
LAP 1
சீட் மீண்டும் நழுவியது.
ஏதோ சரியில்லை. உடம்பும் மூளையும் சைக்கிள் ஓடும்போது ஒருநிலைக்கு வரும். ஆனால் இன்றைக்குச் சைக்கிள் ஓடத் தொடங்கியதிலிருந்தே ஏதோ ஒரு பிரச்சனை. உடல் எடை சைக்கிளின் திசையை மாற்றியது. கால்களால் தொடர்ந்து அதே பிடிப்பைக் கொடுக்க முடியாமல் போனது. நன்கு உணரமுடிந்தது. ஆனால் என்ன பிழை என்றுதான் தெரியாது.
“மீண்டுமா” என்று எரிச்சலுடன் சைக்கிளை ஓரம் கட்டினேன். கால் ஊகித்ததை விடவும் பலமாகச் சாலையோரமான சரளைக் கற்களில் மோதியது. மூளையில் கொதித்துக்கொண்டிருந்த எரிச்சல் கால் விரலின் நோவிற்குள் பாய்ந்தது. அதே வேகத்தில் கெட்டவார்த்தைகளும் உதயமானது.
217km சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் 20km தூரம்தான் கடந்திருக்கிறேன். அதற்குள் இரண்டு முறை சைக்கிளை நிறுத்தியாச்சு. இப்போதைக்கு என் குழுவினர் என்னைவிட்டு வெகுதூரம் சென்றிருப்பார்கள். ஒவ்வொரு முறை நிறுத்தும் போதும் பந்தயம் என்னை விட்டு நழுவி செல்லுது. சீட் clampஐ இறுக்கினேன். இரண்டு முறை சரிபார்த்தேன். வண்டியில் ஏறி ஓட்டத் தொடங்கினேன்.
5 km தூரம் கடந்ததும் மீண்டும் சீட் சரிந்தது. இந்த முறை எந்த கெட்டவார்த்தையும் வரவில்லை. அதில் எந்தப் பயனும் இல்லை. சைக்கிளை உற்றுப் பார்த்தேன். சாலையை உற்றுப் பார்த்தேன். போட்டி முடிவதற்குள் இன்னும் எத்தனை முறை இதைச் செய்ய வேண்டியிருக்கும்? இந்த வேகத்தில் போனால் எப்பிடியோ 7 மணித்தியாலத்தில் முடிக்கமுடியாது. அப்ப ஏன் இவ்வளவு மெனக்கெடவேனும்? அப்போது எனக்குப் பின்னால் ஒரு சைக்கிள், மணிச் சத்தத்தோடு வந்து நின்றது.
“சீட்போஸ்டா?” என்ற குரல் கேட்க நிமிர்ந்து பார்த்தேன். இன்னொரு வெள்ளைக்கார சைக்கிள் ஓட்டுநர்.
நான் தலையசைத்தேன்.
“என்ன சீட் நிற்கவில்லையா?” என்றபடி தன் பையிலிருந்து ஒரு multi-toolஐ எடுத்துக் கொண்டு, என் சைக்கிள் அருகில் வந்து நின்றார்.
நாங்கள் இருவரும் வார்த்தைகளை வீணாக்கவில்லை. நான் நகர்ந்து வழிவிட்டேன். அவர் சைக்கிள் clampஐ தளர்த்தி, தன் சட்டைப்பையிலிருந்து ஒரு துணியை எடுத்து எல்லாவற்றையும் துடைத்தார். அவர் சரி செய்யவதை பார்க்கவே விஷயம் தெரிந்த ஆள் என்று தோன்றியது. அவர் மீண்டும் சரிபார்த்து சமநிலையில் வைத்து clampஐ இறுக்கினார்.
“இப்போது ஏறிப் பாருங்கள்…”
நான் ஒரு காலைத் தூக்கிப் போட்டேன். அமர்ந்தேன். அழுத்தினேன். எதுவும் அசையவில்லை. அவர் ஒருமுறை தலையசைத்தார். “சரியாகத்தான் இருக்கும்” என்று சொல்லிக்கொண்டே தன் சைக்கிளில் ஏறி எந்த நன்றியும் வாங்காமல் பறக்கத்தொடங்கினர். சாலையில் அவர் மறைந்து போவதைப் பார்த்தவாறே சைக்கிளை மிதிக்கத் தொடங்கினேன்.
அன்று முதல் முறையாகச் சைக்கிள் இயல்பாக இருந்தது. எனக்கு முன்னால் சாலை விரிந்து இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஒருவரும் இல்லை. என் குழுவினர் தூரமாகப் போய்விட்டனர். ஏற்கெனவே 30 km பின்தங்கிவிட்டேன். அந்த உணர்வு பரிச்சயமானதாக இருந்தது. மிகவும் பரிச்சயமானதாக. நான் திட்டமிடாத ஒன்றைச் சமாளித்துக்கொண்டு நிற்க, வாழ்க்கை என்னைவிட்டு எவ்வளவோ முன்னே நகர்ந்துவிட்டது. ஆனால் நான் இன்னும் ஆசுவாசமா போய்க்கொண்டு இருக்கிறேன். நாளடைவில் அந்தத் தொய்வே பழக்கமாய்விட்டது. என்னோடு தொடங்கியவர்கள் எல்லாம் எங்கோ போய் விட்டார்கள், நான் இன்னும் இங்கேயே நிற்கிறேன். விட்டுச் சென்றவர்களைத் துரத்திப் பிடிப்பதில் என்ன இருக்கு? இல்லை பிடிக்கத்தான் முடியுமா? பேசாமல் இந்தச் சைக்கிள் பிரச்சனையில் பழியைப் போட்டுவிட்டு இத்தோட இந்தப் போட்டியை முடித்துவிடலாம். யாரும் ஒன்றும் கேட்க மாட்டார்கள். நானும் தோற்றதாக இருக்காது. அதுதான் சரியாக இருக்கும்.
ஒரு பெரும் மூச்சுடன் என் பாரத்தை முழுமையாகச் சைக்கிள் சீட்ல் போட்டேன். சீட் சரியவில்லை, பதிலுக்கு அது என்னைக் குத்தியது.
முன்னர் இழந்த ஒவ்வொரு நிமிடமும் சைக்கிளுக்குச் சொந்தமாக இருந்தது. சீட் பிரச்சனை சரிசெய்யப்பட்டுவிட்டதால் அவை இப்போது எனக்குச் சொந்தமானது. இப்படி யோசித்து, நான் யோசித்தது சரி என்று மனதை நம்பவைத்து, நல்லா தொடங்கிய வாழ்க்கையின் நடுவில் வந்த ஒரு தொய்வையே பழக்கமாகி 50 வருடங்களைக் கடத்திவிட்டேன். அது வேண்டாம் என்றுதான் சைக்கிள் ஓடத் தொடங்கினேன். அங்கேயும் வந்து இப்படியா யோசிப்பேன்? சைக்கிளில் ஒரு பிழையும் இல்லை, கண்ணுக்கெட்டிய தூரம் பாதை தெளிவாக இருக்கிறது, நான் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான், இந்தச் சைக்கிளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக ஓட்டவேண்டும். வெறும் முயற்சி மட்டுமே.
அப்போது உண்மையாகவே bum நொந்தது. இந்தச் சின்ன சீட்டில் இந்த பெரிய bumஐ எவ்வளவு நேரம்தான் வைத்திருக்க முடியும்? சீட்டிலிருந்து எழுந்து மிதிக்கத் தொடங்கினேன். வேகமா மிதித்தேன், மிக வேகமாக மிதித்தேன். அந்த மூலை வரும் வரையில், சைக்கிளும் பாதையும் மட்டுமே மூளையில் இருந்தது. அந்த மூலையில் நான் முந்தப் போகும் முதல் சைக்கிள் ஓட்டுநர் கண்ணில்பட்டார். உற்சாகத்தோடு மிதித்தேன். கடக்கும்போதே, அவர் எனக்கு உதவி செய்த நபர் எனத் தெரிந்து. என்னிடம் இருந்து வாங்காமல் சென்ற நன்றியே கூறிய படியே அவரை தாண்டிச் சென்றேன். கடன் சுமை நீங்கியதால் மிதிக்க இலகுவாக இருந்தது, வேகமா மிதித்தேன். கண்ணில்படும் ஓட்டுநரை எல்லாம் இரை தேடும் விலங்கு போல விரட்டிப் பிடித்தேன். இதை ஒரு விளையாட்டாக மாற்றி துரத்துவதற்குச் சைக்கிள் ஓட்டுநர் இல்லாதபோது, கங்காருக்களைத் துரத்தினேன்.

யூக்கலிப்டஸ் மரங்களும், சாலையோரப் புதர்களும், அதிலிருந்து திடீரெனத் தோன்றிய கங்காருக்களும் நான் ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன் என ஞாபகப்படுத்தின. என் வாழ்நாளில் தாய் நாட்டில் வாழ்ந்ததை விட அதிகக் காலத்தை ஆஸ்திரேலியாவிலேயே கழித்திருந்தேன். இருப்பினும் ஒவ்வொரு முறை கங்காரு கண்ணில்படும் போதும் ஒருவிதமான மகிழ்ச்சி. என் மகள் இந்த இடத்தில் இருந்திருந்தால், அப்பா நீங்கள் மட்டும் இல்ல பெரும்பாலான ஆண்களுக்கு மகிழ்ச்சி, சோகம், கோபம் இதைத் தவிர அவர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வார்த்தைகள் தெரியாது, என்று வகுப்பு எடுத்திருப்பா. இங்கே பிறந்த பிள்ளைகள் வேற எப்படி கதைப்பினம். அது எல்லாம் அவ uni போகும் மட்டுந்தான். இப்ப அப்படி வகுப்பு எடுக்கக் கூடி நேரம் இல்லை. நேரம் இல்லாமலும் இல்ல. பின் ஏன் இந்த இடைவெளி? எங்களுக்குள்ள கதைக்க ஒரு பொதுவான விஷயமும் இல்லையா?
சைக்கிள் ஓட்டுதலில் உள்ள விசித்திரம் என்னவென்றால், சாலைகள் மாறும், நிலக்காட்சிகள் மாறும், ஆனாலும், இன்னும் நூறு கிலோமீட்டர்கள் சென்றால் விடை கிடைக்கும் என்று நம்பிய கேள்விகள் மட்டும் இன்னும் அங்கேயே இருக்கும். எந்தக் கேள்விகளிலிருந்து தப்பி ஓட முயன்றேனோ, அவற்றோடு தனிமையில் விட்டுவிடும். கேள்விகள் மூளையை குடைய, வலி காலை குடைந்தது. ஆனாலும், தூரத்தில் எதோ பழுப்பு நிறமாகத் தெரியும் வரை நான் எதையும் துரத்துவதை நிறுத்தவில்லை. சிறிது அருகில் செல்லத் தெரிந்தது வெள்ளையர்கள் ஆதிக்கம் செலுத்திய சைக்கிள் போட்டியில் பரிச்சயமான என் குழுவினரில் ஒருவர். அவரை கண்டதும் ஒரு சந்தோசம். என் குழுவினரைப் பிடித்ததால் அல்ல, நான் விட்டதைப் பிடித்ததால் வந்த பெருமிதம்.
LAP 2
எந்தக் குழுவிலும் எப்படியாவது ஒரு நபர் கடைசியாக வருவார். அவரும் அப்படித்தான். மனிதர்களுக்கான உரையாடல் முக்கியமே தவிர, என்ன உரையாடுகிறோம் என்பதல்ல. பேச்சுத்துணைக்கு ஒருத்தர் கிடைத்தார் என்று ஏதேதோ பேசிக்கொண்டே முதல் தரிப்பிடத்தை அடைந்தோம்.
எங்களைக் கண்டதும், இளைப்பாறிய நண்பர் குழு “Good work”, “Well done” என ஆர்ப்பரித்தது. நான் drinks, உணவு , toilet என்று எல்லாவற்றையும் கெதியாக முடித்துவிட்டு அவர்களின் அரட்டையிலும் இனைய முடிந்தது.
முதலில் ஒருவர் தொடங்கினர், “ஓம்… இவர் எப்பிடியும் வந்துவிடுவார் என்று நாங்கள் நினைச்சம், ஆனால் உங்களை எதிர்ப்பாக்கவே இல்லை”. மற்றவர்களும் ஆமோதிக்கும் விதமாகத் தலையை அசைத்தார்கள்.
“நீங்கள் முடிஞ்சு என்று நினைச்சம்”
இப்படி எல்லாப் பக்கமும் இருந்து வந்த கேள்விகளுக்கும், நடந்தது என்ன என இரண்டாவது முறையாக விளக்கத் தொடங்கினேன். “ஓட்டினேன், ஓட்டினேன், ஓட்டிக்கொண்டே இருந்தேன், அதை எப்படிச் சுவாரசியமாகச் சொல்ல முடியும்?”
“உனக்கு இடையில் எங்கயோ பேய் பிடித்திருக்கு, அதால் உனக்கு சைக்கிள் மட்டும் தான் ஓட்டமுடியும், அதுகுப் பதில் கதை குறைந்திட்டுது” என்று சொல்லிச் சிரித்தார். “ஓம்.. வழக்கமா காதில் இரத்தம் வருமட்டும் விடாமல் motivational talk குடுப்பான் ஆனால் இந்தப் பேய் பிடிச்சதில் அதுவும் போயிட்டுது” என்றார் மற்றொருவர். இப்படியே கேலியும் சிரிப்புமாக மீண்டும் ஓடத் தொடங்கினோம்.
இதுதான் அதிகச் செங்குத்தான மலைகள் கொண்ட பந்தயத்தின் பிரிவு. மிகக்கடினம் எனத் தெரியும். எனது குழுவில் நான் தான் மலை ஏற அதிகம் சிரமப்படுவேன். அதனால் வழி நெடிகிள் வாயில் போட்டுக் கொள்ளலாம் என்று, அதிக இனிப்பு lollyகளை என்னுடன் எடுத்துக்கொண்டேன். தொடங்கிய 30 நிமிடத்திலேயே சிரிப்பு குறைந்தது இன்னும் 15 நிமிடங்களில் மீதம் இருந்த கதையும் குறைந்தது.
மணி 11 இருக்கும் வானம் மேகம் ஏதும் இன்றி நீலத் திரை விரித்த மாதிரி இருந்தது. கண் முன்பாகப் பாதை உயர்ந்து கொண்டு சென்று அந்த நீலத் திரையை முட்டியது. குழுவினரின் பேச்சு என் காதில் விழுந்தது ஆனால் கவனம் முழுதும் எப்பிடியாவது அந்த நீலத் திரையை முந்தி போய் பிடித்திட வேண்டும் என்று தோன்றியது. இப்போதே வேகத்தை அதிகரித்தால் உடனே சோர்வடைந்து போய்விடுவேன். முதல் ஏற்றத்தில் ஆறுதலாய் போவோம். அந்தச் சரிவு என் திட்டங்களைப் பற்றி எந்த கவலையும் படவில்லை. கால்களில் அழுத்தம் ஏறத் தொடங்குகிறது. அது வலியல்ல, வலி தொடங்கப்போவதற்கான எச்சரிக்கை. முடிந்த அளவு அமர்ந்தே மிதிக்க முயன்றேன். ஆனால் அந்த ஏற்றதிடம் தோற்றுப்போனேன், என்னை எழுந்து நிற்கச்செய்தது. சுவாசம் ஆழமானது, சத்தம் சந்ததி இல்லாத அந்தச் சாலையில் என் மூச்சு, சத்தமாகக் கேட்டது. முதலில் பின்னணி இரைச்சலாக இருந்த மூச்சு இப்போது முன்னணியில் வந்துநின்றது.
நிமிர்ந்து சாலையைப் பார்த்தால் இன்னும் நீலத் திரை தூரமாகவே இருந்தது. சந்தேகம் நுழையத் தொடங்கியது. சீ… இந்தச் சந்தேகத்தை மட்டும் உள்ளே விடக்கூடாது. முழு ஏற்றத்தையும் ஓட்ட முடியாது. பகுதி பகுதியாகப் பிரித்து ஓட்டுவம்.
சாலையில் தெரிந்த விரிசல், நிழல் எனச் சிறிய இலக்குகள் ஒவ்வொன்றையும் மாறி மாறி கடந்தேன்.
சூரியன் நடு வானில் இருந்ததால் நீண்ட நேரம் நான் தேடும் அந்த நிழலைக் காணவில்லை. கால்கள் எரிகின்றன. அந்த ஆழமாக, பரவும் வெப்பம் கெண்டைகால்தசைகளில் குவிகிறது. மூச்சு, மற்ற எல்லாவற்றையும் மூழ்கடிக்கும் அளவுக்குச் சத்தமானது. நுரையீரல்கள் காற்றுக்காக ஏங்கின. பலர் என்னைக் கடந்து சென்றனர். துரத்திப் பிடிக்கவேண்டும் என்ற எந்த அகங்காரமும் பற்றிக்கொள்ளவில்லை. கண்கள் நிழலைத்தேட, கால்கள் பெட்டல்களில் அழுத்த, உள்ளிழுத்து வெளியேற்றும் காற்றின் சத்தம் இசையமைக்க என் உலகம் அதற்குள் சுருங்கியது. உயிரைத் தவிர வேறு ஏதும் என்னிடம் இல்லாத அளவுக்குக் கடந்த ஒரு மணி நேரமாக என்னிடமிருந்து எல்லாவற்றையும் உருவியது அந்த மலை. அந்தத் தருணத்தில் அவள் முகம் என் கண் முன் ஒருகணம் வந்து சென்றது.
நான் பெட்டல்களை மிதிப்பதை நிறுத்தினேன். ஆனாலும், சைக்கிள் முன்னோக்கிப் பாய்ந்தது. என்னிடமிருந்து எல்லாவற்றையும் உருவிய அந்த மலை, திடீரென்று எதையோ திருப்பிக் கொடுத்தது. அந்த மலையே காதலியாக மாறி புவியீர்ப்பு விசையால் என்னை இழுத்தது. மென்மையாக அல்ல, வேகமாக. இன்னும் வேகமாக. சில நிமிடங்களுக்கு நான் சாலையுடன் போராடவில்லை. காற்று என் காதுகளைக் கடந்து சீறிப் பாய்ந்து, ஒரு தொடர் இரைச்சலாக மாறியது. சாலை ஓர மரங்கள் கண்முன் மங்கின. காய்ந்த புல்வெளிகள் பச்சை மற்றும் தங்க நிற நீரோடை போலக் கடந்து சென்றன. சைக்கிள் என் உடலின் ஒரு நீட்சியானது. கைப்பிடியில் ஒரு மென்மையான அழுத்தம். பார்வை வளைவின் வழியே பாதை திரும்பியது. நான் அதனுள் ஒன்றிப் போனேன். என்னைத் தொலைத்ததில் வந்த மகிழ்ச்சி. மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில், இழந்த உறவுகள், தவறவிட்ட வாய்ப்புகள், கைவிடப்பட்ட இலட்சியங்கள், நிறைவேறாத கனவுகள் எதுவுமே ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அந்தச்சாலை வளைவுகள் என்னைப் பற்றியிழுத்து வந்து பள்ளத்தாக்கில் விட்டது. மீண்டும் பூமிக்கு வந்தது போல இருந்தது. மீண்டும் சுவாசிக்கத் தொடங்கினேன், மிதிக்கவும்தான். அடுத்த ஏற்றம் தொலைவில் தெரிந்தது.
LAP 3
மலை ஏற்ற இறக்கங்களில் சிறு பிள்ளைகள் போல விளையாடிக் களைத்து, ஓய்வெடுத்து, மீண்டும் மிதிக்கத் தொடங்கினேன்.
யூக்கலிப்டஸ் மரங்களின் அடர்த்தி குறைந்தன. புதர் நிலம் மெதுவாக வழிவிட்டது. காய்ந்த மண்ணின் வாசனையைக் காற்றில் மிதந்து வந்த உப்பின் வாசனை மாற்றியது. கடல் தோன்றியது, அடிவானம் வரை பரந்து விரிந்திருந்தது. வானமும் கடலும் ஒரே நீல நிறத்தில் இருந்ததால் எது கடல் எது வானம் என்றே தெரியவில்லை. அதை இரசிப்பதற்காகவே சாலையின் ஓரத்தில் ஓட்டிக்கொண்டிருந்தேன். குனிந்து பார்த்தால் வெண் அலைகள் கருமையான பாறைகளின் மீது மடிந்து, பின்னர் நீண்ட நுரைகளாகக் கரைந்தன. மூச்சு முட்டியது.
சில கிலோமீட்டர்கள் கழித்து, இந்த அழகையும் இரசிப்பதை நிறுத்திவிடுவேன் என்று அப்போது தெரியாது. அழகு மறைந்துவிடவில்லை. நான் அதைக் கவனிப்பதை நிறுத்திவிட்டேன். கடல், பாறைகள் எல்லாம் இருந்த இடத்திலேயே இருந்தன. அலைகளும் நுரைகளும் அதேபோல வந்து மறைந்தன. ஆனால், நேரம் செல்லச்செல்ல, எந்த அழகும் பின்னணி இசையாகும். சைக்கிள் பெட்டல்களின் தாளமும், சுவாசத்தின் ஓசையும் முன்னணிக்கு வரும். கண்கள், முன்னால் இருந்த சக்கரத்தின் மீது திரும்பின. ஒரு காலத்தில் பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு, கடினமாக உழைத்து அடைந்த பதவி, ஆசைப்பட்டுச் செய்துகொண்ட கல்யாணம் இதில் எதுவும் தன் அழகை இழக்கவில்லை. எனக்குத்தான் பழகிவிட்டன, அவ்வளவே.
சாலை சமதரையாக, கடலோரமாகத் தொடர்ந்தது. இனி வெல்ல ஏற்றங்களோ, சரணடைய இறக்கங்களோ இல்லை. அடிவானத்தில் மறையும் நீண்ட சாலைகள் மட்டுமே. உரையாடல்கள் சுருங்கின. சில நேரங்களில் பத்து நிமிடங்களுக்கு யாரும் பேச மாட்டார்கள், ஏனென்றால் பேச ஒன்றும் இல்லை. பெட்டல். பெட்டல். பெட்டல். இதைத் தவிர மூளையில் வேறேதும் இல்லை. ஏதோ ஒரு வெறுமை, மோசமாக இல்லை. அதேநேரம் பரபரப்பாகவும் இல்லை. வெறுமனே இருந்தது.
முதலில் seat பிரச்சனை அதைச் சரி செய்து விட்டதைப் பிடித்ததில் போய்விட்டு. பிறகு மலை ஏற்றம் உடலை வருத்த வந்த எரிவைத் தணிப்பதில் போய்விட்டு. அந்த வலிகளுக்குப் பெயர் வைக்கமுடிந்தது. இப்ப வலிக்கிறதற்கு எந்தப் பெயரும் வைக்கமுடியவில்லை. இருக்கிறதா இல்லையா என்றே விளங்காத வலிக்கு எப்படிப் பெயர் வைக்கமுடியும்? எந்த மாற்றமும் இல்லாத உத்தியோகம், குடும்ப பராமரிப்பில் கரைந்து போகும் மனைவி, மெதுவாகக் காணாமல் போகும் நண்பர்கள், வயதாகும் பெற்றோர்கள், வளரும் பிள்ளைகள். கனவுகள் நிஜமாக மாற, அடையப் புதிய கனவுகள் இல்லாததால், வாழ்கை சுவாரசியத்தை இழக்கிறது. சலிப்புத் தட்டுகிறது.
வாழ்க்கையின் கஷ்டமான விஷயங்கள் நாம் தேர்ந்தெடுப்பவையாக இருப்பது அரிது. அவை எங்களைக் கேட்காமலேயே வந்து ஒட்டிக்கொள்ளும். அவை எவ்வளவு காலம் இருக்கும் என்றும் சொல்லாது, எவ்வளவு சகித்துக்கொண்டால் அதைக் கடந்து போகமுடியும் என்று கூடச் சொல்லாது. அதுவாக போகும் வரைக்கும். சைக்கிள் ஓட்ட இதனால் தான் பிடித்திருக்கிறது. எங்கே தொடங்கும், எங்கே முடியும், எங்கே எவ்வளவு கஷ்டப்படவேண்டும் என்றும் தெரியும். அதை நானே தேர்ந்தெடுக்கலாம். அது கஷ்டத்தை மறைத்துவிடவில்லை, பதிலாக அதற்கு எல்லைகளை வகுத்தது. வாழ்க்கையும் அப்படி இருந்திருக்கலாம்.
மலைகளைக் கடப்பதுதான் கடினமான பகுதியாக இருக்கும் என்று கற்பனை செய்திருந்தேன். அதற்காகத் தான் எங்கள் பயிற்சியும் இருந்தது. நீண்ட ஓட்டத்தின் இறுதியில்தான் தெரிந்தது, இதுதான் கடினமான பகுதி. பாதை தொடர்ந்து சென்றுகொண்டிருந்தது. ஒன்றும் சுவாரசியமாக நடக்கவில்லை. வெறும் வெறுமை மட்டுமே இருந்தது, அது மனதைச் சலிப்படையச் செய்தது. இவ்வளவு தூரம் நான் ஓட்டியதும் இல்லை, இந்த சலிப்பைச் சமாளிக்க எந்தப் பயிற்சியும் இல்லை.
இந்த யோசனையின் போக்கில் இலக்குக் கோடு கிட்டத்தட்ட முன்னறிவிப்பின்றித் தோன்றியது. பந்தயத்தை நிறைவு செய்தவர்கள் கைகளில் பானங்களுடன், களைப்பான புன்னகையுடன் கதைகளைப் பரிமாறிக்கொண்டு சுற்றி நின்றிருந்தனர். சில இளைஞர்கள் புல்வெளியில் முற்றிலும் களைத்துப்போய்ப் படுத்துக் கிடந்தனர். இருபது வருடங்களுக்கு முன்பு நான் இன்னும் சீக்கிரமாகவே இலக்கை அடைந்திருக்கலாம். ஐம்பது வயதில், இந்த இடத்தில் நின்றது வேகத்திற்கும் விடாமுயற்சிக்கும் உள்ள வித்தியாசத்தை நான் கற்றுக்கொண்டதால் என்ற கர்வம் ஒருகணம் வந்து போனது.
காலை முதல் எனக்கு முன்னாள் இருந்த மலைகள், நீண்ட நெடிய பாதை எல்லாம் பின்னால் நின்றன, அவளைத்தவிர.
தடுப்புகளுக்கு அப்பால் அமைதியாகக் காத்துக் கொண்டிருந்தாள். என்னை அறியாமலே புன்னகை முந்திக்கொண்டது.
அன்று அதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே அவள் முகம் என் நினைவுக்கு வந்தது. எளிதான சமதரைகளில் அல்ல. வேகமான இறக்கங்களிலும் அல்ல. செங்குத்தான ஏற்றத்தின் உச்சியில், அடுத்த மூச்சைத் தவிர வேறு எதைப் பற்றியும் சிந்திக்க இல்லாத நேரத்தில். ஏன்? அந்த மலை, என்னால் எதைச் சுமக்க முடியும் என்று சோதிக்கவில்லை. பதிலுக்கு என்னால் எதை விட்டுச் செல்ல முடியாது என்றுதான் சோதித்திருக்கிறது. நாள் முழுவதும் மலைகளைக் கடக்கத் தெரிந்த எனக்கு, இந்தத் தடுப்பைத் தாண்டுவதற்கான வழி எங்கிருக்கிறது என்று மட்டும் தெரியவில்லை.