற்கெனவே தெரியும். அதனால் நான் பதட்டப்பட்டு அது புத்தகம் வாங்குவதற்காக என்று அம்மாவிடம் பொய் சொன்னேன். அம்மாவும் என்னை நம்பி “என் கைப்பையில் பணம் இருக்கிறது. அதை எடு” என்று கூறினார். அம்மா என்னை நம்பிப் பணம் தந்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் பணத்தை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் கடைக்குச் சென்றேன். போகும்போது பொய் சொன்னதை நினைத்துக் கொஞ்சம் வயிற்றுக்குள் ஏதோ செய்தது.
கடைக்குள் போனதும், அந்தக் கடை மிகப் பெரியதாக இருந்தது. கடை நிறைய கணனி விளையாட்டுக்கள் இருந்தன. உயிரோட்டமாகவும் நிறமயமாகவும் இருந்தது. எனக்குப் பிடித்த எல்லா விதமான விளையாட்டுகளும் இருந்தன. நான் ஆசைப்பட்ட, என் நண்பர்கள் விளையாடிய விளையாட்டை அந்த கடை முழுவதும் தேடினேன் . அப்போது கடைக்குள் என் அம்மா வந்தார். நான் பயத்தில் ஓடிப்போய் ரகசியமாக மறைந்தேன். அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் என் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்தில் அம்மா எதையோ வாங்கிக்கொண்டு போய்விட்டா.
நான் இறுதியாக தேடிவந்த விளையாட்டைக் கண்டேன். நான் சீக்கிரமாக அந்த விளையாட்டை வாங்கிக் கொண்டு ஓடினேன். நான் வீட்டுக்குத் திரும்பி வந்த உடனே அதை என் அறையில் ஒழித்து வைத்தேன். இதை என் அம்மாவிடம் காட்டினால் அதை எடுத்துவிடுவார் என்று எனக்குத் தெரியும்.
ஆனால் இதைச் செய்ததால் எனக்குக் குற்ற உணர்வு ஏற்பட்டது. என் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போல் உணர்ந்தேன். இருந்தாலும் நான் அந்த விளையாட்டை விடவில்லை.ஆனால் என்னுடைய அம்மாவின் சொல்லிற்கு எதிராக நடக்கிறேன் என்று எண்ணும் பொழுது பயமாகவும் பதட்டமாகவும் சோகமாகவும் இருந்தது. விளையாட்டை எவ்வளவு ஆசையாக வாங்கினாலும் அதை மகிழ்ச்சியாக விளையாட முடியவில்லை.
அதிலிருந்து படிப்பில் நான் கவனம் செலுத்தவில்லை. புள்ளிகள் குறைந்து விட்டது. ஆசிரியர் அம்மாவை அழைத்து வரும்படி சொன்னார்.
எனவே மிகுந்த பயத்துடனும் வேறு வழியில்லாமலும் என்னுடைய அம்மாவிடம் உண்மையைக் கூற வேண்டும் என்று முடிவு செய்தேன். சோகத்துடன் அவரிடம் முழு உண்மையையும் கூறினேன்.
அப்போது அம்மாவின் கண்களில் உள்ள ஏமாற்றத்தைக் கண்டு மிகவும் கவலைப்பட்டேன். நான் இப்போதாவது உண்மையைச் சொன்னேன் என்று அம்மா என்னை மன்னித்துவிட்டார். ஆனாலும் படிப்பைக் கவனிக்க வேண்டும் என்று சொன்னார். மீண்டும் நல்ல புள்ளிகள் எடுத்த பிறகு கொஞ்சமாக விளையாடலாம் என்று சொன்னர். இனி ஒருநாளும் நான் இந்த தவறைச் செய்ய மாட்டேன் என்றும் இனிப் பொய் கூற மாட்டேன் என்றும் அம்மாவிடம் நிச்சயமாகக் கூறினேன்.
சொன்னபடி நான் கவனமாகப் படித்தேன். அடுத்தமுறை நல்ல புள்ளிகள் எடுத்து அம்மாவைச் சந்தோஷப்படுத்தினேன்.
அம்மாவும் சந்தோஷமாக நான் வாங்கிய விளையாட்டைத் திருப்பித் தந்ததோடு அம்மா வாங்கிய ஒரு விளையாட்டையும் அளவாக விளையாட வேண்டும் என்று சொல்லி என் பிறந்தநாள் பரிசாகத் தந்தார்.
இனி நான் ஒருநாளுமே பொய் சொல்ல மாட்டேன் என்று முடிவுசெய்தேன்.