Arts

முதுமையை அரவணைப்போம் – சியாமளா சோமசுந்தரஐயர்

July 19, 2026 | சியாமளா சோமசுந்தரஐயர்

இளமைக்காலத்தில் சிறகடித்து பறந்த எண்ணங்களுடன் வாழ்ந்த நாம் இன்று முதுமையை அடைந்தவுடன் மனம் சோர்வது சகஜமாகிவிட்டது. இன்று இதைப் பலரிடமும் காண முடிகிறது.
குழந்தை வாலிபம் முதுமை இவை அனைத்துமே மனிதராகப் பிறந்த எமக்கு இறைவனால் வழங்கப்பட்ட பருவகாலங்கள் ஆகும். இளமையிலும் வாலிபப் பருவத்திலும் சிறகடித்துப் பறந்த எம் மனம் முதுமையில் சோர்வடையக் காரணமே நாம்தான். நோய் காரணமாகவும் வயது காரணமாகவும் உடல் சோர்வடையலாம். ஆனால் மனதை உறுதியாகவும் மகிழ்வாகவும் வைத்திருப்பது எமது பொறுப்பாகும்.
முதுமைக்காலத்தில் எம்மால் அதிக வேலைகள் செய்ய முடியாது. நமது அன்றாட வேலைகளை யார் உதவியும் இல்லாமல் நாமே செய்வது நமக்கு சிறந்த உடற்பயிற்சியாகவும் பொழுதுபோக்காகவும் அமைவது மட்டுமல்ல பெரிய மனத்திருப்தியையும் ஏற்படுத்துகின்றது.
என் மூத்த சகோதரி, பிறந்ததிலிருந்தே மிகவும் பலவீனமானவள். 78 வயதாகிவிட்டது. கண்பார்வை, சிறுநீரகம்,இதயம் சுவாசப்பை சமிப்பாட்டு உறுப்பு அனைத்துமே செயற்பாட்டைக் குறைத்து விட்டன. இதையெல்லாம் பற்றி அவள் கவலைப்படுவதே இல்லை. இருக்கும் காலம்வரை மகிழ்வாக வாழவேண்டும் என்பதே அவள் எண்ணம். சிறுவயதில் கற்ற தையல், பின்னல் வேலைகளில் ஈடுபடுதல், நண்பிகளுடன் பேசுதல், தொலைக்காட்சி பார்த்தல் இவையெல்லாம் அவள் பொழுதுபோக்கு. நோயையும் முதுமையையும் பாரமாக எண்ணாது எல்லாம் இறைவன் செயல் என தன் இஷ்ட தெய்வமான வைரவரை நம்பி வாழ்க்கையை இனிதே வாழ்கிறாள்.
மனம் போல் வாழ்க்கை என்றனர் முன்னோர். நாம் எல்லோருமே நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழப் பழக வேண்டும். இளமையில் நாம் பல துறைகளிலும் ஈடுபட்டிருக்கின்றோம். யாருக்கு எதில் ஈடுபாடு ஏற்படுகிறதோ அதை ஆர்வத்துடன் கற்றுக்கொள்கிறோம். அக்கலைகளே முதுமையில் நமக்கு சிறந்த பொழுதுபோக்காக அமைகின்றன. மனதுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது இன்பத்திற்கு அளவே இல்லை. இது நடைமுறையில் நான் அறிந்த உண்மை.
காலம்செல்ல மேலும் முதுமையில் உடல் நலிவடையும் போது, எம்மை நாமே பார்த்துக்கொள்ள இயலாதபோது, எம்மைச் சரியான முறையில் பராமரிக்கும் இடமாக முதியோர் இல்லங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒன்றைத் தெரிவு செய்து நமது மீதிக் காலத்தை ஆனந்தமாகக் கழிக்க வேண்டும். எமது வாழ்க்கையைத் தீர்மானிப்பது நாமே.
என் நண்பி தொன்னூற்றி இரண்டு வயதில் ஒரு இல்லத்தில் வாழ்கிறாள். நேரம் தவறாது சாப்பாடு, மருந்துகள் கிடைக்கிறது. நேரம் போவது தெரியாமல் நல்ல பொழுதுபோக்குகள், உடற்பயிற்சி , விளையாட்டுகள் என்று அனைத்தையும் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறாள். பிடித்த சில சாப்பாடுகளை மகள் அடிக்கடி செய்துகொண்டுபோய்க் கொடுக்கிறார். யமன் வரும்போது ஆறுதலாக வரட்டும் என்று நிம்மதியாக வாழ்கிறாள்.
முதியோர் இல்லங்களில் எம் வயதொத்தவர்களுடன் வாழும் வாழ்க்கை நமக்கு மகிழ்வைத் தரும். நேரம் தவறாது எமக்குரிய மருந்து உணவு பொழுதுபோக்குகள் என நமக்கு கிடைக்கும். நம்மைப் போன்ற பலருடனும் உரையாடும் போது நமக்கு நேரம் செல்வதே தெரியாது.
இதைவிடுத்து பிள்ளைகள் எம்மைப் பராமரிக்கவில்லையே என ஆதங்கப்படுவது மூடத்தனம் என்றே எனக்குத் தோன்றுகிறது. நான்தானே உன்னை பெற்று வளர்த்தேன். என் முதுமைக் காலத்தில் நீதானே என்னைப் பார்க்க வேண்டும் என எதிர்பார்ப்பதும் மடைமையே. இது எழுதப்பட்ட சட்டம் அல்லவே.
இதுபோல ஒருசில பிள்ளைகளும் பெற்றோரை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவது கொடிய பாவம் என கருதுகிறார்கள். இது தவறான கருத்தாகும். பெற்றோர் உடல் நலிவு பெற்று தம்மைத் தாமே கவனிக்க இயலாத நிலை வந்தபோதும் தமது கொள்கையை விட்டுக் கொடுக்காமல் இருந்தால் அதுவே பாவமாக அமைகிறது. தனிமையில் வாழும் வாழ்வை விடவும், பிள்ளைகளில் தங்கி வாழும் நிலையைவிடவும் இல்லங்களில் வாழ்வது நிம்மதியையும் மகிழ்வையுமே தரும்.
குழந்தைப் பருவத்தில் நாம் பிள்ளைகளை டேக் கேர் சென்று விட்டோம் அல்லவா. குழந்தைகள் தம் வயதினரோடு சேர்ந்து பழக வேண்டும், தம் வேலைகளை கற்றுக் கொள்ள வேண்டும், சந்தோஷமாகப் பொழுதைப் போக்க வேண்டும் என்னும் காரணங்களுக்காகத்தானே சேர்க்கிறோம். அவர்களும் ஒருங்கிணைந்து வாழ்கிறார்கள்தானே. இது எல்லாமே அன்பு அக்கறையின் நிமித்தமே செய்யப்படுகின்றது. இதுபோலத்தான் முதியோர் இல்லங்களும் . அவர்களை வசதியாக பாதுகாப்பாக வாழ வைப்பதே நோக்கமாகும்.
முதுமை எப்போதும் இனிமையே ஆகும். முதியோரின் மனதில் சுமைகள் இல்லை. எமக்கு பொறுப்புகள் இல்லை. நேரக்கட்டுப்பாடுகள் இல்லை. வானில் சிறகடித்துப் பறக்கும் பறவைகள் போல மனதை இலேசாக வைத்திருக்க முடியும். இவ்வாறிருந்தால் முதுமை வரமாக அமையும்.நாம் வாழும் காலத்தை என்றும் மகிழ்வுடன் வாழ்வோம்.

சியாமளா சோமசுந்தரஐயர்


0 பார்வைகள்

About the Author

சியாமளா சோமசுந்தரஐயர்

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்